கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எளிதான கட்டணத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் 60 மாதங்கள் வரையான நீடிக்கப்பட்ட மீள் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. கிரண்ட்போஸ் (Grundfos) நீர்ப் பம்பிகள், மின்பிறப்பாக்கிகள், மின்பிறப்பாக்கி உதிரிப் பாகங்கள், ஏவரி வே-ட்ரோனிக்ஸ் (Avery Weight-Tronix) நிறை அளவீட்டுக் கருவிகள், ABB மோட்டார்கள் மற்றும் கட்டுப்படுத்திகள், இனவர்டேக் டிரைவ் (Invertek Drive) மின்சக்தி சேமிப்பு முறைகள், மருத்துவ மற்றும் பகுப்பாய்வு முறைகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த சலுகைகளை பெறலாம்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், இந்த மூலோபாய கூட்டாண்மையானது கொமர்ஷல் வங்கி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, தாம் கொள்வனவு செய்யும் முழுத் தொகையின் சமமான மாதாந்த தவணைகளில் பணத்தை செலுத்துவதற்கு உதவுகிறது. குறைந்தபட்சம் ரூ. 25,000 முதல் ரூ. 1 மில்லியன் வரையிலான பரிவர்த்தனைகள் இந்த எளிய கட்டணத் திட்டத்திற்குத் தகுதி பெறுகின்றன.

ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிதிப் பணிப்பாளர் திருமதி சஷி ஜயகொடி இது பற்றித் தெரிவிக்கையில், “சவாலான பொருளாதார நிலைமை கொண்ட இந்தக் காலக்கட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு நடைமுறை ரீதியாகவும் அதே சமயம் கட்டுப்படியான வகையிலான விலையிலும் சலுகைகளை வழங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மிகவும் அவசியமாக காணப்படுகின்றது. இந்தச் சூழலில், கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு எமது பரந்த அளவிலான தயாரிப்புகளின் அணுகல் மற்றும் கட்டுப்படியாகும் தன்மையை மேம்படுத்துவதற்காக, கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுச் சேர்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Hayleys குழுமத்தின் தொழில்துறை உள்ளீடுகள், மின்சக்தி மற்றும்  வலுசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிறுவனம், தொழில்துறை இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் பகுப்பாய்வுத் தீர்வுகள், தொழில்துறை மூலப்பொருட்கள், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆகிய நான்கு மூலோபாய வணிக அலகுகளை உள்ளடக்கியது.

Commercial Bank of Ceylon அட்டை மையத்தின் தலைவர் நிஷாந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரும், பன்முகப்படுத்தப்பட்ட Hayleys குழுமத்தின் உறுப்பினருமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் கொமர்ஷல் வங்கி மகிழ்ச்சியடைகிறது. எமது கடனட்டைதாரர்கள் அவர்களது நிதித் தேவைகளை எளிதாக்கும் வகையில், எளிய கட்டணத் திட்டங்களைப் பெறுவதன் மூலம் இந்த கூட்டாண்மையின் எளிமையான விதிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது நிதி தொடர்பான அழுத்தத்தை குறைக்க முடிகின்ற அதே வேளையில், தங்களுக்கு வசதியான பொருட்கள் மற்றும் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி என்பதோடு, உலகின் சிறந்த 1,000 வங்கிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்கையிலுள்ள முதலாவது  வங்கியுமாகும். இலங்கையின் சிறிய, நடுத்தர தொழில்முனைவோர் (SME) துறைக்கு மிகப் பாரிய கடன் வழங்குனரான இவ்வங்கியானது, நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் முன்னணியில் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகளையும் 966 தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களின் (ATM) வலையமைப்பையும் கொண்டுள்ளது. பங்களாதேஷில் 20 கிளைகள், மியன்மாரின் நே பியடோ (Nay PyiTaw) இல் ஒரு நுண்நிதி நிறுவனம், மாலைதீவில் ஒரு முழுமையான Tier i பெரும்பான்மை பங்குகளை கொண்ட வங்கி எனும் வகையில், இலங்கையில் உள்ள வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடயத்தையும் கொண்ட வங்கியாக விளங்குகின்றது.

Image Caption – இடமிருந்து வலமாக, ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் தலைவர் சமீர ஹபரகொட, நிதிப் பணிப்பாளர் சஷி ஜயகொடி ஆகியோர் கொமர்ஷல் வங்கியின் கடனட்டை மைய தலைவர் நிஷாந்த டி சில்வா, அட்டை சந்தைப்படுத்தல் மற்றும் வணிக உறவுகள் சிரேஷ்ட முகாமையாளர் காலிங்க திவாரத்ன, அட்டை மைய நிறைவேற்று அதிகாரி சத்துர தஹநாயக்க ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்ட போது…