தெற்காசியாவில் 5 ஆண்டுகளில் 100,000 டிஜிட்டல் திறமையாளர்களின் அறுவடைக்கு முன்வந்துள்ள Huawei

தெற்காசியாவில் 5 ஆண்டுகளில் 100,000 டிஜிட்டல் திறமையாளர்களின் அறுவடைக்கு முன்வந்துள்ள Huawei

அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, நேபாளத்திலிருந்து, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில், 100,000 டிஜிட்டல் திறமையாளர்களை உருவாக்க, Huawei உதவுமென, Huawei இன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற Digital Talent Regional Summit உச்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

“டிஜிட்டல் செழிப்புக்கான, ஒரு திறமை வாய்ந்த, சூழல் தொகுதியை அறுவடை செய்தல்” எனும் எண்ணக்கருவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில், குறித்த மூன்று நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்குபற்றியதோடு, யுனெஸ்கோ மற்றும் ICT துறையின் வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, கொவிட் தொற்றுநோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சிக்காக, டிஜிட்டல் திறமையாளர்களுக்கான இடைவெளிகளை ஈடுசெய்வதற்கும், டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்குவதற்குமான கூட்டு முயற்சிகளை ஆராயும் வகையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த உச்சிமாநாட்டில் கருத்துத் தெரிவித்த Huawei ஆசிய பசிபிக் துணைத் தலைவர் ஜெய் சென் (Jay Chen), “திறமைக்கான சூழல் தொகுதியானது, பொருளாதார மீட்சியின் மூலக்கல்லாகவும், நீடித்து நிலைக்கும் டிஜிட்டல் எதிர்காலமாகவும் இருக்குமென நாம் நம்புகிறோம். ஆயினும், டிஜிட்டல் திறமைகள் இல்லாமையானது, பல நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்” என்றார். “அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100,000 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப திறமையாளர்களை வளர்த்து, மாற்றமடைந்து வரும் இப்பிராந்தியத்தில், குறிப்பாக பங்களாதேஷ், இலங்கை, நேபாளத்தில் ஒரு துடிப்பான டிஜிட்டல் திறமை சுற்றுச்சூழல் தொகுதியை உருவாக்க, Huawei எதிர்பார்க்கிறது ” என்றார்.

ICT தீர்வுகளை வழங்குவதற்கும் டிஜிட்டல் திறமையாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்குமாக, அரசாங்கத்திற்கு உதவுவது தொடர்பில், Huawei முன்னெடுத்துள்ள இம்முயற்சியை அமைச்சர்களும் செயலாளர்களும் பாராட்டினர்.

இலங்கையின் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இது தொடர்பில் தெரிவிக்கையில்,”ICT திறமையளார்களின் அறுவடையின் பொருட்டான, மேலும் பல முயற்சிகளை எடுக்க முன்வருமாறு, அரசாங்கம் முதல் தனியார் துறைகள் வரையான அனைத்து பங்குதாரர்களையும் நாம் அழைக்கிறோம். தொலைத் தொடர்புத் துறை மற்றும் ICT ஆகியவற்றில் அதிக புரிதலையும் ஆர்வத்தையும் ஊக்குவிப்பதற்கும், பிராந்தியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் டிஜிட்டல் சமூகத்தின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், Huawei நிறுவனத்தின் ICT Academy போன்ற முயற்சிகள் கிடைத்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

பொதுமக்கள் விழிப்புணர்வு, ICT தொழிற்பயிற்சி, இலங்கை பல்கலைக்கழகங்களுடன் கூட்டிணைந்த புத்தாக்கம் ஆகிய மூன்று களங்களை மையமாகக் கொண்டு, இவ்வாண்டு Huawei ICT Academy ஆரம்பமாகிறது.

