இன்மை வென்றிட காத்திருக்கும் தைரியமான பெண்களுடன் ஒன்றிணைவோம்

கடந்த 25 வருடங்களில் இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், அதனுடன் இணைந்தவாறு புற்றுநோய் இறப்பு வீதமும் உயர்ந்து, பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக நாட்டில் புற்றுநோய் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, இதற்காக அரசாங்கம் கணிசமான தொகையை செலவிட்டும் வருகின்றது. புற்று நோய் தடுப்பு, அதனை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில், ​​இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான முயற்சிகள் தற்போது மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன. எவ்வாறாயினும், செலவிடப்படும் நிதி, உணர்வு ரீதியான பாதிப்பு, சமூக தாக்கங்கள் காரணமாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றான புற்றுநோயினால் பாதிப்புக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க, வைத்தியசாலை வசதிகள், சிகிச்சை நடைமுறைகள் போன்றவற்றிலான முன்னேற்றங்கள் அவசியமாகும். இவ்வாறு அதிகரித்து வரும் சுமையை குறைப்பதற்காக, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை போன்ற சிகிச்சை நடைமுறைகளை சீரான முறையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் இச்சேவைகளை கிராமங்களும் அடையும் வகையில் விரிவுபடுத்துதல் போன்றவையும் அவசியமான விடயங்களாகும்.

வருடாந்தம் சுமார் 30,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இறப்புகள் 17,000 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சுமார் 15,500 பெண்கள் புதிதாக இத்தொற்றுக்கு உள்ளாவதும், வருடாந்தம் அவர்களில் 8,000 பேர் மரணிப்பதும் பதிவாகி வருகின்றது. இந்நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளில், குறைந்தபட்சம் 80% ஆனோருக்கு தனியான அல்லது சிகிச்சை முறைகளுடன் இணைந்தவாறான கீமோதெரபி அவசியமாகின்றது. கீமோதெரபி சிகிச்சையின் மிகவும் கவலையான அம்சங்களில் ஒன்று, கூந்தல் இழப்பாகும். இது ஒரு பொதுவான பக்க விளைவு என அடையாளம் காணப்படுகிறது. இந்த மன அழுத்தத்தை விளைவிக்கும் பக்க விளைவானது, பல மாதங்களுக்கு சிகிச்சை பெற வேண்டிய பெண்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவமாக அமைகின்றது. பெண்களுக்கு கூந்தலானது, விலைமதிப்பற்ற ஒரு ஆபரணமாக கருப்படுவதோடு, ஒரு பெண்ணின் தனித்துவமான அழகின் பிரதிபலிப்பும் அதுவாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, தோற்றத்தில் ஏற்படும் மாற்றம், உளவியல் பாதிப்புகள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்வடைவது என்பது ஒரு சவாலானதாகக் காணப்படுகின்றது. முடி உதிர்தல் காரணமான கவலையானது, பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் வழக்கமாக கடைப்பிடித்து வரும் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்கச் செய்துள்ளன.

முடி உதிர்தல் காரணமான, உளவியல் ரீதியான மாற்றங்கள் தொடர்பில் கருதும்போது, ​​சமூக தொடர்பு, நடத்தை மாற்றங்கள், நிராகரிப்பான உணர்வு, தனிமையாக உணர்தல் போன்ற காரணங்களால் சுதந்திர உணர்வு மற்றும் அன்றாட வாழ்க்கையிலான நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. கூந்தல் உதிர்தலை அனுபவிக்கும் பெண்கள், ஏனையோர் அவர்களை அருவருப்பாக பார்க்கிறார்கள் எனும் மோசமான உணர்வுடன் இருப்பதன் காரணமாக, ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள் போன்ற செயல்பாடுகளைத் அவர்கள் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். இச்சூழ்நிலையை எதிர்கொள்ளும் பல பெண்கள், தாங்கள் பணியாற்றும் பணியிடங்களில் நபர்களுடன் பழகுதல் உள்ளிட்ட தங்கள் இயல்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதை கடினமாக கருதுகின்றனர் என்பது வெளிப்படையான உண்மையாகும். ​​முடி உதிர்தலால் பாதிக்கப்படுவது குறித்த நோயாளி மட்டுமல்லாது, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இப்பாதிப்புக்கு உள்ளாகின்றரனர். குழந்தைகளையும் இது பாதிக்கலாம், குறிப்பாக தனது தாய் அல்லது குடும்ப உறுப்பினரின் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அவர்கள் அச்சம் மற்றும் கவலை கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த முடி உதிர்தலானது, விவாகரத்து மற்றும் பிரிவடைதல் போன்ற திருமண பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது.

இக்குறிப்பிட்ட விடயம் தொடர்பான விளைவுகள் முழு சமூகத்திற்கும் வெளிப்படையான விடயமாக இருந்த போதிலும், இதற்கான ஒரு சாத்தியமான தீர்வு வெகு தொலைவிலேயே அமைந்துள்ளது. அனைத்து புற்றுநோய் நோயாளிகளும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சமூகத்தின் ஆதரவும் அக்கறையும் அவசியமாகும். ஆயினும், சமூகம் அவர்களை பரிதாபகரமான பார்வை மூலம் பார்க்காமல் அவர்களின் முன்னேற்றம் தொடர்பான தட்டிக் கொடுப்பையே வழங்க வேண்டும். ஒரு பெண் குறுகிய கூந்தலுடன் அவதானிக்கப்படும் நிலையில், மக்களின் பார்வை அந்நோயாளியைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. இவ்வாறு திடீரென மக்கள் காட்டும் முக பாவனை உள்ளிட்ட செயற்பாடுகள் நோயாளியின் மனதில் ஆழமாக பதிகின்றன. இது அவர்களுக்கு மன உளைச்சலுக்கு வழிவகுக்கிறது.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளின் போது, ஆசனங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் மூலம் இந்நோயாளிகளுக்கு உதவ வேண்டுமென்பதன் அவசியத்தை சமூகம் புரிந்துகொண்ட போதிலும், அவர்களுக்கு மிக அவசியமானது உணர்ச்சிபூர்வமான உதவிகளாகும். இவ்வாறு அவர்கள் உணர்வு ரீதியாக வீழ்ச்சியடைவதற்கான ஒரு முக்கிய காரணம், புற்றுநோய் தொடர்பான சமூக அவப்பெயருக்கு வழிவகுத்துள்ள, பொதுமக்களிடையேயான சுகாதார விடயங்கள் தொடர்பான போதிய தெளிவின்மையேயாகும். குறிப்பாக இது பெண்கள் தங்களுக்கு ஆறுதலளிக்கும் எல்லைகளிலிருந்து விலகிச் செல்ல காரணமாகின்றது. எனவே, இந்நோயாளிகளின் உணர்வுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும், அவர்கள் தைரியத்துடன் முன்னேறிக் கடந்து செல்வதற்குமான உணர்வையும் ஆதரவையும் ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். உங்கள் அன்புக்குரியவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும்போது, ​​அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, நோயாளியை தட்டிக் கொடுப்பதில் பெரும் பங்கு உள்ளது. அவர் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்து, மன அழுத்தங்களை சமாளிக்க நீங்கள் உதவியாக இருக்க வேண்டும். இவ்வன்புக்குரிய உள்ளங்களுடன் இணைந்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ முன்வருவோம்.