‘Beyond Ordinary – Nations Business Advisory’ ஊடாக வர்த்தக உரையாடல்களை முன்னெடுக்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி
மாறிவரும் வர்த்தகச் சூழலில் சரியான மற்றும் தெளிவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான, காலத்திற்குப் பொருத்தமான பொருளாதார நுண்ணறிவுகள், நிபுணத்துவக் கருத்துக்கள் மற்றும் பயனுள்ள வர்த்தக இணைப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட Beyond Ordinary – Nations Business Advisory எனும் அறிவுப் பகிர்வுத் தளத்தின் ஊடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வர்த்தகத் தலைவர்களையும் தொழில்முனைவோரையும் தொடர்ச்சியாக ஒன்றுதிரட்டி வருகிறது.
முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஒரு முக்கிய தளமாக இத்தளம் செயல்படுவதுடன், வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் சவால்களையும் நிறுவனங்கள் திறம்பட எதிர்கொள்ள வழிவகுப்பதுடன், இலங்கையின் வர்த்தகச் சமூகத்திற்குள் பெறுமதிமிக்க தொடர்புகளை வளர்க்கவும் உதவுகிறது.
இத்தளத்தின் அண்மைய நிகழ்வு கண்டியில் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களும் தொழில்முனைவோரும் ஒன்றிணைந்து, மாறிவரும் பொருளாதார சூழல் குறித்த நுண்ணறிவுகள், அறிவுப் பகிர்வு மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதன் போது பங்கேற்பாளர்கள் பொருளாதாரப் போக்குகள், வரிச் சட்ட மாற்றங்கள் மற்றும் வணிகச் சூழலைத் தீர்மானிக்கும் காரணிகள் குறித்த நிபுணத்துவக் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டதுடன், துறை சார்ந்த ஏனைய வர்த்தகர்கள் மற்றும் கருத்துருவாக்கத் தலைவர்களுடன் பரஸ்பர தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.
Advocata Institute இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னான்டோ பிரதான உரையை ஆற்றியிருந்ததுடன், பொருளாதாரப் போக்குகள், சந்தை மாற்றங்கள் மற்றும் உருவெடுத்து வரும் வர்த்தக சூழல் குறித்த தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், Moore Consulting இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், CA ஸ்ரீ லங்காவின் தலைவருமான திஷான் சுபசிங்க, தனநாத் பெர்னான்டோ மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வணிக வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று உப தலைவர் அரோஷ லியனாரச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம் தொடர்பில் அரோஷ லியனாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “வர்த்தக வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் குறித்து அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காக வர்த்தகத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் எமது வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் Beyond Ordinary – Nations Business Advisory உருவாக்கப்பட்டது. இத்தளமானது எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பெறுமதியை அதிகரிக்கும் வகையிலும், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் கடந்த 05 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியாக விருத்தி செய்து, செதுக்கி வந்துள்ளோம். மீண்டெழும் திறனும் வளர்ச்சியும் பரந்த பொருளாதார மாற்றங்களால் பெரிதும் செல்வாக்குச் செலுத்தப்படும் தற்போதைய சூழலில், பொருத்தமான நுண்ணறிவுகளையும் பல்வேறுபட்ட பார்வைகளையும் பெற்றிருப்பது மிகவும் பெறுமதிமிக்கதாகும். இத்தளத்தின் மூலம், வணிகங்கள் சரியான முடிவுகளை எடுக்கவும், மாற்றங்களைச் சாதகமாகக் கையாளவும், நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும் தேவையான அறிவு மற்றும் நடைமுறை வழிகாட்டல்களை வழங்கி ஆதரவளிப்பது எமது நோக்கமாகும்.” என்றார்.
மஹேல ஜயவர்தனவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் கராப்பிட்டிய புற்றுநோய் மருத்துவமனை திட்டம் பற்றிய விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்வதற்கு Trail Sri Lanka அமைப்பிற்கு ஒரு வாய்ப்பாக, கண்டியில் நடைபெற்ற இந்நிகழ்வு அமைந்தது. இது வர்த்தக சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய அளவிலான முயற்சியை ஆதரிப்பதற்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி, தனிநபர், வர்த்தக மற்றும் பெருநிறுவன வங்கியியல் சேவைகளின் ஊடாக வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை நேரடி மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக வழங்கி வருகிறது. விசேட வங்கியியல் தீர்வுகள் மற்றும் நவீன டிஜிட்டல் வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதில் இவ்வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி இலங்கையில் American Express அட்டைகளின் வழங்குநராகவும் செலுத்துகைகளை ஏற்கும் ஒரே முகவராகவும் செயல்படுவதுடன், இலங்கையின் உயர்தர வங்கியியல் சேவைகளிலும் முன்னணி இடத்தைத் தக்கவைத்துள்ளது.
###