தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) துறையை வலுப்படுத்தும் ‘CAREER ONE’ (www.careerone.gov.lk) டிஜிட்டல் தளம் குறித்த விழிப்புணர்வுத் திட்டம்

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) துறையை வலுப்படுத்தும் ‘CAREER ONE’ (www.careerone.gov.lk) டிஜிட்டல் தளம் குறித்த விழிப்புணர்வுத் திட்டம்

Off By Mic

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, CAREER ONE டிஜிட்டல் தளம் (www.careerone.gov.lk) தொடர்பான விரிவான விழிப்புணர்வு திட்டமொன்று, மேல் மாகாணத்தில் 2026 ஜனவரி 14, புதன்கிழமை கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இந்தத் திட்டமானது கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (KOICA) நிதியுதவியுடன், TVET தொழில்முறைத் தளச் செயற்திட்டத்தின் (2023-2026) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரியாவின் முன்னணி கல்வி தொழில்நுட்ப (Edtech) நிறுவனமான UBION, இந்தச் செயற்றிட்ட முகாமைத்துவ ஆலோசகராக செயற்படுவதுடன், அது இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி அதிகாரசபை (TVEC) ஆகியவற்றுடன் இணைந்து இதனை செயற்படுத்துகிறது. டிஜிட்டல் ரீதியிலான தொழில் தயார்நிலையை ஊக்குவித்தல், தொழில் வழிகாட்டல் பொறிமுறைகளை வலுப்படுத்துதல், CAREER ONE டிஜிட்டல் தளத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது NVQ பாடநெறிகளைத் தொடரும் TVET மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் சேவைகள், வேலைத்தலப் பயிற்சி (OJT) மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் இலங்கையின் தேசியத் தளமாகும்.

நிகழ்வின் ஆரம்ப உரையை TVEC இன் தலைவர் பேராசிரியர் தர்மஸ்ரீ விக்ரமசிங்க நிகழ்த்தினார், அதனைத் தொடர்ந்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) திருமதி சமந்தி சேனாநாயக்க உரையாற்றினார். தொழில் வழிகாட்டலை நவீனப்படுத்துவதிலும், TVET மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் தளங்களின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது எடுத்துக் கூறினார்.

அதைத் தொடர்ந்து இடம்பெற்ற விளக்கக்காட்சி அமர்வில், CAREER ONE தளத்தின் தரவு அடிப்படையிலான செயல்திறன் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை குறித்த விரிவான கண்ணோட்டத்தை, UBION நிறுவனத்தின் பிரதித் தலைவர் Yoo In Seak, வழங்கினார். மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலும், TVET துறையில் ஆதாரங்களின் அடிப்படையிலான தொழில் வழிகாட்டல் முடிவுகளை எடுப்பதிலும் இந்தத் தளத்தின் பங்களிப்பை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பயிற்சி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் அர்ப்பணிப்பை TVEC இன் இயக்குநர் மஞ்சுள விதானபத்திரன உறுதிப்படுத்தினார். அத்துடன், எதிர்கால TVET மாணவர்களுக்கான கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம் குறித்து NAITA இன் தொழில் வழிகாட்டல் பிரிவின் பரிசோதகர் கவிந்தி முத்துமாலி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன், அம்பாறை VTA இன் தொழில் வழிகாட்டல் அதிகாரி எம். எம். மஹ்ஸூன், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் CAREER ONE தளத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிறந்த நடைமுறைகளை விளக்கினார்.

Winwil Group of Companies பணிப்பாளர் லஹிரு மதுரங்கவினால் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பணியாளர் தயார்நிலை குறித்த தொழில்துறை பார்வைகளை உள்ளடக்கிய முக்கிய உரையும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நிறைவில் KOICA இலங்கையின் நாட்டுக்கான பணிப்பாளர் Lee Yoo Li உரையாற்றுகையில், இலங்கையில் டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதில் KOICA அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவை வலியுறுத்தினார்.

இந்த தெளிவூட்டல் அமர்வுகளுக்கு இணையாக, தளத்தில் பதிவு செய்தல் மற்றும் சுயவிபரக்கோவை (Portfolio) உருவாக்கம் குறித்த TVET மாணவர்களுக்கான நேரடிப் பயிற்சித் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. கல்வி அமைச்சு, TVEC, தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET), தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA), தொழில்நுட்ப தொழிற்பயிற்சி பல்கலைக்கழகம் (UoVT), பல்கலைக்கழகக் கல்லூரிகள், இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம் (CGTTI), தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC), லலித் அத்துலத்முதலி தொழிற்பயிற்சி நிலையம் (LAVTC) உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

இந்த திட்டம், CAREER ONE டிஜிட்டல் தளத்தை தழுவுவதை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் எதிர்கால பணியாளர் படையினரை ஆதரிப்பதற்காக அரசாங்க நிறுவனங்கள், TVET நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

CAREER ONE டிஜிட்டல் தளம் என்பது NVQ தகுதியுள்ள திறமையான வல்லுநர்கள் வாய்ப்புகளைக் கண்டறியும் இடமாகும். உங்கள் நிறுவனத்தையும் இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக மாற்றுங்கள் — இப்போதே CAREER ONE தளத்தில் இணைந்து, வேலைத்தளப் பயிற்சி (OJT) மற்றும் வேலைவாய்ப்புகளை இலவசமாக பதிவிடுங்கள்!