TVET தொழில்பயிற்சி தள திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் தொழில் வழிகாட்டல் கொள்கை பட்டறையை முன்னெடுக்கும் UBION மற்றும் KOICA

TVET தொழில்பயிற்சி தள திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் தொழில் வழிகாட்டல் கொள்கை பட்டறையை முன்னெடுக்கும் UBION மற்றும் KOICA

கொரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான UBION, சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்தின் (KOICA) ஒத்துழைப்புடன், இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுடன் (TVEC) இணைந்து, தொழில் வழிகாட்டல் கொள்கைப் பட்டறையை கடந்த 2024 ஜூலை 16 ஆம் திகதி, Monarch Imperial ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. கல்வி அமைச்சின் முக்கிய பங்குதாரர்களுடன், TVET தொழில் வழிகாட்டல் தள திட்டத்தின் சமீபத்திய செயற்படுத்தல் பற்றி கலந்துரையாடவும் அதனை மதிப்பாய்வு செய்யவும் இந்த பிரத்தியேகமான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டமானது, சர்வதேச ரீதியான சிறந்த நடைமுறைகளுக்கு முகம் கொடுக்க, இலங்கையில் CGO இன் திறன் மற்றும் நிபுணத்துவத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிரத்தியேகமான நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜயசுந்தர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம். சமந்தி சேனாநாயக்க, கல்வி அமைச்சின் தொழிற்பயிற்சிப் பணிப்பாளர் திமுத்து சந்திரசிறி மற்றும் KOICA, TVEC, DTET, NYSC, NAITA, VTA, UCR, OCUSL, DOMP, ILO, NIE, UBION ஆகியவற்றின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) பணிப்பாளர் நாயகம் டாக்டர் கே.எல். லலிததீர வரவேற்புரையுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான மாற்றங்களை முன்னறிவிக்கும் வகையிலான இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய தாக்கம் தொடர்பில் டாக்டர். லலிததீர தனது உரையின் போது எடுத்துரைத்தார். இந்தத் திட்டமானது, வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டால், தொழில் வழிகாட்டல் நடைமுறைகளில் அது புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இந்த முயற்சியின் மூலம் சிறந்த வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தற்போது உள்ளதை விட மேம்பட்ட தொழில் வழிகாட்டல் சேவைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த, KOICA நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் Kim Yong Whan, இத்திட்டமானது ஏற்கனவே பல முக்கியமான மைல்கற்களை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டு முதல் இத்​​திட்டமானது மதிப்பீட்டுச் செயன்முறைக்கு உட்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் UBION இன் திட்ட முகாமையாளரான In Seak Yoo, கடந்த ஒன்றரை வருடங்களில் அடையப்பட்ட விரிவான கற்றல் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். அனைத்து திட்ட முன்முயற்சிகளும் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட கொள்கைகளுடன் இணங்குவது குறித்து மேலதிக கலந்துரையாடலை இந்த செயலமர்வு வழங்குவதாக குறிப்பிட்டார்.

இந்த உரைகளைத் தொடர்ந்து, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜே.ஏ.டி.ஜே. ஜயலத், சர்வதேச வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி Cho Jeong Yoon மற்றும் Sookmyung மகளிர் பல்கலைக்கழக பேராசிரியர் Lee Young Min ஆகியோரால் நுண்ணறிவுமிக்க விளக்கங்கள் வழங்கப்பட்டன. இலங்கை தொழில் வழிகாட்டல் கொள்கை மற்றும் மூலோபாய செயற்றிட்டம் பற்றிய விரிவான விளக்கத்தை கலாநிதி ஜயலத் வழங்கினார். நாடு முழுவதும் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் பயிற்சி மற்றும் தொழிற் கல்வியை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட மூலோபாய திட்டங்களை சுட்டிக் காட்டிய அவர், கொள்கையின் முக்கிய கூறுகள் மற்றும் நோக்கங்களை எடுத்துரைத்தார். கலாநிதி ஜயலத்தின் நுண்ணறிவு மிக்க தகவல்கள் விலைமதிப்பற்ற தெளிவான வழிகாட்டலை வழங்கியது. திறமையான மற்றும் வேலை வாய்ப்பை பெறக் கூடிய பணியாளர்களை உருவாக்குவதில் தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவத்தை அவர் இங்கு வலியுறுத்தினார். இலங்கையில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் TVEC அமைப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் அவர் இங்கு எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கொரியாவில் தற்போதைய தொழில் ஆலோசனைக் கொள்கைகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கிய கலாநிதி Cho Jeong Yoon, அவற்றின் தாக்கம் மற்றும் செயற்படுத்தலை எடுத்துக் கூறினார். அத்துடன், கொரிய வேலைவாய்ப்பு கொள்கைகளின் நுணுக்கங்கள், உத்திகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மையப்படுத்தி, தொழிலாளர் மாற்றம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பேராசிரியர் Lee Young Min உரையாற்றினார்.

அதன் பின்னர், இந்த திட்டத்திற்கு உச்சபட்ச ஆதரவை வழங்குவதாக எம். சமந்தி சேனாநாயக்க உறுதியளித்தார். ஆயினும், அவர் அதற்கான கால அளவு குறித்து சிறிதளவில் கவலை தெரிவித்தார். அத்துடன் இச்செயன்முறையை சீர்படுத்துமாறும் பரிந்துரைத்ததோடு, இதன் மூலம் இதன் முடிவுகளை விரைவில் அடைய முடியும் எனவும் தெரிவித்தார். தொழிலாளர், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பயனுள்ள மற்றும் நிலைபேறான மூலோபாயத்திற்கு அவசியமான ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையின் நோக்கம் வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வெற்றியை உறுதி செய்வதும் ஆகும்.

இந்நிகழ்வின் இறுதிப் பகுதியானது, பார்வையாளர்களுடனான கலந்துரையாடலை கொண்டதாக அமைந்தது. அவர்கள் பேச்சாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான ஒரு பெறுமதி வாய்ந்த வாய்ப்பை இது வழங்கியது. பங்குபற்றலுக்கான வாய்ப்பை வழங்கிய இந்த அமர்வானது பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்களை கலந்துரையாட வழிவகுத்தது.

இலங்கையில் கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதில் KOICA, UBION, TVEC ஆகியன உறுதியுடன் உள்ளன. இந்த நிறுவனங்கள், தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் கூட்டுத் திட்டங்களின் மூலம், உலகளாவிய தொழில் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்க முயன்று வருகின்றன.