நீண்டகால டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்க ICT தொழில்நுட்பத்துடன், திறமை மற்றும் ஆற்றல்களின் அவசியம் முக்கியமானதென, அமைச்சின் செயலாளர் இதன் போது வலியுறுத்தினார். இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பின் படி, உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தைகளை பூர்த்தி செய்ய, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளுடன் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘தொழில்நுட்ப வல்லுநர்களை’ உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. “இளம் ICT திறமையாளர்கள், எதிர்கால உலகின் தலைவர்களாக இருப்பார்கள்.” என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா  மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இப்பிராந்தியத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றதோடு, டிஜிட்டல் நோக்கத்தை, அணுகக் கூடிய வகையிலான திறன் மேம்பாட்டுத் தீர்வுகளாக  மாற்றுதல், தரநிலை மேம்பாட்டை மேற்கொண்டு ICT தொழில்களுக்கான திறன் கட்டமைப்பை உருவாக்குதல், மொத்த கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல், டிஜிட்டல் திறமையாளர்களின் திரட்டலுக்கு உதவுதல் உள்ளிட்ட திறமையாளர்களுக்கான சவால்களை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை அவர்கள் இதன்போது ஆராய்ந்தனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “மிக ஆழமான அறிவானது, புதிய வாய்ப்புகளை உருவாக்குமென நாம் உறுதியாக நம்புகிறோம். அத்துடன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலக்கல்லாகவும் சக்திமிக்க சக்கரமாகவும் ICT திறமை அமைகின்றது. மொரட்டுவை பல்கலைக்கழகமானது, இப்பிராந்தியத்திலுள்ள போட்டிமிக்க ICT திறமையாளர்களை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது. எமது மாணவர்கள் Huawei உடன் இணைந்து, புத்தாக்க மையத்தின் மூலம் நவீன தொழில்துறை அறிவைப் பெற முடிந்தமை தொடர்பில், நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது தொழில்துறை தேவைகளை நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு மிக உதவியாக அமையும்.” என்றார்.

நிலையான வளர்ச்சிக்கான டிஜிட்டல் திறமையாளர்களுக்கான இடைவெளிகளை நிரப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை, சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். பங்களாதேஷின் யுனெஸ்கோ பிரதிநிதியும், அலுவலகப் பிரதானியுமான செல்வி பீட்ரைஸ் கல்தூன் (Beatrice Kaldun) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள தொற்றுநோய் காரணமான சவால்களுக்கு பதிலளிக்க, டிஜிட்டல் திறமையாளர்கள் மற்றும் புத்தாக்கம் மிக்க ICT தீர்வுகள் முன்னெப்போதையும் விட அதிக தேவை கொண்டவையாக காணப்படுகின்றன. யுனெஸ்கோ உலகளாவிய கல்வி கூட்டணி (Global Education Coalition) மற்றும் ஏனைய நிகழ்ச்சிகள் மூலம், பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு Huawei போன்ற தனியார் துறையினரின் பங்களிப்பை நான் மிகவும் மதிப்பதோடு, அதனை பெறுமதிமிக்கதாக கருதுகிறேன்” என்றார்.

தொற்று நிலைமையின்போது, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொலைதூர கற்றல் வளங்களை, ​​மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு வழங்க, யுனெஸ்கோ உள்ளிட்ட கூட்டாளர்களுடன் Huawei தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான Huawei, டிஜிட்டல் திறமையாளர்களின் அறுவடைக்கான முயற்சிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதுடன், Huawei யின் முனையிலிருந்து முனை திறமைக்கான தளத்தை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது. இது கற்றலில் ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்த உதவுவதுடன், ஒன்லைன் பாடநெறிகள், பரீட்சைகள், சான்றிதழ் வழங்கல் மற்றும் தொழில்களை தேடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய, தனியான அனைத்து சேவைகளையும் வழங்கும் தளத்தை வழங்குவதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது.

“எமது கல்வி தொடர்பான திட்டங்கள், சமூக பொறுப்புணர்வுக்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த டிஜிட்டல் உலகை வடிவமைக்கவும், அதனை வழி நடாத்திச் செல்லவுமான, அடுத்த தலைமுறை நிபுணர்களைத் தயார்படுத்தும் என நம்புகிறோம். எமது எதிர்காலம் அதிலேயே தங்கியுள்ளது” என்கிறார் ஜே.

—முற்றும்—