SLIM தேசிய விற்பனை விருதுகள் 2026 அறிமுகம்; விற்பனைத் துறையினரின் விசேடத்துவத்தை கௌரவிக்கும் 25 வருட பயண கொண்டாட்டம்
இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), நாடு முழுவதிலும் உள்ள ஒப்பிடமுடியாத விற்பனைத் துறை வல்லுநர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் புகழ்பெற்ற தளத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ‘2026 தேசிய விற்பனை விருதுகள்’ (National Sales Awards – NSA) நிகழ்வின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை அறிவித்துள்ளது.
SLIM தேசிய விற்பனை விருதுகள் கடந்த 25 வருடங்களாக இலங்கையின் முதன்மையான தளமாக விளங்கி வருவதுடன், விற்பனைச் செயல்திறன், தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களையும் குழுக்களையும் கௌரவித்து அங்கீகாரமளித்து வருகிறது. நிறுவனங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கும் நிபுணர்களைக் கௌரவிப்பதன் மூலம், NSA 2026 இந்த பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது, இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு தொழில்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிபுணர்களுக்கான விண்ணப்பங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குகின்ற, சிறந்த செயல்திறன் கொண்ட தனிநபர்கள் மற்றும் குழுக்களை பரிந்துரைக்குமாறு, நிறுவனங்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், விற்பனைத் தலைவர்கள், மனிதவள மற்றும் திறன் மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் விற்பனை நிபுணர்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்து விருது தளமானது, அதன் வெள்ளி விழா பதிப்பைக் கொண்டாடும் வேளையில், NSA 2026 ஆனது அடுத்த தலைமுறை விற்பனைத் தலைவர்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, இலங்கையின் விற்பனை சமூகத்தின் தரங்களையும் தொழில்முறைத் தன்மையையும் வலுப்படுத்த முயல்கிறது.
புகழ்பெற்ற தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் அதன் வெளிப்படையான மற்றும் கடுமையான மதிப்பீட்டு செயன்முறையின் மூலம், NSA ஆனது பல ஆண்டுகளாக நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க விற்பனை அங்கீகாரத் தளமாக வலுவான நற்பெயரைப் பெற்றுள்ளது. இலங்கையின் பெருநிறுவன துறையில், தொழில்முறை அங்கீகாரம் மற்றும் தொழில்முறை சாதனைக்கான ஒரு அளவுகோலாக இத்தளம் வளர்ந்துள்ளது.
இது குறித்து, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தலைவர் இனோக் பெரேரா தெரிவிக்கையில், “தேசிய விற்பனை விருதுகளின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், வணிக நிறுவனங்களையும் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்லும் இலங்கையின் விற்பனை நிபுணர்களைக் கௌரவிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லை கொண்டாடுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 25 வருடங்களில் நாட்டின் விற்பனை சமூகத்தின் அர்ப்பணிப்பு, மீளெழும் திறன் மற்றும் சாதனைகளை மதிக்கின்ற, விற்பனை விசேடத்துவத்தின் அடையாளமாக NSA உருவெடுத்துள்ளது. உலகளாவிய பங்கேற்பை வரவேற்பதன் மூலம், NSA சர்வதேச மேடைக்கு செல்லும் இவ்வேளையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிப்பானது, ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்து வைக்கிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம், புத்தாக்கம், ஒத்துழைப்பு, சர்வதேச ரீதியிலான சிறந்த நடைமுறைகளை வளர்ப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இலங்கை விற்பனைத் திறன்களை உலகளாவிய தரங்களுடன் ஒப்பிடவும் விரும்புகிறோம். NSA 2026 ஆனது எமது பாரம்பரியத்தின் கொண்டாட்டம் மட்டுமல்லாது, உலகளாவிய தளத்தில் இலங்கையின் விற்பனைச் சிறப்பின் பெருமையை உயர்த்துவதற்கான ஒரு தைரியமான படியும் ஆகும்.” என்றார்.
