தொழில்முயற்சி மேம்பாட்டில் முதலீட்டுடன் கூடிய தொழில் வளம்மிக்க பொருளாதார மீட்சியை அதிகரிக்க இலங்கையில் தேசிய கொள்கை மன்றத்தை நடாத்தும் ILO

சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) ஆனது, இலங்கை மத்திய வங்கி, வடமாகாண ஆளுநர் அலுவலகம், இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் இலங்கையில் தனியார் துறை முதலீடுகளை பாரிய அளவில் உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான தேசிய கொள்கை மன்றத்தை (National Policy Symposium) அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. பிராந்திய ரீதியான மற்றும் துறைசார் விடயங்களை கவனத்தில் கொண்டு, இலங்கையில் நிறுவன மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான சாதகமான சூழலை உருவாக்குவதிலான சவால்கள், அது தொடர்பான தகவலறிவுகள் மற்றும் தலையீடுகளை இம்மன்றம் முன்னிலைப்படுத்தியது. இந்த மன்றமானது, Local Empowerment through Economic Development and Reconciliation (LEED+), தொழில்முனைவில் தெற்காசிய தலைமைத்துவம் (SALE) ஆகிய இரண்டு ILO முதன்மைத் திட்டங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க, “குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தொழில் முனைவு சார்ந்த மனப்பான்மையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த மன்றம் வலியுறுத்தியுள்ளது. தொழில்முனைவு பற்றிய எண்ணத்தை கடைசி முயற்சியாக தெரிவு செய்வதை விடுத்து, ஒரு விருப்பத்திற்குரிய தொழில் தெரிவாக மாற்றுவது நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதை இது அங்கீகரித்துள்ளது. பல்வேறுபட்ட தொழில்துறைகள் மற்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, நிறுவன மேம்பாட்டிற்கான சாதகமான சூழல் தொகுதியை உருவாக்குவதில், துறைசாரந்த மற்றும் பிராந்திய ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்றார்.

வட மாகாணத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை கண்டறிவதற்கான துறைசார் கலந்துரையாடல்களை மேற்கொள்ள இம்மன்றத்தினால் முடிந்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ILO LEED+ திட்டத்தின் இந்த முயற்சியானது, பிராந்தியத்தின் குறிப்பிட்ட தேவைகள் பற்றிய பெறுமதியான தகவலறிவுகளை வழங்கியதோடு, கொள்கை விவாதங்கள் மற்றும் பரிந்துரைகளை சீர்படுத்தவும் உதவியது. தொழில்முனைவோர் நட்பு சூழலை உருவாக்க, முக்கிய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப்பகிர்வு ஆகியவற்றை வளர்ப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியான ILO SALE திட்டத்தை, கூட்டு கொள்கை கருத்தரங்குகளாக இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் இணைந்து நடாத்தியது. இம்முயற்சியில் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் பற்றிய விவாதங்களும் இம்மன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தனது அறிமுக உரையில் கருத்து வெளியிடுகையில், “முன்னோக்கிச் செல்லும் பாதையானது, உரிய துறை சார்ந்த அமைச்சுகள், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC), இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் கைகளில் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த அனைத்து நிறுவனங்களும் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளன. உரிய பாதையை உருவாக்குவதன் மூலம், அனைவருக்கும் கெளரவமான மற்றும் பயனுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.” என்றார்.

வளர்ந்து வரும் வணிக தொடக்கங்களை ஆதரிப்பதிலும், வணிக மீளெழுச்சியை ஊக்குவிப்பதிலும் அரசாங்கம் மற்றும் துறை சார் வளர்ச்சிக்குரிய நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை உள்ளிட்ட ஏனைய சூழல் தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது இங்கு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. தேவையான ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்குவதன் மூலம், இந்த வணிக தொடக்கங்கள் வளர்ச்சியடைய உதவுவதோடு, இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சிக்கும் பங்களிப்பு வழங்க முடியும்.

