பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு
பழம்பெரும் அறிஞரும் கலாசாரவாதியுமான பேராசிரியர் குணபால பியசேன மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மலலசேகர அறக்கட்டளை “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” (பேராசிரியர் குணபால மலலசேகர: ஒரு புகைப்பட ஓவியம்) எனும் நூலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. எட்டு வருட காலமாக மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, சங்கைக்குரிய வெத்தர மஹிந்த தேரரால் எழுதப்பட்ட இந்நூலானது, இலங்கையின் கல்வி, பௌத்தம், கலாசார பாரம்பரியத்திற்கு பேராசிரியர் மலலசேகர ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளுக்கான மனப்பூர்வமான நினைவஞ்சலியாகும்.
‘GPM’ என அழைக்கப்படும் பேராசிரியர் மலலசேகர, காலனித்துவ ஆட்சியின் சவால்களுக்கு மத்தியில் கல்விச் சீர்திருத்தம் மற்றும் தேசியத்தின் பெருமைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவராவார். பௌத்த கல்வி இயக்கத்திலுள்ள செல்வாக்கு மிக்க நபர்களால் ஈர்க்கப்பட்ட அவர், இலங்கையின் தேசிய கல்விக் கட்டமைப்பை வடிவமைப்பதிலும், தலைமுறைகள் கடந்து எதிரொலிக்கும் கலாசார விழுமியங்களை உள்வாங்குவதிலும் முக்கிய பங்கை ஆற்றியிருந்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவில் குடும்ப உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், அறிஞர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் நூலின் ஆசிரியர் சங்கைக்குரிய வெத்தர மஹிந்த தேரர், இந்த முக்கியமான திட்டத்தை மேற்கொள்ள தனக்கு ஏற்பட்ட ஊக்கம் தொடர்பில் பகிர்ந்துகொண்டார்:
“பேராசிரியர் குணபால மலலசேகர பற்றி எழுதப்பட்ட முந்தைய புத்தகங்களை நான் படித்ததில் இருந்து, இந்நூலை வெளியிடுவதற்கான முதன்மை நோக்கம் உருவானது. அவற்றைப் படிக்கும் போது, பௌத்த மதத்திற்கும் எமது நாட்டிற்கும் அவர் ஆற்றிய சில தாக்கங்கள் முழுமையாகப் பிரதிபலிக்கப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன். பேராசிரியர் மலலசேகரவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு விரிவான சித்தரிப்பை உருவாக்க வேண்டும், ஒரு சிறந்த புகைப்படத் தொகுப்பு உட்பட அவரை வரையறுத்த உண்மையான தருணங்கள் மற்றும் அவரது அனுபவங்களை உயிர்ப்பிப்பது மிக அவசியமான விடயமென நான் கருதினேன்.”
“இந்த இலக்கை மனதில் கொண்டு, நான் ஒரு விரிவான ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினேன். இந்த நூல் பேராசிரியர் மலலசேகரவின் பாரம்பரியத்தை துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்தி, வாசகர்கள் அவற்றை இலகுவாக அணுகக்கூடியதாக்கும் வகையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தேன். இந்த புத்தகம் அவரது முக்கியமான வாழ்க்கை வரலாற்றை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அவரது விலைமதிப்பற்ற பங்களிப்புகளுடன் வாசகர்களை நெருக்கமாக்குகிறது.” என்றார்.
இந்த திட்டத்திற்காக சங்கைக்குரிய மஹிந்த தேரர் கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் பேராசிரியர் மலலசேகரவின் பேரனும் மலலசேகர அறக்கட்டளையின் ஸ்தாபகருமான அஷான் மலலசேகர, தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்:
“சங்கைக்குரிய வெத்தர மஹிந்த தேரரின் சிந்தனையில் தொகுக்கப்பட்ட இப்பணியை கௌரவிக்கும் வகையில், மலலசேகர அறக்கட்டளை மற்றும் எமது குடும்பத்தின் சார்பாக, இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். எனது பாட்டனாரின் வாழ்வில் அங்கம் வகிக்கும் அர்ப்பணிப்புள்ள அறிஞரான சங்கைக்குரிய மஹிந்த தேரர், கல்வி, பௌத்த புலமை ஆகியவற்றில் GPM இன் நீண்ட பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது மனிதாபிமான பணி மற்றும் ஆழ்ந்த பங்களிப்புகள் உள்ளிட்ட GPM இன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான அவரது அயராத அர்ப்பணிப்புக்காக நாம் அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
“Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” எனும் நூலானது ஒரு அறிஞருக்கான அஞ்சலி மாத்திரமல்லாது, இலங்கை சமூகத்தினதும் உலகளாவிய பௌத்த சிந்தனையில் அழியாத தடம் பதித்த ஒரு அன்பு கொண்ட தலைவருக்கான ஒரு அஞ்சலியாகும். மலலசேகர அறக்கட்டளையின் இந்த வெளியீடானது, பேராசிரியர் மலலசேகரவின் வாழ்க்கையை வரையறுத்த விழுமியங்களையும் அவரது தூர நோக்கையும் பகிர்வதன் மூலம் எதிர்கால சந்ததியினரை மேலோங்குவதற்காக ஊக்குவிக்க முயற்சிக்கிறது.
தொடர்புகளுக்கு:
மலலசேகர அறக்கட்டளை
Email: [email protected]
தொலைபேசி: +94 (0)11-2345678