NAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei உடன் இணைந்து, கடந்த ஜூலை 16, வெள்ளிக்கிழமையன்று, தொழில் பயிற்சிக்கான NAITA-HUAWEI ICT Academy இனை திறந்துள்ளது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் – பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, NAITA நிறுவன தலைவர், தரங்க நலீன் கம்லத், Huawei Sri Lanka நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி, லியாங் யி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சியின் மூலம், களத்தில் பணியாற்றும் தொலைத்தொடர்பு பொறியியலாளர்கள் போன்றோர் கொண்டுள்ள கொள்கை அறிவு மற்றும் நடைமுறை அறிவுடன் கூடிய, வருடாந்தம் 300 இற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தொழிற் பயிற்சி மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இளைஞர்களுக்கு வன்பொருள் நிறுவல் தொடர்பான திறனை வழங்கும் NAITA நிறுவனத்திற்கும் Huawei நிறுவனத்திற்கும் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டது.
இதன் ஆரம்ப விழாவில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், “கல்வி என்பது நிறைவானதும் திருப்தியானதுமான வாழ்க்கைக்கான அடித்தளமாகும். எமது வழிகாட்டும் வலிமையானது, எமது மனித வளமாகும். நமது மனித வளங்களின் திறனுள்ளவர்களே இலங்கையின் பிரதான சொத்தாகும். எம்மிடம் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த Huawei எமக்கு மிகவும் ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் உதவி வருகின்றமையானது பாராட்டத்தக்கதாகும். இதன் தரமானது இந்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இது NAITA இற்கும் Huawei இற்கும் இடையிலான உற்பத்தி திறன் மிக்க கூட்டிணைவு என்று நான் நம்புகிறேன்” என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழான இலங்கை அரசாங்கமானது, பொருளாதார முன்னுரிமைகளுக்கு பொருந்தக்கூடியது கல்வி என்பதை அடையாளம் கண்டுள்ளது. இதில் பல்கலைக்கழக கல்விக்கு இணையாக தொழிற்பயிற்சித் துறைகளில் கல்வி அபிவிருத்தி செய்யப்படும். தொழில்வாண்மை மிக்கவர்களின் தேவைக்கு பொருந்தக்கூடிய வகையிலான திறன்கள் மற்றும் திறமையாளர்களைக் கொண்ட ஒரு பொருத்தமான பணியாளரே தொழில் துறையில் கேள்வியாக காணப்படுகின்ற விடயமாக காணப்படுகின்றது.
இதேவேளை, இந்நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட, திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, “எதிர்காலத்தில் இலங்கையானது, தொழில் மற்றும் தொழில்வாண்மை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தனியார் துறையுடன் நேரடியாக செயல்படுவதை தீவிரமாக எதிர்பார்க்கிறது எனக் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, “Huawei நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அத்துடன், NAITA நிறுவனம் வழங்கிய ஆதரவை பாராட்டுகிறேன், அத்துடன் எமது இளைஞர்களை அறிவு மற்றும் தொழில்நுட்பத்துடன் வளப்படுத்த, எதிர்காலத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.
NAITA நிறுவனத்தின் தலைவர் தரங்க நலீன் கம்லத் இதன்போது கருத்து வெளியிடுகையில், “இன்றைய உலகில் தொழில்பயிற்சியின் மூலமான திறமைக்கு தொழில்துறையில் அதிக தேவை காணப்படுகின்றது. எனவே இளைஞர்களிடையே தொழில் திறமைகளை வளர்ப்பது அவசியம். எமது NAITA- HUAWEI Academy ஆனது, இலங்கையில் ICT திறமைகள் மற்றும் தொழில் வளர்ச்சியின் மையமாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன் ICT தொழில்நுட்பங்களின் அறிவு மற்றும் பிரயோக ரீதியிலான அறிவுடன் வருடாந்தம் 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதே எமது இலக்காகும். அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் எமது இளைஞர்களை வழி நடாத்துவது தொடர்பான இந்த முயற்சியில் Huawei இணைந்து கொண்டமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
ICT திறமையாளர்கள், டிஜிட்டல் பொருளாதாரத்தை வழிநடாத்துவதில் ஒரு முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளனர். இலங்கையில், ICT திறமைகளை வளர்ப்பதற்காக Huawei நிறுனம் பல்வேறு பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.
“5G, IoT, cloud computing, செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் விரைவில் பெரிய அளவிலான வணிக பயன்பாடுகளில் காணக்கூடியதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Huawei Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி (Liang Yi) தெரிவிக்கையில், “இந்த சூழலில், திறமையாளர்களின் வழங்கல் மற்றும் அவர்களுக்கான கேள்வி ஆகியவற்றிற்கிடையிலான விகிதத்தை பேணுவதற்கு, வளங்களின் பகிர்வு, நன்மைகளின் பகிர்வு மற்றும் பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கிடையேயான ஒன்றிணைந்த மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நீண்டகால மூலோபாயம் அவசியமாகிறது. அந்த பாத்திரத்தை இந்த அகடமி வகிக்கும். இந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் வருடங்களில் அதிககளவிலான இளைஞர்களின் திறமைகளை வளர்க்குமென நாம் நம்புகிறோம்.” என்றார்.
NAITA-Huawei ICT Academy ஆனது, இன்றைய உலகில் உள்ள அனைத்து ICT தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரே சான்றிதழளிக்கும் அமைப்பான Huawei சான்றிதழளிக்கும் முறையுடன், தொலைத்தொடர்பு துறையில் உள்ள இளைஞர்களுக்கு வன்பொருள் நிறுவல் திறன்களுடன் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியினை மேம்படுத்துவதற்கு மேலதிக பங்களிப்பை வழங்கும்.
Huawei Sri Lanka பற்றி
தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) முன்னணி உலகளாவிய வழங்குநராக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் செயல்பட்டு வரும் Huawei Sri Lanka அனைத்து முக்கிய வலையமைப்புகள் மற்றும் நாடு முழுவதுமுள்ள இலங்கை மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தொலைத்தொடர்பு வலையமைப்புகள், IT, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் கிளவுட் சேவைகள் ஆகிய நான்கு முக்கிய தளங்களில் ஒருங்கிணைந்த தீர்வுகள் மூலம், முழுமையாக இணைக்கப்பட்ட, நுண்ணறிவான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க நாம் மிகக் கடமைப்பட்டுள்ளோம்.
1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Huawei நிறுவனம், தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநராகும். எம்மிடம் 194,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 170 இற்கும் அதிகமான நாடுகள், பிராந்தியங்களிலும் நாங்கள் செயற்பட்டு வருவதன் மூலம், உலகெங்கிலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நாம் சேவை வழங்கி வருகிறோம். முழுமையாக இணைக்கப்பட்ட, நுண்ணறிவான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே எமது தொலைநோக்கு மற்றும் நோக்கமாகும்.