Orient Finance,2023/24 இல் மகத்தான நிதியியல் திருப்புமுனைகளை எட்டியுள்ளது
Orient Finance நிறுவனம், 2023/24 ஆண்டில் தனது நிதியியல் பெறுபேறுகள் மூலமாக பாரிய திருப்புமுனையை எட்டியுள்ளதுடன், கடந்த ஆண்டில் ஏற்பட்ட ரூபா 72 மில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில், 584% என்ற மகத்தான வளர்ச்சியுடன், ரூபா 348.53 மில்லியன் தொகையை வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவாக்கியுள்ளது. மொத்த சொத்துக்கள் 17% ஆல் அதிகரித்து, ரூபா 20,477 மில்லியனாக காணப்பட்டதுடன், வழங்கல் துறைசார் விரிவாக்கம் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் நிறுவனத்தின் வலுவான அணுகுமுறையின் உந்துசக்தியுடன், 8% என்ற தொழிற்துறையின் சராசரிக்கும் மேலாக, விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சியைப் பிரதிபலித்துள்ளது.
நிதியியல் பெறுபேறுகள் குறித்த முக்கிய சாராம்சங்கள்:
- 2023/24 இற்கான இலாபம்: 2022/23 இன் ரூபா -72 மில்லியனிலிருந்து அதிகரித்து ரூபா 348.53 மில்லியன்
- மொத்த சொத்துக்கள்: 2022/23 இன் ரூபா 17,469 மில்லியனிலிருந்து அதிகரித்து ரூபா 20,477 மில்லியன்
- கடன்கள் மற்றும் வருமதிகள்: 2022/23 இன் ரூபா 12,941 மில்லியனிலிருந்து அதிகரித்து ரூபா 15,659 மில்லியன்
- வைப்புக்கள்: 2022/23 இன் ரூபா 10,759 மில்லியனிலிருந்து அதிகரித்து ரூபா 13,556 மில்லியன்
- மொத்த பங்கு: 2022/23 இன் ரூபா 3,281 மில்லியனிலிருந்து அதிகரித்து ரூபா 3,603 மில்லியன்
- பங்கொன்றுக்கான அடிப்படை வருவாய்: 2022/23 இன் ரூபா -0.34 இலிருந்து அதிகரித்து ரூபா 1.65
- பங்கொன்றுக்கான நிகர சொத்துக்கள்: 2022/23 இன் ரூபா 15.54 இலிருந்து அதிகரித்து ரூபா 17.07
- பங்கொன்றின் மீதான வருவாய் (ROE): 2022/23 இன் -2.18% இலிருந்து அதிகரித்து 10.13%
Orient Finance நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் மிகவும் போற்றத்தக்க வகையில் 81% ஆல் அதிகரித்து ரூபா 1.79 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலான கடன் வழங்கல்கள் மற்றும் மேம்பட்ட வட்டி இலாப வரம்புகளின் உந்துசக்தியுடன், கடன் நடவடிக்கைகளின் திறன்மிக்க முகாமைத்துவம் மற்றும் பிரதான வணிக தொழிற்பாடுகளில் மேம்பட்ட இலாபத்திறன் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. மேலும், வட்டி அல்லாத வருமானம் 17% ஆல் அதிகரித்து, ரூபா 266 மில்லியனாகக் காணப்பட்டதுடன், கட்டண அடிப்படையிலான சேவைகளின் வலுவான பெறுபேற்றுத்திறன்கள் இதற்கு உதவியுள்ளன. நிறுவனத்தின் பல்வகைப்பட்ட வருமான மார்க்கங்கள் மற்றும் பாரம்பரிய வணிக செயற்பாடுகளுக்கு அப்பால், சந்தையில் வாய்ப்புக்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனத்தின் ஆற்றல் ஆகியவற்றை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
செலவு-வருமான விகிதத்திலும் பாராட்டத்தக்க மேம்பாட்டை நிறுவனம் அடைந்துள்ளதுடன், கடந்த நிதியாண்டில் காணப்பட்ட 93.44% இலிருந்து 66.53% ஆக குறைவடைந்துள்ளது. மேலும், பங்கு மீதான வருமானம் கடந்த நிதியாண்டில் காணப்பட்ட -2.18% இலிருந்து கணிசமாக மேம்பட்டு, 10.13% ஆக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் கடன் துறை 21% ஆல் வளர்ச்சி கண்டு ரூபா 15,659 மில்லியனை எட்டியுள்ளதுடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் நுண்கடன் துறைகளின் வலுவான பங்களிப்பே இதற்கான காரணம். தனது கடன் துறையை பல்வகைப்படுத்தி, விரிவாக்கும் அதேசமயம் விவேகமான இடர் முகாமைத்துவ நடைமுறைகளைப் பேணுவதில் Orient Finance நிறுவனத்தின் மூலோபாயரீதியான கவனத்தை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கின்றது. நிறுவனம் உயர் தர கடன் துறையை வெற்றிகரமாக பேணியுள்ளதுடன், செயற்படா கடன் மட்டங்கள் இக்காலப்பகுதி முழுவதும் தொழிற்துறை சராசரியை விடவும் குறைவாக இருக்கும் வகையில் பேணியுள்ளது.