இம்மன்றத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான ILO அலுவலகத்தின் பணிப்பாளர் சிம்ரின் சிங் இங்கு கருத்து வெளியிடுகையில், “பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான பாதைகளை இலங்கை ஆராய்ந்துவரும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த மன்றம் இடம்பெற்றுள்ளது. பிராந்திய மற்றும் மாகாண மட்டத்தில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் எடுத்துக்கொள்ளல் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் ஆகியன, அனைவரும் உள்ளீர்க்கப்பட்ட மீட்சியை நோக்கி நாடு நகர்வதற்கும், நாட்டை வேலைவாய்ப்பு நிறைந்ததாக மாற்றுவதற்கும் மிகவும் முக்கியமானதாகும். சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் கொள்கை விவாதங்களின் முக்கிய முடிவுகளைப் பகிர்வதற்கும், பிரயோக ரீதியாக மற்றும் தளத்தில் இடம்பெறும் தலையீடுகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் விரிவான ஈடுபாட்டின் மூலம் பெறப்பட்ட பெறுமதியான தகவலறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த மன்றம் ஒரு தளமாக செயற்பட்டது.” என்றார்.

இந்த மன்றம் பல்வேறு பங்குதாரர்களுடன் விரிவான ஈடுபாட்டின் மூலம் பெறப்பட்ட பெறுமதி வாய்ந்த தகவலறிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளமாகும் என்பதுடன் சாதகமான கொள்கை விளைவுகளை பாதிக்கும் வகையில் நடைமுறை மற்றும் நம்பிக்கைக்குரிய நிலத்தடி தீர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறது.

மன்றத்தில் அறியப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் நம்பகத்தன்மையானது, பல்வேறு பங்குதாரர்களின் ஆலோசனைகளிலிருந்து பெறப்பட்ட விரிவான ஆராய்ச்சி மற்றும் தகவலறிவுகளின் தொகுப்பின் மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பானது, முன்மொழியப்பட்ட தீர்வுகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேலும் மேம்படுத்துகிறது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதான பொருளாதார நிபுணரான ஷிரான் பெனாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில், “காலத்திற்கேற்ற இந்த தேசிய கொள்கை மன்றம் இலங்கையின் பொருளாதார மீட்சியின் பின்னணியில் மிகவும் அவசியமான தலையீடாக அமைகிறது. முதலீடுகள் மற்றும் தொழில்முனைவுகளை ஊக்குவிப்பதன் மூலம், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதையும், நிலைபேறான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்மன்றத்தின் முக்கிய செய்தியானது, தொழில்முனைவோர் கலாசாரத்தை வளர்த்தல், முதலீட்டு ஊக்குவிப்புக்கான சூழலை உருவாக்குதல், பிராந்திய மற்றும் தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சியை உந்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி உள்ளது.

LEED+ திட்டம் LEED+ ஆனது, ILO வின் அமைதி மற்றும் மீளெழுச்சிக்கான உலகளாவிய தொழில்வாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு, இது அவுஸ்திரேலிய அரசின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறை (DFAT), நோர்வே அரசாங்கம் ஆகியவற்றால் ஆதரவளிக்கப்படுகிறது. SALE திட்டமானது அமெரிக்காவின் வெளியுறவுத் துறையால் ஆதரவளிக்கப்படுகிறது. ILO ஆனது, ஐக்கிய நாடுகளின் தொழில் உலகத்திற்கான விசேட நிறுவனமாகும். இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை அமைப்பதோடு, தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், வேலைவாய்ப்பு, தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு தொடர்பான அழுத்தம் கொண்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, கொள்கை ரீதியான உரையாடலில் ஈடுபடுகிறது. ILO ஆனது, சமூக நீதியை முன்னேற்றமடையச் செய்தல் மற்றும் உலகளாவிய ரீதியில் கண்ணியமான வேலைகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கத்தை அடைய, அரசாங்கங்கள், தொழில் வழங்குனர், தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து நெருக்கமாக செயற்படுகிறது.