Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace
Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace இந்து சமுத்திர கப்பல் பயணம் 2024) எனும் பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. 2024 பெப்ரவரி 13ஆம் திகதி Rainbow Warrior கப்பலில் இடம்பெற்ற இதன் ஆரம்ப விழாவானது, தெற்காசிய பிராந்தியத்தில் கூட்டு முயற்சியை வலியுறுத்தல், பொறுப்புக்கூறல், மீளெழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு எடுத்துக்காட்டான பயணத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பலின் வரவேற்பு விழாவானது, ஒன்றிணைவு மற்றும் ஒத்துழைப்பின் உற்சாகமான கொண்டாட்டமாக அமைந்திருந்தது. இலங்கையின் அழகிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வசீகரிக்கும் கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றன. இந்த விழாவில் முக்கிய விருந்தினர்கள், அதிகாரிகள், பிரபலங்கள், செல்வாக்குமிக்கவர்கள், சபை உறுப்பினர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பணிக்காக Greenpeace உடன் இணைந்துள்ள கூட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும் Greenpeace South Asia உறுப்பினருமான ஜெஹான் கனகரத்ன இங்கு கருத்து வெளியிடுகையில், “காலநிலை மாற்றத்தினால் இலங்கையில் எமது விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் சீர்குலைந்து சூழல் நெருக்கடியை நாம் அனுபவித்து வருகிறோம். தெற்காசியாவில் உயிர்ப் பல்வகைமை பெருக்கத்தின் முக்கிய இடம் எனும் வகையில், காலநிலை மாற்ற பாதிப்பில் செல்வாக்குச் செலுத்துவதில் எமது பங்கு குறைந்தபட்சமாக உள்ள போதிலும், நாம் சமனற்ற வகையில் பாதிக்கப்படுகிறோம். Greenpeace South Asia மற்றும் ஏனைய உள்ளூர் சூழல் இயக்கங்களுடன் இணைந்து, இலங்கையில் ஒரு தனியான காலநிலை மாற்ற அடித்தளத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபடுவது எமக்கு ஒரு இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.” என்றார்.
இங்கு பங்கேற்பாளர்கள், பிராந்தியத்தில் உள்ள விளிம்புநிலை மக்களைப் பாதிக்கும் சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிராந்திய ஒத்துழைப்பின் அவசரத் தேவையை வலியுறுத்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இந்த அமர்வானது, பங்கேற்பாளர்களிடையே நம்பிக்கையையும் உறுதியையும் ஏற்படுத்தியதோடு, சூழல் செயற்பாடுகள் தொடர்பான கூட்டான அக்கறையையும் ஏற்படுத்தியது.
Greenpeace South Asia/ இந்தியாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பினு ஜேக்கப் இது தொடர்பில் தெரிவிக்கையில், “உலகின் சூழல் தொடர்பான மிகவும் உணர்திறன் கொண்ட பிராந்தியங்களில் காணப்படும் 8 வெவ்வேறு நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியப் பிராந்தியத்தில் ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அது தவிர, இப்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஏழைகள் வசிக்கும் இரண்டாவது இடமாக காணப்படுவதாக, தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பல் பரிமாண வறுமை, இயற்கை வளங்கள் மற்றும் வானிலை நிலைமைகளில் தங்கியிருத்தல் ஆகியன, இந்த பிராந்தியத்தில் உள்ள மக்கள், குறிப்பாக காலநிலை நெருக்கடி காரணமான உறுதியற்ற தன்மையால் பாதிக்கப்படக்கூடிய சில காரணங்களாக காணப்படுகின்றன. உலக வங்கியின் அறிக்கையின்படி, 800 மில்லியனுக்கும் அதிகமான தெற்காசிய மக்கள் ‘future climate change hotspots’ (எதிர்கால காலநிலை மாற்ற முக்கிய புள்ளிகளில்) வாழ்கின்றனர், அதாவது இந்தப் பகுதிகள் வாழ முடியாதவையாக அமையவுள்ள பகுதிகளாகும்.” என்றார்.
இவ்விழாவில், இவ்வாறான சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, ஒரு திறமையான கலைஞர் ஒருவரின், மனதைக் கவரும் நிகழ்வும் இடம்பெற்றது. சூழலைப் பற்றிய சக்திவாய்ந்த செய்தியுடன் அது பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துரைக்கும் வகையில், கரையோரத்தில் வாழும் சமூகங்களின் வாழ்க்கை மற்றும் இப்பகுதியில் காலநிலை பாதிப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான புகைப்படக் கண்காட்சியை காண்பதற்கான வாய்ப்பும் இங்கு பார்வையாளர்களுக்கு கிடைத்தது.
Rainbow Warrior கப்பலின் ஒவ்வொரு தளங்களும், VR மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஆகியன, ஊடாடல் மிக்க இடங்களாக அமைந்திருந்ததோடு, அவை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில், உயர் அனுபவங்களை வழங்கின. இங்கு சிறுவர்களுக்கான ஒரு பிரத்தியேக வலயமும் அமைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த தலைமுறை சூழல் பொறுப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஈடுபாட்டுடன் கூடிய செயற்பாடுகளும் இங்கு உள்ளடக்கப்பட்டிருந்தன.
Greenpeace South Asia/ இந்தியாவின் பிரச்சாரகர், அம்ருதா SN இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “காநிலை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தும்போது, புவியில் உள்ள அனைவரும் அதன் பங்குதாரர்கள் என்பதை, தற்போது சில ஆண்டுகளாக நாம் அனைவரும் உணர ஆரம்பித்துள்ளோம். எம்மில் சிலர் ஏனையவர்களை விட காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள போதிலும், தெற்காசியப் பிராந்தியம் உள்ளிட்ட உலகளாவிய ரீதியிலான தென் பகுதியில் உள்ள மக்கள்தொகையில் பெரும்பாலானோர் அதன் தாக்கங்களின் பாரிய சுமையை சமமற்ற முறையில் தாங்கி வருகின்றனர். இன்று ஒவ்வொரு அரசாங்கமும், நிறுவனமும், தனிமனிதனும் இந்த செயற்பாட்டுக்கான பங்குதாரராகச் செயற்படுவது இன்றியமையாததாக காணப்படுகின்றது. ஏனெனில் இது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் தனிப்பட்ட கடமையாகும். தெற்காசியப் பிராந்திய மக்களாகிய நாம், புவிசார் அரசியலின் சிக்கலான தன்மையால் அதனை கணக்கெடுக்காமல் இருக்கின்றோம். ஆனால் ஒரு கூட்டுக் குரலாகப் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்வது மிகவும் முக்கியமானதாகும். Greenpeace South Asia ஆனது, தெற்காசிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குரல்களை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான தளத்தை உருவாக்கும் முயற்சியாகும். இங்கு எமது எண்ணிக்கைக்கு பலம் உள்ளது” என்றார்.
உள்ளூர் சமூகங்கள், இளைஞர் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், பங்குதாரர்கள், சமூக ஊடக செல்வாக்காளர்கள், ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருடனான ஈடுபாட்டின் மூலம், Greenpeace நிறுவனம் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதன் விரிவான நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடரவுள்ளது. அவர்கள், காலநிலை மாற்றம், மாசடைதல் மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தின் கண்ணோட்டத்தில் கடல்வாழ் உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதிலான கூட்டு முயற்சிகள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட உத்தேசித்துள்ளனர்.