உள்ளூர் மற்றும் சர்வதேச கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் ‘EDEX Mid-Year Expo 2026’
இலங்கையின் முன்னணியிலுள்ள கல்வி மற்றும் தொழில் கண்காட்சியான ‘EDEX Mid-Year Expo 2026’, செப்டெம்பர் 05, 06 ஆம் திகதிகளில் கொழும்பு BMICH இல் மீண்டும் இடம்பெறவுள்ளது. மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் தமது அடுத்த கட்டத்தைப் பற்றி சரியான முடிவுகளை எடுக்க உதவுவதற்காக கல்வி நிறுவனங்கள், தொழில் வழங்குனர்கள் மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்களை இக்கண்காட்சி ஒன்றிணைக்கிறது.
இக்கண்காட்சியானது, குறித்த இரு தினங்களிலும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறக்கப்பட்டிருக்கும். சுமார் 45 புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், 10 பெருநிறுவனங்கள் மற்றும் பின்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நேரடி வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைப் பார்வையிடும் வாய்ப்பை பார்வையாளர்கள் பெறவுள்ளனர். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், தமது கல்வி, திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த விரும்பும் யாவருக்கும் ஒரு அவசியமான ஒரே தளமாக இக்கண்காட்சி அமையவுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான மலேசிய உயர் ஸ்தானிகர் திரு. பாட்லி ஹிஷாம் ஆதம் (Badli Hisham Adam) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளை நிறைவு செய்த அல்லது அதற்குத் தயாராகும் மாணவர்களுக்கு கல்விப் பாதைகளை ஒப்பிடவும், நிறுவனங்களைப் பற்றி ஆராயவும், பாடசாலைக்கு அப்பாலுள்ள தெரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ளவும் EDEX வாய்ப்பளிக்கிறது. பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் தமது பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தெரிவுகளைப் பற்றி சிறப்பாகப் புரிந்துக்கொள்ள இது வழிவகுக்கிறது. தொழில்முறை வல்லுநர்களும் வேலை தேடுவோரும் தொழில் வழங்குனர்களுடன் தொடர்பு கொள்ளவும், தொழில்முறை ரீதியான வளர்ச்சி வாய்ப்புகளை அடையாளம் காணவும் இக்கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
EDEX Mid-Year Expo 2026 கண்காட்சியின் ஒரு முக்கிய அங்கமாக அதன் ‘Job Fair’ (வேலைவாய்ப்பு சந்தை) அமையும். இது பல்வேறு தொழில்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களை ஒன்றுதிரட்டி, வேலை தேடுவோருக்கும் இளம் தொழில்முறை வல்லுநர்களுக்கும் வேலைவாய்ப்பு தெரிவுகளை ஆராயவும், சாத்தியமான தொழில் வழங்குனர்களுடன் நேரடியாக தொடர்புறவும் வாய்ப்பளிக்கிறது. சுகாதாரப் பராமரிப்பு, நுகர்வுப் பொருட்கள், விவசாயம், விமானப் போக்குவரத்து, சரக்கு மற்றும் ஏற்றுமதி, தொலைத்தொடர்பாடல், மோட்டார் வாகனத் துறை, போக்குவரத்து, மென்பொருள், வங்கி மற்றும் நிதியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்தைத் தேடும் நபர்களை, பல்வேறு தொழில்துறைகளில் திறமையானவர்களைத் தேடும் நிறுவனங்களுடன் இணைப்பதற்காகவே இந்த வேலைவாய்ப்பு முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, EDEX தலைவர் திரு. மஹிந்த கலகெதர தெரிவிக்கையில், “இலங்கையின் இளைஞர்கள் தமது எதிர்கால இலக்குகளைப் பற்றி சிந்திக்கவும், அடுத்த பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு என்பதற்கு அப்பாலான நோக்கத்திற்கும் உதவுவதே EDEX இன் நோக்கமாக இருந்து வருகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கல்வி, திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை இணைக்கும் ஒரு தளத்தை நாம் உருவாக்கியுள்ளோம். இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அவர்களின் அடுத்த கட்டத்தையும், இறுதியில் அவர்களின் எதிர்காலத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தெரிவுகளை வழங்குவதன் மூலம், இந்த நோக்கத்தை Mid-Year Expo தொடர்ச்சியாக முன்னெடுக்கிறது” என்றார்.
