யூனிலீவர் ஸ்ரீ லங்கா – விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இணைந்து நிலைபேறான தேயிலை உற்பத்தி/வளர்ச்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

யூனிலீவர் ஸ்ரீ லங்கா – விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இணைந்து நிலைபேறான தேயிலை உற்பத்தி/வளர்ச்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகியன நிலைபேறான தேயிலை உற்பத்திக்காக நாட்டின் முதலாவது தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை உருவாக்க, அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் (MoU) மூலம் இணைந்துள்ளன. முதன் முறையாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமானது, இலங்கை தேயிலைத் தொழில்துறையை மிகவும் நிலைபேறான மற்றும் நெறிமுறையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான இரு தரப்பினதும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மதிற்பிற்குரிய மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு.B.L.A.J தர்மகீர்த்தி, இலங்கை தேயிலை சபையின் தலைவர் மற்றும் அதன் பிரதிநிதிகள், தேயிலை துறையைச் சேர்ந்த மேலும் பல உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் ‘Ceytea’ தொழிற்சாலையானது, Global Pepsi-Lipton JV மற்றும் அதன் உலகப் புகழ்பெற்ற Iced Tea வர்ததக நாமங்களான ‘Lipton’ மற்றும் ‘Brisk’ ஆகியவற்றிற்கு கறுப்பு தேயிலைச் சாற்றை வழங்கும் மிகப் பாரிய விநியோகஸ்தராக விளங்குகின்றது. அகரபத்தனயில் உள்ள இந்த உற்பத்தித் தளம், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலையை வழங்குவதற்கான புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையின் மையமாக காணப்படுகின்றது.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் விநியோகச் சங்கிலிப் பணிப்பாளர் தமித் அபேரத்ன இது பற்றி தெரிவிக்கையில், “அகரபத்தனயில் உள்ள யூனிலீவர் Ceytea தொழிற்சாலையானது, Global Pepsi-Lipton JV நிறுவனத்திற்கு கறுப்பு தேயிலைச் சாற்றை அதிகளவில் வழங்கி வருகின்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுடனான இந்த ஒத்துழைப்பானது, யூனிலீவரின் காலநிலை சார்ந்த நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், நிலைபேறான விவசாய மூலப்பொருட்களின் ஆதாரத்தை ஊக்குவிப்பதற்கான எமது முயற்சிகளில் ஒரு குறிப்பிடும் படியாகும். இம்முயற்சியானது ‘Ceylon Tea’ இற்கு சாதகமான பலனை வழங்கும். காரணம், நிலைபேறான விவசாய உற்பத்தியே இன்று உலகளாவிய தேவையாக உள்ளது.” என்றார்.

இந்த கூட்டாண்மை தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு. B.L.A.J தர்மகீர்த்தி “இந்த அரச – தனியார் கூட்டுறவில் யூனிலீவர் ஸ்ரீ லங்காவுடன் இணைந்து கொள்வதில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெரு மகிழ்ச்சியடைகிறது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது இலங்கை தேயிலை தொழிற்சாலைகளின் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக அமைகிறது.” என்றார்.

உலகளாவிய ரீதியில் தேயிலை ஏற்றுமதியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளது. இந்த தரநிலை / கட்டமைப்பானது 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. மீளுருவாக்கம் மற்றும் காடழிப்பு அற்ற விவசாயத்தின் மூலம் சூழல் தாக்கத்தை குறைத்தல், தேயிலை தொழிற்துறையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நெறிமுறையான பணியிட நடைமுறைகள் மூலம் நியாயமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதை உறுதி செய்தல், இலங்கை தேயிலையின் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் வழங்குவதற்காக கடுமையான பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை முன்னெடுத்தல் ஆகியனவே அவையாகும்.

END