குருணாகலில் அதிநவீன பெல்வத்த திரவப் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல்
பெல்வத்த டெய்ரி இன்டஸ்ட்ரீஸ் (Pelwatte Dairy Industries) நிறுவனத்தின் துணை நிறுவனமான Pelwatte Foods (Pvt) Limited, தனது பால் உற்பத்தி நடவடிக்கைகளின் பாரிய விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், குருணாகலில் அமைக்கப்படவுள்ள பசுமைத்தரை திரவப் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு (Greenfield Liquid Milk Manufacturing Facility) உத்தியோகபூர்வமாக அடிக்கல் நட்டுள்ளது. 2027 ஜூலை மாதத்தில் திறக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையானது, முழு ஆடைப் பால்மா துறையில் நீண்ட காலமாக முன்னணியில் திகழும் பெல்வத்த நிறுவனத்தின் திரவப் பால் உற்பத்தியை நோக்கிய மாற்றத்தைக் குறிப்பதுடன், இலங்கை நுகர்வோருக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட புதிய பால் உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் வலுப்படுத்துகிறது.
இத்திட்டமானது, திட்டமிடல் கட்டத்திலிருந்து செயற்பாட்டு நிலைக்கு நகர்ந்துள்ள நிலையில், இந்த அடிக்கல் நடும் விழா தொழிற்சாலையை நிஜமாக்குவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை செயற்பாட்டிற்கு வந்ததும், வழக்கமான பால் மற்றும் சொக்லேட், வெனிலா, ஸ்ட்ரோபெரி, ஐஸ் கோப்பி போன்ற சுவையூட்டப்பட்ட பால் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய திரவப் பால் பொருட்களை உற்பத்தி செய்து, நுகர்வோரின் மாறிவரும் தெரிவுகளுக்கு ஏற்ப பெல்வத்த நிறுவனம் அதன் தயாரிப்பு வரிசைகளை விரிவுபடுத்தவுள்ளது.

இந்த மைல்கல் குறித்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “அடிக்கல் நடுவது என்பது வெறுமனே கட்டுமானத்திற்கான தொடக்கம் மாத்திரமல்ல. எமது அர்ப்பணிப்பு நிஜமாகும் தருணமாகும். பல தசாப்தங்களாக எமது பால்மா உற்பத்திகள் மூலம் உயர்தர பால் போசணைக்காக பல இலட்சம் குடும்பங்கள் பெல்வத்த நிறுவனத்தை நம்பியுள்ளன. இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த திரவப் பால் உற்பத்தியைக் கொண்டு வருவதன் மூலமும், நாட்டின் பால் உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் அதே வேளையில் ஆரோக்கியமான குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலமும், அந்தப் பாரம்பரியத்தை மேலும் கட்டியெழுப்ப இத்தொழிற்சாலை எமக்கு உதவுகிறது. 2027 ஆம் ஆண்டில் இந்த தொழிற்சாலை தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது, பெல்வத்த நிறுவனத்தின் ஒரு புதிய அத்தியாயத்திற்கு நுகர்வோரை வரவேற்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
பெல்வத்த நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க தெரிவிக்கையில், “உள்ளூர் தொழில்துறைகளை வலுப்படுத்துவது இலங்கையின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு என்பதில் பெல்வத்த எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் பால் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்தல், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பால் விவசாயிகளுக்கு நிலையான மதிப்பை உருவாக்குதல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு போசணைமிக்க, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பால் உற்பத்திகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய எமது நீண்டகால இலக்குகள் அனைத்தும் இத்திட்டத்தில் பிரதிபலிக்கின்றன.” என்றார்.
குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதில், போசணை என்பது ஒரு தேசிய முன்னுரிமையாக தொடர்ச்சியாக அமைந்து வரும் இந்நேரத்தில் இந்த முதலீடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதன் மூலம், இலங்கையின் பால் விநியோகச் சங்கிலியை பலப்படுத்துவதையும், நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு புதிய பால் உற்பத்திகள் கிடைப்பதை அதிகரிப்பதையும் பெல்வத்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச தரத்தையும் உணவுப் பாதுகாப்புக்கான தர நிலைகளையும் பூர்த்தி செய்யும் அதே வேளையில், இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பசுமைத் தரை திரவப் பால் உற்பத்தி தொழிற்சாலையானது, ஒரு முழுமையான பால் போசணை நிறுவனமாக மாறுவதற்கான பெல்வத்த நிறுவனத்தின் பயணத்தின் அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது.
நம்பகமான பாரம்பரியத்திலிருந்து புதிய சாத்தியக்கூறுகள் வரை, இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் எதிர்காலத்தை ஒவ்வொரு மைல்கல்லாக பெல்வத்த நிறுவனம் கட்டமைத்து வருகிறது.
END