இந்த 2026 கண்காட்சியானது, அதிகரித்து வரும் உலகளாவிய வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்துறையில் இலங்கை இளைஞர்கள் பங்கேற்பதை சாத்தியமாக்கும் வாய்ப்புகள் மீதான தனது கவனத்தை வலுப்படுத்தும். உள்ளூர் பெருநிறுவனங்கள் மற்றும் கல்வி வழங்குநர்களுடன் பின்லாந்து மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சர்வதேச கண்காட்சியாளர்களும் இணையவுள்ளதால், இலங்கையில் வழங்கப்படும் வாய்ப்புகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு வாய்ப்புகளையும் பரிசீலிக்கும் வாய்ப்பை பார்வையாளர்கள் பெறுவார்கள்.
இது குறித்து, EDEX Mid-Year Expo 2026 திட்டத்தின் தலைவர் திரு. சதுஷிக நிஸ்ஸங்க தெரிவிக்கையில்: “பார்வையாளர்கள் தமக்கு வழங்கப்படும் அனைத்து பதில்களுடனும் தங்களது பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. வழங்கப்படும் தெரிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், சரியான கேள்விகளைக் கேட்கவும், தாம் முன்னோக்கிச் செல்ல உதவக்கூடிய நிறுவனங்களுடன் நேரடி உரையாடல்களை மேற்கொள்ளவும் EDEX ஒரு தளத்தை வழங்குகிறது. ஒருவர் தாம் எதை கற்பது என தெரிவு செய்வதாக இருந்தாலும், வெளிநாட்டில் வாய்ப்பைத் தேடுவதாக இருந்தாலும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் அல்லது வேலை தேடுவதாக இருந்தாலும், இக்கண்காட்சியில் அதனுடன் தொடர்புடைய ஏதேனும் ஒன்று அவருக்கு நிச்சயமாக இருக்கும்.” என்றார்.
தமது தொழில் வழிகாட்டல் சேவையின் ஒரு அங்கமாக EDEX இல் இடம்பெற்று வரும் ‘Psychometric Test’ எனும் சோதனையை, தமது கண்காட்சி வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இது இளைஞர்களுக்கு இச்செயன்முறையை மிக இலகுவாக அணுகக்கூடியதாகவும் வசதியானதாகவும் மாற்றுகிறது. இதன் ஊடாக கண்காட்சிக்கு வருகை தருவதற்கு முன்னரே, பங்கேற்பாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி தமக்கு வசதியான நேரத்தில் ‘Career Key’ சோதனையை ஒன்லைனில் பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பாளர்கள் தமது பெறுபேறுகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் அல்லது அச்சிடப்பட்ட பிரதியாக கண்காட்சிக்குக் கொண்டு வரலாம். அவை ‘இலங்கை தொழில் வழிகாட்டல் சங்கத்தின்’ (CCGA) தகுதிவாய்ந்த தொழில் ஆலோசகர்களால் ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்படும். ஒவ்வொரு நபரினதும் ஆர்வங்கள், பலங்கள், திறன்கள் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் ஆலோசகர்கள் தனிப்பட்ட ரீதியாகவும், நேருக்கு நேரான முறையிலும் வழிகாட்டலை வழங்குவார்கள். மாணவர்களின் விடயத்தில் இந்த அமர்வுகளில் பெற்றோர்களும் பங்கேற்க முடியும்.
தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டமானது மாணவர்கள், பெற்றோர்கள், வேலை தேடுவோர், இளம் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்கள் தற்போதுள்ள சூழ்நிலைகள் மற்றும் நிலவும் தொழில் சந்தையில் அதிகரித்து வரும் கேள்விகளின் அடிப்படையில் பொருத்தமான கல்வி, பயிற்சி மற்றும் தொழில் தெரிவுகளை ஆராய உதவும்.
பிரதமர் அலுவலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இந்நிகழ்விற்கு தமது ஒப்புதலை அளித்துள்ளன. இது நாட்டின் இளைஞர்களுக்கான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பரந்த முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.
