இளம் கார் பந்தய நட்சத்திரம் யெவான் டேவிட்டை ஆதரிக்க கைகோர்க்கும் DIMO
இலங்கையை உலக அரங்கில் மேலும் உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பகிரப்பட்ட நோக்கத்துடன், முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO மற்றும் இளம் கார் பந்தய வீரர் யெவான் டேவிட் ஆகியோர் இலங்கையின் சர்வதேச மோட்டார் விளையாட்டு களத்திற்கான பாதையை மீள்வரையறை செய்யும் வகையில் ஒரு பங்காளித்துவத்தில் இணைந்துள்ளனர்.
ஆறு வயதிலேயே யெவானின் கார் பந்தயம் தொடர்பான ஆர்வம் ஆரம்பித்துள்ளது. இலங்கையின் முதன்மையான வசதியான பண்டாரகமவில் உள்ள Sri Lanka Karting Circuit (தற்போது SpeedBay) இல் தனது தந்தையுடன் சென்றபோது இந்த ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மிகுந்த ஆசை மற்றும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியதால், இதுவே யெவானின் உண்மையான அடைவாக இருக்குமெனும் நம்பிக்கையில் அவரது குடும்பத்தினரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்தனர். 2015ஆம் ஆண்டளவில், அவர் சிங்கப்பூரில் Kart பந்தயத்தில் போட்டியிட்டார். திறமையையும் திறனான வாகன செலுத்தும் நுட்பத்தையும் வெளிப்படுத்திய அவர், விரைவிலேயே மலேசியா மற்றும் மெகாவோவிலும் பந்தயத்தில் ஈடுபட்டார். 2017 ஆம் ஆண்டில், பத்து வயது யெவான் IAME Asia Series X30 சம்பியன்ஷிப் போட்டியை கெடேட் பிரிவில் வெற்றி கொண்டார். அதற்கு அடுத்த வருடம், அவர் முதன்முதலில் Kart இல் ஏறிய இடத்திலேயே பண்டாரகமவில் உள்ள SpeedBay அரங்கில் X30 ஆசியா கிண்ணத்தை கெடேட் பிரிவில் வென்றார். அங்கிருந்து, அவர் 2024 இல் Eurocup3, Formula 4, Euroformula Open உலக அரங்குகளில் நுழைவதற்கு முன்னர் தொழில்முறை Kart பந்தயத்தை முன்னெடுத்து வந்தார். 2025 இல், அவர் Euroformula Open சம்பியன்ஷிப்பில் பரபரப்பான பருவத்தில் புதுமுக வீரராக பங்கேற்றார். அதில் அவர் புதுமுகக் கிண்ணத்தை (Rookie trophy) வென்றதுடன், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவர் FIA Formula 3 இல் போட்டியிடும் முதலாவது இலங்கை வீரர் ஆவார்.
இந்தக் கூட்டணி குறித்துத் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய யெவான் டேவிட், “இந்த பங்காளித்துவமானது நாம் வெற்றி பெறவும், பிரகாசிக்கவும், மோட்டார் விளையாட்டு உலகில் இலங்கை கொடியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லவும் தூண்டும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு கூட்டுறவிற்கும் அப்பாற்பட்டதாகும். இது உலகளாவிய பந்தயத்தில் சிறந்தவர்களுடன் இலங்கையும் தோளோடு தோள் நிற்க முடியும் என்ற பகிரப்பட்ட நம்பிக்கையைக் காண்பிக்கிறது” என்றார்.
இந்தப் பங்காளித்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, “DIMO எப்போதும் இலங்கையில் வாகனம் தொடர்பான நவீன போக்குகள் மற்றும் புத்தாக்கங்கள் தொடர்பில் முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றது. அத்துடன், உள்ளூர் இளம் திறமையாளர்களை உலகளாவிய அரங்கை அடைவதற்கு ஆதரவளிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். யெவானின் துடிப்பான ஆற்றல், ஒப்பிட முடியாத திறமை மற்றும் பந்தய மனப்பாங்கு ஆகியன, ஒரு நாடாக எமக்கு மிகுந்த பெருமையைத் தரும் குணாதிசயங்களாகும். அந்த வகையில் இந்த பங்காளித்துவம் உலக அரங்கில் இலங்கையின் நிலையை மேம்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனத் துறையில் முன்னோடியாக விளங்கும் DIMO நிறுவனம், Mercedes-Benz, Jeep, Tata போன்ற உலகப் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவது முதல் பொறியியல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவது வரை, இலங்கையின் வாகனச் சூழலமைப்பை கட்டியமைப்பதில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இந்நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட பயணத் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்துறையைத் தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது. அதே நேரத்தில், துறைசார் வளர்ச்சிக்கு இன்றியமையாத அத்தியாவசியத் திறன்களையும் உள்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது. சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு உந்துசக்தியாக இருக்கும் நோக்கத்துடன் கூடிய ஒரு எதிர்காலத்தை மையப்படுத்திய நிறுவனம் எனும் வகையில், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதில் மிக ஆர்வத்துடன் DIMO உள்ளது. இந்த நிறுவனம் தமது பயிற்சி மையமான DIMO அகடமி மூலம், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குவதன் மூலம் பல இளம் இலங்கையர்கள் வாகனத் துறையில் தங்கள் கனவுத் தொழிலைத் தொடர உதவியுள்ளது. உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கும் பல்வேறு விசேட திட்டங்கள் மற்றும் மோட்டார் வாகன பந்தய முயற்சிகளுக்கு நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பகிர்வதன் மூலம் தமது ஆதரவை DIMO நீடித்து வருகிறது. இது இளம் திறமைகயாளர்ளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், உள்ளூர் வாகனத் துறையின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது. யெவான் டேவிட் உடனான இந்த பங்காளித்துவமானது உலகளாவிய மோட்டார் வாகன விளையாட்டு வரைபடத்தில் இலங்கையின் பெயரை நிலைநிறுத்த உதவுமென DIMO நிறுவனம் நம்புகிறது.
கார் பந்தயத்திற்கு அப்பால், இந்தக் கூட்டுறவானது இலங்கை உலக அரங்கில் செழித்து வளர வேண்டுமெனும் தேசியப் பார்வையையும், இளம் திறமையாளர்களுக்கு எல்லைகள் இல்லாமல் தங்கள் கனவுகளை அடைவதற்கான உத்வேகத்தை அளிப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
END