இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் ஹலால் சான்றுறுதி பேரவை கௌரவிப்பு

இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் ஹலால் சான்றுறுதி பேரவை கௌரவிப்பு

Off By Mic

நிறுவன விசேடத்துவத்திற்கான நாட்டின் மிக உயர்ந்த அங்கீகாரத்தை வழங்கும், 2023 இலங்கைத் தேசியத் தர விருதுகள் (Sri Lanka National Quality Awards 2023 (SLNQA) விழாவில், ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (Halal Assessment Council (Guarantee) Limited) (HAC) மெரிட் விருது (Merit) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 நவம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன பங்குபற்றியிருந்தார். தரம், புத்தாக்கம், தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த அர்ப்பணிப்பைக் காட்டும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டன.

இவ்விருதைப் பெற்றுக்கொண்ட HAC பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆகிப் வஹாப் கருத்து வெளியிடுகையில், “இந்த அங்கீகாரமானது, எமது முழு அணியினரின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை ரீதியான செயற்பாட்டுக்கான ஒரு கௌரவமாகும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் தரங்களைப் பேணுவதற்கான HAC கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த முயற்சிகள் மூலம், இலங்கையில் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவு மற்றும் பான உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக உணவுப் பாதுகாப்பைப் பேணி, தரத்தை மையமாகக் கொண்டு, உள்ளூர் மற்றும் உலகளாவிய நுகர்வோருக்கு சேவை செய்வதில் நிலைத்து நிற்கின்றனர்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற வகையிலான, ஹலால் இணக்கத்தை கொண்ட இலங்கைத் தயாரிப்புகளுக்கு சான்றளிப்பதில் HAC முக்கிய பங்கை வகிக்கிறது. HAC கொண்டுள்ள உறுதியான மதிப்பீடு செய்யும் முறைகள் மற்றும் ISO அடிப்படையிலான தர பின்பற்றுகை ஆகியன, இலங்கை உற்பத்தியாளர்கள் புதிய உலகளாவிய சந்தைகளை அணுகவும், சான்றளிக்கப்பட்ட பொருட்களில் நுகர்வோருக்கு நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவியுள்ளன.

2024 இல், இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் அனைத்து உணவு மற்றும் பான ஏற்றுமதிகளில் 63% என்பதுடன் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 16% ஆகும். இந்த பங்களிப்பானது, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கொண்டு நடாத்துவதில் நம்பகமான சான்றிதழுக்கான அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய வளர்ச்சிக்கான விசேடத்துவத்தை அடைவதற்கு நிறுவனங்களைத் தூண்டுவதற்குமான ஒரு தளமாக, இலங்கை தேசியத் தர விருதுகள் தொடர்ச்சியாக பங்களித்து வருகின்றது.

Photo caption: கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன அவர்கள் ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (HAC) விருதினை வழங்கி வைத்தார்.

இடமிருந்து வலமாக:அஷ்ஷைக் அப்துல்பாசித் (உள்ளக இணக்க முகாமையாளர்-HAC), திரு. நஃபாஸ் (தர உறுதிப்படுத்தலுக்கான தலைவர் – HAC). திருமதி. நாரங்கொட( பிரதி பணிப்பாளர் நாயகம்-SLSI), பேராசிரியர். தீக்‌ஷன (தலைவர்-SLSI), திரு. ஆகிப் (பணிப்பாளர் – பிரதம நிறைவேற்று அதிகாரி-HAC) கௌரவ அமைச்சர்,திரு.பிரதீப் (பிரதமரின் செயலாளர்),திரு.ருஸ்தி (கணக்காளர்- HAC), திரு.ஷாக்கீர்(சிரேஷ்ட நிறைவேற்று ஊழியர்-HAC), டொக்டர்.சித்திக்கா(பணிப்பாளர்நாயகம்-SLSI), திருமதி.நீலகாந்த்தி (பிரதி பணிப்பாளர் நாயகம் – SLSI)