இலங்கை முதலாளிமார் சம்மேளனம், இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தொழில் வழிகாட்டல் சங்கம் ஆகியன இக்கண்காட்சியின் மூலோபாய பங்காளர்களாகும். NIBM the City University, Mogo Media Academy, Colombo Institute of Research & Psychology (CIRP) ஆகியன நிகழ்வின் பிளாட்டினம் அனுசரணையாளர்களாக செயற்படும் அதே வேளையில், CINEC Campus, Asia Pacific Institute of Information Technology (APIIT), Australian College of Business Technology (ACBT) ஆகியன இதன் கோல்ட் அனுசரணையாளர்களாக செயற்படுகின்றன. EDEX Mid-Year Expo 2026 கண்காட்சியின் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக தேசிய சேமிப்பு வங்கி (NSB) செயற்படும்.
அச்சு ஊடகப் பங்காளராக விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட், உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாடல் பங்காளராக SLT-Mobitel, டிஜிட்டல் ஊடக பங்காளராக Sense, மக்கள் தொடர்பாடல் பங்காளராக PR Wire ஆகியன செயற்படுகின்றன.
இலங்கை இளைஞர்களுக்கு நடைமுறை ரீதியான அறிவு, உத்வேகம் மற்றும் புதிய தூரநோக்கைக் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட, இளைஞர்களை மையமாகக் கொண்ட Podcast தளமான EDUCAST ஆனது, EDEX இன் ஒரு முன்னோடியான முயற்சியாகும். இது மலிந்த அளஹகோன், கலாநிதி கிஷு கோமஸ், சத்துரங்க அபேசிங்க, துலித் ஹேரத், சலிந்த அபேகோன், தனிக பெரேரா, யொஹானி டி சில்வா, துஷ்யந்த வீரமன், ருமேஷ் தரங்க மற்றும் தனத் பெனாண்டோ உள்ளிட்ட விருந்தினர்களின் பங்கேற்புடனான 10 அத்தியாயங்களை வெளியிட்டுள்ளது.
அத்துடன், EDEX 365 இன் துணை வர்த்தகநாமமான EDUSPORT, கல்வியையும் விளையாட்டையும் இணைப்பதன் மூலம் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில், இந்த திட்டமானது முக்கியமான சிந்தனை மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன்களை வளர்ப்பதற்காக, விளையாட்டு மற்றும் விளையாட்டு சார்ந்த கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தும். கல்வி மற்றும் கல்வி வளர்ச்சிக்கு விளையாட்டை இணைப்பதற்காக சர்வதேச ரீதியில் திறம்பட பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, இது கால்பந்து, சதுரங்கம் மற்றும் வில்வித்தை போன்ற விளையாட்டுகளை இணைக்கும்.
இது குறித்து. EDEX Mid-Year Expo 2026 நிகழ்ச்சித் திட்ட செயலாளர் கவிங்க குணசேகர தெரிவிக்கையில்: “இந்த இரண்டு நாட்களையும் இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறோம். நாம் அவர்களை கண்காட்சி ஒன்றிற்கு மட்டும் வருமாறு கேட்கவில்லை. கேள்விகளைக் கொண்டு வாருங்கள்; உங்கள் தெரிவுகளை பரிசீலியுங்கள்; அதற்கு பதிலளிக்கக்கூடியவர்களுடன் பேசுங்கள்; அதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றிய சிறந்த புரிதலுடன் வெளியேறுங்கள். ஒவ்வொரு பார்வையாளரும் தமக்கான வாய்ப்புகளைக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதே இக்கண்காட்சி மதிப்புமிக்கதாக மாறுகிறது.” என்றார்.
EDEX Mid-Year Expo 2026 ஆனது, உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வி வாய்ப்புகள், திறன் மேம்பாடு, தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புகளை ஒரே இடத்தில் கொண்டு வருகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு அவர்களின் அடுத்த கட்டத்திற்கான நடைமுறை ரீதியான ஒரு ஆரம்பப் புள்ளியை அது வழங்குகிறது.
பொதுமக்கள் EDEX Mid-Year Expo 2026 கண்காட்சியை கொழும்பு BMICH இல் செப்டெம்பர் 05, 06 ஆகிய திகதிகளில் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை பார்வையிடலாம்.
மேலதிக தகவல்களுக்கு, 011 3091086 அல்லது 076 8204975 ஊடாக EDEX செயலகத்தை தொடர்பு கொள்ளவும்.
ஒரே இடம். பல தெரிவுகள். EDEX இல் ஆரம்பமாகிறது உங்களின் அடுத்த கட்டம்.
END