இத்திட்டத்தின் செயற்பாட்டு ரீதியான வெளிப்பாடு குறித்து SLIM நிறுவனத்தின் நிகழ்வுகள் மற்றும் நிலைபேறான தன்மைக்கான துணைத் தலைவர் ரஜீவ் டேவிட் குறிப்பிடுகையில், “SLIM தேசிய விற்பனை விருதுகளின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதானது, வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உந்துதல் அளித்து முன்னோக்கி கொண்டு செல்லும் விற்பனை நிபுணர்களுக்கு செலுத்தும் ஒரு மரியாதையாகும். அதேபோல் இலங்கை விற்பனை விசேடத்துவத்தை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியுமாகும். வருமானத்தை உருவாக்குவதற்கும், நிறுவனங்களின் வெற்றிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் விற்பனை நிபுணர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை NSA 2026 வலியுறுத்துகிறது.” என்றார்.
SLIM நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பிரதித் தலைவர் மந்திக ரணசிங்க, இவ்விருதுகளின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை வளர்ச்சிப் பரிமாணம் குறித்து கருத்து வெளியிடுகையில், “பல SLIM விற்பனை டிப்ளோமா பட்டதாரிகள் விற்பனை சமூகத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதையும், சிலர் NSA நடுவர் குழுவில் கூட பணியாற்றுவதையும் காண்பது நம்பமுடியாத அளவிற்கு உத்வேகம் அளிக்கிறது. விற்பனைத் துறையின் தரம் மற்றும் தொழில்முறைத் தன்மையை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கு கல்வி, தொழில்துறை அனுபவம் மற்றும் நடைமுறை ரீதியான அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது விளக்குகிறது.” என்றார்.
நியாயம், நேர்மை மற்றும் மதிப்பீட்டு விசேடத்துவத்தை பேணுவது குறித்து SLIM NSA 2026 நிகழ்வின் நடுவர் குழு பிரதித் தலைவர் ஜெரோம் ஜயசிங்க குறிப்பிடுகையில், “விற்பனை சமூகத்தினருக்குள் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து கௌரவிப்பதற்கான இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க தளமாக தேசிய விற்பனை விருதுகள் பரிணமித்துள்ளது. அத்துடன் 25 ஆவது ஆண்டு நிறைவானது அந்தப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. நிறுவன வளர்ச்சி மற்றும் வணிக வெற்றியை இயக்குவதில் விற்பனை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் அவர்களுக்கான தொடர்ச்சியான மேம்பாடும் அங்கீகாரமும் முன்னெப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாகியுள்ளது. தனிநபர்கள் தங்களின் திறமை, தொழில்முறை தன்மை, சாதனைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கும், இலங்கை முழுவதும் உள்ள அடுத்த தலைமுறை விற்பனைத் தலைவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் NSA தொடர்ச்சியாக ஒரு பயனுள்ள தளத்தை வழங்குகிறது.” என்றார்.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தேசிய விற்பனை விருதுகள் 2025 இன் திட்டத் தலைவர் தமித் ஜயவர்தன தெரிவிக்கையில், “தேசிய விற்பனை விருதுகளின் 25 ஆண்டுகளின் தடமானது, இலங்கையின் விற்பனைத் துறையின் வளர்ச்சி மற்றும் பரிணாமத்தைக் காட்டும் ஒரு தீர்க்கமான மைல்கல்லாகும். விற்பனையில் சிறந்து விளங்குதல், தலைமைத்துவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்கான நாட்டின் மிக மதிப்புமிக்க தளங்களில் ஒன்றாக பல ஆண்டுகளாக NSA விளங்குகின்றது. இந்த வெள்ளி விழாவை நாம் கொண்டாடும் வேளையில், NSA 2026 ஆனது விற்பனை நிபுணர்களின் மீளெழுச்சித் திறன் மற்றும் பங்களிப்பிற்கு செலுத்தும் ஒரு மரியாதையாகவும். இத்துறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான அர்ப்பணிப்பாகவும் இது அமைகிறது. இந்த திட்டத்தை வழிநடத்துவது எனக்கு கிடைத்த பெருமையாகும் என்பதுடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தில் பங்காளராகுமாறு தொழில்துறையினருக்கு நாம் அன்போடு அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.
