இலங்கையில் BMW வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக Melstacorp PLC இன் துணை நிறுவனமான Mels Automobiles (Pvt) Ltd. நியமனம்
Melstacorp PLC நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான அதன் துணை நிறுவனமான Mels Automobiles (Pvt) Ltd., இலங்கையில் BMW வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய BMW வாகனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகம், அசல் BMW பாகங்களின் விநியோகம் மற்றும் உலகளாவிய BMW தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட BMW விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு Mels Automobiles (Pvt) Ltd. நிறுவனம் பொறுப்பாக செயற்படும்.
இது குறித்து Melstacorp PLC நிறுவனத்தின் தலைவர் ஹசித்த ஜயவர்தன தெரிவிக்கையில், “இலங்கையில் BMW வாகனங்களுக்கான உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக Mels Automobiles நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளமையானது எமது குழுமத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். BMW என்பது வெறுமனே போக்குவரத்து எனும் விடயத்திற்கு அப்பாற்பட்டதாகும். அதிநவீன புத்தாக்கம், தரத்தில் சமரமசற்ற தன்மை மற்றும் ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் அனுபவங்களை அது பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கிளையிலும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட, இடைவிடாத அர்ப்பணிப்பால் இந்த விடயங்கள் செயற்படும். இலங்கையில் BMW வர்த்தகநாமத்திற்கான ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தும் இவ்வேளையில், இது எமது விழுமியங்களுடன் வலுவாக ஒத்துபோகின்றன என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.
Mels Automobiles நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனுஷ்க பொலொனோவிட்ட தெரிவிக்கையில், “இது ஒரு கௌரவம் என்பதோடு பொறுப்பும் ஆகும். வாடிக்கையாளர் அனுபவம், தொழில்நுட்ப விசேடத்துவம் மற்றும் வர்த்தகநாம நிர்வாகம் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரநிலைகள் மூலம் இலங்கையில் BMW வர்த்தகநாமத்தின் இருப்பை மீளகட்டியெழுப்புவதும், அதனை பலப்படுத்துவதும், மேம்படுத்துவதுமே எமது தொலைநோக்குப் பார்வையாகும்.” என்றார்.
BMW Group Asia நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Rene Gerhard தெரிவிக்கையில், “உயர்தர போக்குவரத்து மற்றும் கைவினைத்திறனுக்கான நீண்டகால மதிப்பைக் கொண்டுள்ள இலங்கையானது, BMW Group Asia நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாகும். சொகுசு வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எமது உத்தியோகபூர்வ இறக்குமதியாளராகவும் விநியோகஸ்தராகவும் Mels Automobiles நிறுவனத்தை நியமிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது நாட்டில் எமது வர்த்தகநாமத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்தத் தீர்மானமானது சந்தையின் நீண்டகால சாத்தியக்கூறுகள் மீதான எமது நம்பிக்கையையும் பொறுப்புடன் வளர்ச்சியடைய வேண்டும் எனும் எமது நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.
இந்த மாற்றம் இடம்பெறும் காலப்பகுதியில் (transition period), தற்போதைய BMW வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற சேவை மற்றும் ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ மாற்றம் நிறைவடையும் வரை, Prestige Automobiles (Pvt) Ltd. நிறுவனம் கடந்த காலங்களில் காண்பித்த அதே அக்கறை மற்றும் தொழில்முறை நடைமுறையுடன் அனைத்து BMW வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ச்சியாக சேவையாற்றும். சேவையின் தொடர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளித்து, தடையற்ற மாற்றத்தை உறுதி செய்ய Melstacorp PLC மற்றும் Mels Automobiles (Pvt) Ltd. ஆகிய நிறுவனங்கள் Prestige Automobiles (Pvt) Ltd. நிறுவனத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படும்.
Melstacorp PLC பற்றி
Melstacorp PLC நிறுவனமானது, இலங்கையின் முன்னணி பல்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இது வாகனத் துறை, பெருந்தோட்டம், சுற்றுலா, உற்பத்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மை, ஒழுக்கமான நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களுக்கான நீண்டகால மதிப்பை உருவாக்கும் நிலைபேறான, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வணிகங்களைக் கட்டியெழுப்பும் திறனுக்காக இக்குழுமம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Mels Automobiles (Pvt) Ltd. பற்றி
Mels Automobiles (Pvt) Ltd. ஆனது, Melstacorp PLC இன் வாகனத் துறையாகும். இது தொழில்முறை முகாமைத்துவம், செயற்பாட்டு ரீதியான விசேடத்துவம் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் மூலம் இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த வாகன வர்த்தகநாமங்களை உருவாக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.