SLGJA: இலங்கையின்இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்தொழில்துறையின்உச்சஅமைப்பு
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உச்ச அமைப்பாகும். இது, இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம், இலங்கை நகை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை பட்டைதீட்டுனர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை நகை வர்த்தகர்கள் மற்றும் இரத்தினக்கல் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு, 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. SLGJA ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் புத்தாக்கம், நிலைபேறானதன்மை மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான உறுதிப்பாட்டை பெருமையுடன் கொண்டாடுகிறது.
இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை புத்தாக்கம் மற்றும் நிலைபேறானதன்மையின் மூலம் மேம்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட SLGJA ஆனது, எதிர்கால சந்ததியினருக்கான செழுமையான பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, உலகளாவிய அங்கீகாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெறிமுறையான நடைமுறைகள் மூலம் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை பிரச்சினைகளை தணித்தல், சந்தை அணுகலை எளிதாக்குதல், நிலைபேறான ஆதாரங்களை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி, உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் சமூகப் பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றிற்கான திறன்களை வளர்ப்பதே இச்சங்கத்தின் நோக்கமாகும்.
இச்சங்கம் தொடர்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட, SLGJA இன் செயற்பாடுகள்/COO உப தலைவர் பிராஸ் ஹமீட், “இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சங்கம் என்ற வகையில், SLGJA எப்பொழுதும் தனது தேவைகளை விட நாட்டின் தேவைகளையே முன்னிறுத்தி செயற்பட்டுள்ளது. இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறைக்கான குரல் எனும் வகையில் SLGJA அதன் உறுப்பினர்களை ஆதரிப்பதோடு, இத்தொழில்துறை எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் அரசாங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கிறது.” என்றார்.
அவரது கருத்தைத் தொடர்ந்து, SLGJA இன் நிர்வாகம் மற்றும் திட்டங்களின் தலைவர் ரொஷேன் வீரரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “பல வருடங்களாக உள்ளூர் மற்றும் உலகளாவிய மேடைகளில் SLGJA பாராட்டுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளது. இந்த விருதுகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துவது தொடர்பான இச்சங்கத்தின் அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றன. இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் நலனுக்காகச் செயற்படும் SLGJA ஆனது, அதன் அங்கத்தவர்களை மிக ஆர்வத்துடன் ஆதரிப்பதோடு, தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய அமைப்புகளிடம் முன்வைப்பதில் ஒரு வீரனாக செயற்படுகிறது.
SLGJA அதன் ஆரம்பத்திலிருந்தே, சுரங்கத் தொழிலாளர்கள் முதல் கைவினைஞர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், பட்டை தீட்டுபவர்கள், வெப்பம் வழங்கும் நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஒரு செல்வாக்குமிக்க குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், தொழிற்துறையின் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைப்பதற்கான கருவியாக உள்ளது. இந்த கூட்டுப் பலமானது, தொழில்துறைச் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளவும், அனைத்து பங்குதாரர்களினதும் நலனுக்கான மூலோபாய முயற்சிகளை முன்னெடுக்கவும் உதவுகிறது.
SLGJA ஆனது 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இரத்தினக்கல் பிரிவு, ஆபரணப் பிரிவு, பட்டைதீட்டும் பிரிவு, ஊக்குவிப்புப் பிரிவு ஆகியனவே அவையாகும். SLGJA ஆனது நாடு முழுவதும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் இணைக்கப்படும் போது, SLGJA இன் செயற்குழுவால் கடுமையான மற்றும் முழுமையான ஆராய்தல் செயன்முறை முன்னெடுக்கப்படுகிறது. SLGJA இன் முக்கிய கவனங்களில் ஒன்றாக, கொள்கை விடயங்கள், வரவு செலவு கணக்குகள் போன்றவற்றை அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பது ஆகிய விடயங்கள் உள்ளன. SLGJA ஆனது, Dubai Expo உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்வதற்கு ஊக்குவிக்கிறது.
1991 இல் ஆரம்பிக்கப்பட்ட FACETS Sri Lanka இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியானது, SLGJA நாட்காட்டியின் முக்கிய நிகழ்வாக சுமார் 3 தசாப்தங்களாக இருந்து வருகிறது. பல வருடங்களாக, FACETS கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SME) அவர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தவும் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் ஒரு முக்கிய தளத்தை வழங்கியுள்ளது. இந்த வருடாந்த நிகழ்வானது, இத்தொழில்துறையில் உள்ள வீரர்களுக்கு, ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதன் மூலம், ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது. FACETS 2024 கண்காட்சியானது, கொழும்பில் உள்ள பிரபலமான சினமன் கிராண்ட் ஹோட்டலில் 2024 ஜனவரி 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
SLGJA அதன் 20 வருட நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களுக்கான உச்ச அமைப்பாக தொடர்ந்தும் இருப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தொழிற்சங்கமானது அதன் வளமான பாரம்பரியத்தை தொடர்ச்சியாக பேணியவாறு, புத்தாக்கம், நிலைபேறானதன்மை மற்றும் தொழில்துறையில் உலகளாவிய அங்கீகாரத்தை தொடர்ந்தும் பேணும்.