
வாழ்வாதார ஊதிய கொள்கைகளை அடைவதற்காக முன்னேறும் ஆசியா பசுபிக் பிராந்தியம்
ILO கொள்கைகளுடன் இணைந்ததான, அனைவரையும் உள்ளீர்த்த ஊதிய நிர்ணயத்திற்கான உறுதிப்பாட்டை பிராந்திய ரீதியான சமூக உரையாடல் வலுப்படுத்தும்
சமூக உரையாடல் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊதிய முறைகள் மூலம் வாழ்வாதார ஊதியங்களை சாத்தியமாக்கலாம் என்பதை ஆசியா பசுபிக் பிராந்தியம் எடுத்துக் காட்டுவதாக, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் (ILO) ஒழுங்கு செய்யப்பட்ட பிராந்திய உரையாடலில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
‘ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் வாழ்வாதார ஊதிய கொள்கையை வடிவமைத்தல்’ எனும் தலைப்பில் சமூக நீதி தொடர்பான உலகக் கூட்டணியின் கீழ் உயர்மட்ட பிராந்திய உரையாடலொன்று, 2025 செப்டம்பர் 23 முதல் 26 வரை கொழும்பில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் 16 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு, பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்வாதார ஊதியம் வழங்கும் நடைமுறைச் சாத்தியங்களை ஆராய்ந்தனர்.
ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் சராசரி ஊதியம் அதிகரித்த போதிலும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் முறைசாரா தொழில்துறைகளில் ஈடுபடுவோர் குறைந்த சம்பளம், மோசமான பணிநிலைமைகள் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடுவதாக இக்கலந்துரையாடல்களில் வெளிப்பட்டது.
இந்நிகழ்வில் வீடியோ செய்தி மூலம் இணைந்த ILO பணிப்பாளர் நாயகம் Gilbert F. Houngbo தெரிவிக்கையில், “தொழிலாளர்கள் வெறுமனே உயிர் வாழ்வதற்காக அல்லாமல், மரியாதையுடன் வாழ்வதற்கு அவசியமான ஊதியமே வாழ்வாதார ஊதியமாகும். அதாவது ஆரோக்கியமான உணவு, தகுந்த வீடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, தேவைப்படும் வேளையில் சுகாதார சேவைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான வருமானமே வாழ்வாதார ஊதியமாகும்.” என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெனாண்டோ அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
சமூக உரையாடல், சமத்துவம், தொழிலாளர்களின் தேவைகளும் நிறுவனங்களின் பொருளாதார யதார்த்தங்களுக்கும் இடையிலான சமநிலைப்படுத்தல், குறைந்த ஊதியத்திற்கான அடிப்படைக் காரணிகளை கண்டறிதல், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ILO அமைப்பின் வாழ்வாதார ஊதியக் கோட்பாடுகள், நம்பகமான மற்றும் பயனுள்ள ஊதிய நிர்ணய செயன்முறைகளை உருவாக்க அத்தியாவசியமானவை என பங்கேற்பாளர்கள் இங்கு வலியுறுத்தினர்.

வாழ்வாதார ஊதிய முயற்சிகள் மற்றும் தேசிய ஊதிய நிர்ணய முயற்சிகள் ILO அமைப்பின் கோட்பாடுகளுடன் ஒத்திசையும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பொருளாதார வளர்ச்சியானது மேம்பட்ட வாழ்வாதாரம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பான நிலைமைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதையும் இங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்கள் எடுத்துக் கூறின.
இது குறித்து தெரிவித்த, ILO உதவிப் பணிப்பாளர் நாயகமும் ஆசியா பசுபிக் பிராந்திய பணிப்பாளருமான Kaori Nakamura-Osaka, “பெரும் தொழிலாளர் பலமும் உலகளாவிய பொருளாதார இயந்திரமுமாக விளங்கும் இப்பிராந்தியத்தில், வாழ்வாதார ஊதியம் வெறுமனே ஒரு இலட்சியம் மாத்திரமல்ல; சமூக உரையாடல் மூலம் நிலைப்படுத்தப்படும் முறையான அணுகுமுறையால் சாத்தியமாகக் கூடியது என்பதை நிரூபிக்க முடியும்.” என குறிப்பிட்டார்.
குறைந்தபட்ச ஊதியத் தரவுகளை ஒரே இடத்தில் கொண்டுவரும் பிராந்தியத்தின் முதலாவது டிஜிட்டல் களஞ்சியமான ‘Asia-Pacific Digital Repository for Minimum Wages’ கட்டமைப்பும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஊதிய நிர்ணய விடயத்தில் அணுகல் மற்றும் வெளிப்படைத் தன்மை, ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊதியக் கொள்கைகளை உருவாக்க உறுப்பு நாடுகளை ஆதரிப்பதற்கான ILO அமைப்பின் பரந்த முயற்சிகளின் ஒரு நடவடிக்கையாகும்.
உயர்மட்ட உரையாடலைத் தொடர்ந்து, அரசாங்கம், தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு வாழ்வாதார ஊதியங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊதியக் கொள்கைகளை, பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று நாள் தொழில்நுட்ப பயிற்சியும் நடத்தப்படுகின்றது.
இந்த உரையாடலானது, 2024ஆம் ஆண்டு வாழ்வாதார ஊதியக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கங்கள், தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே ஏற்படுத்தப்பட்ட வரலாற்று புகழ்வாய்ந்த ஒப்பந்தத்தையும், 2025ஆம் ஆண்டு வாழ்வாதார ஊதியங்களை கணக்கிடுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நாடுகளை ஆதரிக்கும் முதலாவது உலகளாவிய நிகழ்ச்சியின் ஆரம்பத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ILO அமைப்பின் கருத்தின்படி, வாழ்வாதார ஊதியம் என்பது தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் உணவு, வீடு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கத் தேவையான வருமானமாகும். இது குறைந்தபட்ச ஊதியத்திலிருந்து வேறுபடுகிறது. குறைந்தபட்ச ஊதியமானது சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்ட அடிப்படை ஊதியமாகும். இது தொழிலாளர்களை மிகக் குறைந்தபட்ச சம்பளத்தின் மூலம் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறான குறைந்தபட்ச ஊதியம் எப்போதும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில்லை. அத்துடன், அது தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான அளவிற்கு போதுமான வருமானத்தை தானாக வழங்குவதை உறுதி செய்வதும் இல்லை.