இலங்கையில் கதிரியக்கவியல் கல்வியை வலுப்படுத்த RAB உடன் கைகோர்க்கும் DIMO Healthcare
DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare, இலங்கையின் சுகாதார வல்லுநர்களுக்கு மேம்பட்ட கதிரியக்கவியல் அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாக, அண்மையில் Radiology Across Borders (RAB) எனும் அரச சாரா நிறுவனத்துடன் இணைந்து RAB VITAL Ultrasound Scanning தொடர்பான ஒரு விளக்க அமர்வுத் தொடரை முன்னெடுத்திருந்தது. RAB தலைமையிலான இத்தகைய விசேட பயிற்சி அமர்வுகள் இலங்கையில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்தத் திட்டமானது, 80 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மருத்துவ வல்லுநர்களை இணைத்ததோடு, நான்கு முன்னணி மருத்துவ நிறுவனங்களான, இராணுவ மருத்துவமனை, ஹேமாஸ் மருத்துவமனை (வத்தளை), டேர்டன்ஸ் மருத்துவமனை, லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றது. இந்த அமர்வுகள் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு அடிப்படை ஸ்கேனிங் நுட்பங்கள், ICU அல்லது point-of-care சூழல்களில் FAST ஸ்கேன்கள் மற்றும் ஆழமான நாளங்களில் இரத்த உறைவு அறிதல் ஸ்கேனிங் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
இந்த பங்கேற்புடன் கூடிய பயிற்சியானது, பாடத்திட்ட கற்கையையும் நடைமுறை ரீதியான அறிவையும் ஒன்றிணைத்ததுடன், RAB நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புகழ்பெற்ற அவுஸ்திரேலிய கதிரியக்கவியல் நிபுணர்களின் (sonographers) நேரடி வழிகாட்டலின் கீழ் பங்கேற்பாளர்கள் ஸ்கேன்களை பயன்படுத்த உதவியது. தமது VITAL திட்டத்தின் மூலம், RAB மருத்துவர்கள் நோய்களை விரைவாகக் கண்டறியவும், நோயாளியின் பிரதிபலன்களை மேம்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட, கவனத்தை மையப்படுத்திய, நடைமுறை ரீதியான அல்ட்ராசவுண்ட் கல்வி வழங்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த, DIMO Healthcare பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த திஸாநாயக்க தெரிவிக்கையில், “உள்ளூர் கதிரியக்கவியல் துறையில் ஒரு முன்னோடியாகவும், Siemens Healthineers இன் அங்கீகரிக்கப்பட்ட பங்காளராகவும், உலகளாவிய மருத்துவ முன்னேற்றங்களுக்கும் உள்ளூர் நடைமுறைக்கும் இடையில் காணப்படும் அறிவு இடைவெளியை குறைப்பது எமது பொறுப்பு என நாம் நம்புகிறோம். இத்தகைய பயிற்சித் திட்டங்களை எளிதாக்குவதன் மூலம், இலங்கை முழுவதும் சுகாதாரத் தரங்களை உயர்த்துவதையும், ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் மற்றும் சிறந்த நோயாளர் பராமரிப்பை உறுதிப்படுத்தத் தேவையான கருவிகள் மற்றும் நிபுணத்துவத்துடன் எமது மருத்துவ வல்லுநர்களை வலுவூட்டுவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்வதிலும், மருத்துவமனைகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் RAB நிபுணர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு செய்வதிலும், திட்டத்தை சுமுகமாகச் செயற்படுத்துவதை உறுதி செய்வதிலும் DIMO Healthcare ஒரு முக்கிய பங்கு வகித்தது. இந்த திட்டமானது, மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும், தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் சுகாதாரச் சூழல் கட்டமைப்பின் பரந்த வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் DIMO Healthcare கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.
இந்தக் கூட்டுறவு குறித்து Radiology Across Borders (RAB) நிறுவனத்தின் Saheeda Zotter கருத்துத் தெரிவிக்கையில், “வளர்ச்சியடையும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மருத்துவர்களுடன் கதிரியக்க அறிவு மற்றும் பயிற்சியைப் பகிர்ந்து கொள்வதே RAB ஆகிய எமது இலக்காகும். இலங்கையில் DIMO Healthcare மற்றும் Siemens Healthineers உடன் பங்காளித்துவம் மேற்கொள்வது, இத்தகைய கல்வி முயற்சிகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய பிராந்தியத்தில் எமது சிறந்த தாக்கத்தை விரிவுபடுத்த வாய்ப்பளிக்கிறது. எமது VITAL திட்டம் மூலம், சமோவா, பிஜி, வியட்நாம், குக் தீவுகள், திமோர் லெஸ்டே, சொலமன் தீவுகள், பப்புவா நியூகினியா, மங்கோலியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முழுவதும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நிபுணர்களுக்கு நாம் வெற்றிகரமாகப் பயிற்சியளித்துள்ளோம். தற்போது அந்தப் பட்டியலில் இலங்கையையும் இணைப்பதில் நாம் பெருமையடைகிறோம்.” என்றார்.
நாடு முழுவதும் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கும் வல்லுநர்களுக்கும் உலகளாவிய நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம், DIMO Healthcare தொடர்ச்சியாக ஒரு தீர்வு வழங்குநரிலிருந்து, சுகாதாரத் துறைக்குள் அறிவு மற்றும் புத்தாக்கத்தை செயற்படுத்துபவராக தனது பாத்திரத்தை மீள்வரையறை செய்வதோடு, ஆரோக்கியமான தேசத்தை மேம்படுத்துதல் எனும் அதன் தூரநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.