விருதுகளின் பாரம்பரியம் குறித்து நிறுவன ரீதியான பரந்த பார்வையைப் பகிர்ந்து கொண்ட SLIM நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமில் விக்ரமசிங்க தெரிவிக்கையில், “தேசிய விற்பனை விருதுகளின் 25 ஆவது ஆண்டு நிறைவு என்பது இலங்கையின் விற்பனைத் துறையின் முக்கிய தாக்கம் என்பதுடன் வளர்ச்சிக்கான ஒரு சான்றும் ஆகும். தொழில்துறைகளில் வளர்ச்சியையும் புத்தாக்கத்தையும் உச்ச அளவில் வழங்கி, அடுத்த தலைமுறை விற்பனைத் தலைவர்களை ஊக்குவித்து வலுவூட்டுவதுடன், 25 ஆண்டுகளாக விற்பனை விசேடத்துவம், தொழில்முறைப் பண்பு மற்றும் செயல்திறனுக்கான ஒரு அளவுகோலாக NSA விளங்கி வருகிறது.” என்றார்.
பல்வேறு வளர்ந்து வரும் துறைகள் மற்றும் பிரிவுகளில் உள்ள நிபுணர்களை அங்கீகரிப்பதன் மூலமும், தற்போதைய மாற்றமடையும் பொருளாதாரச் சூழலில் விற்பனை நிபுணர்கள் வெளிப்படுத்தும் மீளெழுச்சித் திறன், தழுவும் திறன், தலைமைத்துவம் ஆகியவற்றை உலகத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலமும், NSA 2026 ஆனது, நவீன வணிகம் மற்றும் விற்பனையின் வளர்ச்சியடைந்து வரும் இத்துறையை தொடர்ந்து பிரதிபலிக்கும்.
விற்பனை விசேடத்துவத்திற்கான முதன்மையான தேசிய அங்கீகாரத் திட்டமாக அமைந்துள்ள இவ்விருது தளத்தின் தகுதியானது, பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொடர்ச்சியான பங்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
SLIM தேசிய விற்பனை விருதுகள் தற்போது வெறுமனே விருது வழங்கும் விழா மட்டுமல்ல; இது விற்பனைத் தொழிலை வலுவூட்டி உயர்த்தும் ஒரு தேசிய இயக்கமாகும் என்பதுடன், நிறுவன வெற்றி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் விற்பனை நிபுணர்கள் வகிக்கும் மூலோபாய ரீதியான பங்கை சிறந்த முறையில் பாராட்ட வழிவகுக்கிறது.
வெற்றிக் கதைகள், தலைமைத்துவப் பயணங்கள் மற்றும் விற்பனைத் திறனில் சிறந்து விளங்குவதன் தாக்கத்தைக் காண்பிப்பதன் மூலம், இந்த முன்முயற்சியானது இளம் அதிகாரிகள், ஆர்வமுள்ள விற்பனை நிபுணர்கள் மற்றும் பரந்த வணிக சமூகத்திற்கு ஒரு உத்வேகமாகவும் செயற்படுகிறது.
NSA 2026 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பதிவுகள் இப்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்கள், விண்ணப்ப விபரங்கள் மற்றும் விண்ணப்ப சமர்ப்பிப்புகளுக்கு, SLIM தேசிய விற்பனை விருதுகளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: கங்கனி லியனகே, நிகழ்வுகள் பிரிவுத் தலைவர் ([email protected] / 070 326 6988) அல்லது அவிஷ்க அத்தநாயக்க, ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் – நிகழ்வுகள் ([email protected] / 071 841 7591).
END