இலங்கையின் மிகப்பெரிய வாகனக் கண்காட்சிCeylon Motor Show 2025 இனிதே நிறைவு பெற்றது

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற, Ceylon Motor Show 2025 (சிலோன் மோட்டார் ஷோ 2025) பிரமாண்டமான வகையில் கொழும்பில் மீண்டும் இடம்பெற்றது. இது இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாகனக் கண்காட்சி எனும் அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. BMICH இல் 2025 ஒக்டோபர் 24 – 26 வரை நடைபெற்ற இந்நிகழ்வு, பாரியளவான ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்த்தது. இது கண்காட்சியின் அமைப்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் வாகனங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு மகத்தான வெற்றியாக அமைந்தது.
BMICH இல் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட வெஸ்டர்ன் கார் பார்க் மண்டபங்களில் (Western Car Park Halls) நடத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும். சிலோன் மோட்டார் வர்த்தக சங்கமானது (Ceylon Motor Traders Association – CMTA), சிலோன் கிளசிக் கார் கழகத்துடன் (Classic Car Club of Ceylon – CCCC) இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. LOLC Holdings PLC நிறுவனம் அதன் பிரதான பங்காளராக (Title Partner) இந்நிகழ்வை வலுவூட்டியது.
இந்த மூன்று நாள் கண்காட்சியானது, தொழில்துறை தலைவர்கள், உலகளாவிய வாகன வர்த்தகநாமங்கள் மற்றும் ஆர்வமுள்ள வாகனப் பிரியர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. அத்துடன், இலங்கையில் இன்று வரை இடம்பெற்ற மிகப்பெரிய வாகனக் காட்சியாக இது அமைந்திருந்தது. நேர்த்தி மிக்க செடான்கள் மற்றும் வலிமையான SUVகள் முதல் உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், லொறிகள் மற்றும் பல்வேறுபட்ட ஏராளமான வாகன உதிரிப்பாகங்களை, 30 இற்கும் மேற்பட்ட சர்வதேசப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்கள் தமது அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் உரிமையாளர்கள் மூலம் காட்சிப்படுத்தியிருந்தன.
அடுத்த தலைமுறைப் போக்குவரத்திற்கான வலுவான முக்கியத்துவமே, இவ்வருட கண்காட்சியின் தனித்துவமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. புதிய மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள், அத்துடன் உலகளாவிய தொழில்துறை பாதையைப் பிரதிபலிக்கும் எதிர்காலத்திற்கு ஏற்ற வாகன புத்தாக்க அம்சங்களை பார்வையாளர்கள் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர். பங்கேற்பாளர்களின் பங்கேற்புடனான அனுபவங்களும் தொழில்நுட்பக் காட்சிகளும் இக்கண்காட்சிக்கு ஒரு ஆற்றல்மிக்க ஈர்க்கும் அம்சத்தை சேர்த்தது. இது அனைத்து வயதினருக்கும் ஒரு அற்புதமான சூழலை உருவாக்கியிருந்தது.
சிலோன் கிளசிக் கார் கழகமானது (CCC), காலத்தால் அழியாத அழகைச் சேர்க்கும் வகையில், நாட்டில் இதுவரை இல்லாத மாபெரும் கிளசிக் மற்றும் விண்டேஜ் கார்களை இங்கு காட்சிப்படுத்தியிருந்தது. இதில் 150 இற்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வாகனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மிக முக்கியம்வாய்ந்த பிரிவானது, ஒவ்வொரு வாகனத்தின் பின்னணியில் உள்ள கதைகள், கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களின் கவர்ச்சிக்கு உள்ளானது. அதே நேரத்தில், வாகன சேகரிப்பாளர்கள் மற்றும் மீள்சீரமைப்பு நிபுணர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பையும் வாகன ஆர்வலர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஊடகப் பங்காளர்களின் ஆதரவால் இந்நிகழ்வின் வெற்றி மேலும் உச்சத்தை தொட்டுள்ளது. இதில் கெபிட்டல் மஹாராஜா குழுமம் உத்தியோகபூர்வ வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பங்காளராகவும், விஜய நியூஸ்பேப்பர்ஸ் உத்தியோகபூர்வ அச்சு ஊடகப் பங்காளராகவும், Emerging Media உத்தியோகபூர்வ வெளிப்புற டிஜிட்டல் சிக்னேஜ் பங்காளராகவும் தங்களது ஆதரவை வழங்கியிருந்தன.
புத்தாக்கம், பாரம்பரியம், ஆர்வம் ஆகியவற்றின் உண்மையான கொண்டாட்டமாக இடம்பெற்ற 2025 சிலோன் மோட்டார் கண்காட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. இது போக்குவரத்துப் பரிணாம வளர்ச்சியைக் கொண்டாடியதோடு, இலங்கையின் வாகனத் துறையை முன்னோக்கி தொடர்ச்சியாக கொண்டு செல்லும் நீடித்த மனப்பான்மையையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டாடியது.