Orient Finance PLC நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரா தியாகராஜா அவர்கள் நிதியியல் பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “வலுவான வணிக துறையில் எம்மை சிறப்பாக வழிநடாத்திச் செல்லும் எமது ஆற்றலே இந்த ஆண்டில் எமது வெற்றியின் அடையாளம். மூலோபாயரீதியான முயற்சிகள் மற்றும் எமது அணியின் அர்ப்பணிப்பு, ஆகியவற்றுடன் வலுவான நிதியியல் பெறுபேறுகளை நாம் ஈட்டியுள்ளது மாத்திரமன்றி, இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் எமது தொழிற்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை மேம்படுத்த எம்மால் முடிந்துள்ளது. எமது நடைமுறைகளை மீள்கட்டமைத்தும், நிலைபேணத்தக்க வளர்ச்சியில் கவனம் செலுத்தியும் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்தில் நாம் எம்மை நிலைநிறுத்தியுள்ளோம். எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், புத்தாக்கம், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகள் மற்றும் எமது வர்த்தகநாமத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அனுகூலத்தை நமக்கு சாதகமாக்கிக் கொள்ளல், எமது தீர்வு வழங்கல்களை விரிவுபடுத்தல் மற்றும் எமது சந்தை ஸ்தானத்தை பலப்படுத்தல் ஆகியவை எமது மூலோபாய முன்னுரிமைகளில் அடங்கியுள்ளன. உறுதியான அத்திவாரம் மற்றும் தெளிவான குறிக்கோளுடன் எதிர்வரும் காலங்களில் எம்மை வளப்படுத்தும் எமது ஆற்றல் மீது நாம் திடமான நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Orient Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கேஎம்எம் ஜாபிர் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “கடந்த பல ஆண்டுகளாக, கணிசமான சவால்களுக்கு மத்தியிலும், குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டி, தனது வலிமை மற்றும் எந்த சூழலிலும் தன்னை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை Orient Finance மிகவும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளது. எமது வளர்ச்சி மூலோபாயம் மற்றும் செலவு முகாமைத்துவம் ஆகியன 23/24 நிதியாண்டில் போற்றத்தக்க பெறுபேறுகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. வணிகத்துறையின் போக்குகளுக்கேற்ப எம்மை சிறப்பாக வழிநடாத்திச் செல்லும் திறனுக்குப் புறம்பாக, நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மேலும் மேம்படுத்த வழிகோலியுள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் வலுவான கூட்டாண்மைகள் ஆகியவற்றின் மீதான கவனம் எமது சாதனைகளினதும், பெறுபேறுகளினதும் மையமாக உள்ளது. வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை மேம்படுத்தல், எமது கிளை வலையமைப்பை விஸ்தரித்தல், குறிப்பிட்ட சந்தைப்பிரிகளுக்கு ஏற்ற வகையில் புதிய நிதியியல் தீர்வுகளை அறிமுகப்படுத்தல் மற்றும் இடர் முகாமைத்துவத்தை வலுப்படுத்தல் ஆகியன குறித்த எமது முயற்சிகள்எமது வாடிக்கையாளர் தளத்தை 23% ஆல் அதிகரித்து, 51,577 என்ற எண்ணிக்கையை எட்ட வழிகோலியுள்ளன. மேலும், கிளைகளின் மூலோபாயரீதியான விஸ்தரிப்பு மற்றும் விரிவான டிஜிட்டல் நடைமுறை மாற்றங்கள் எமது சந்தை ஸ்தானத்தையும், போட்டித்திறன் அனுகூலத்தையும் வலுப்படுத்தியுள்ளன. இந்த அணுகுமுறையை நாம் தொடர்ந்தும் கட்டியெழுப்பி, எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மிகச் சிறந்தவற்றை வழங்க முடியும் என நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
முற்றும்.