2026 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்திய Hayleys Agriculture
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த ஜனவரி 23 முதல் 25 வரை இடம்பெற்ற 2026 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், இலங்கையின் விவசாயத்துறையை மறுசீரமைப்பதற்கான தனது அர்ப்பணிப்பை Hayleys Agriculture Holdings Limited நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நவீன விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாயத் தயாரிப்புகளை விவசாய சமூகத்தினருக்கு, குறிப்பாக வட மாகாணத்திற்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதில் இந்நிறுவனம் காட்டி வரும் அக்கறையானது, விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை ரீதியான புத்தாக்கத்தில் ஒரு முதன்மை நிறுவனமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
விவசாயிகள், விவசாய வணிகப் பங்குதாரர்கள், விநியோகஸ்தர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்கள் என அனைவரிடையேயும் பெரும் ஆர்வத்தைத் தூண்டிய Hayleys Agriculture காட்சிக் கூடம், ஒரு வழக்கமான கண்காட்சிக்கூடமாக அன்றி, அனைவரும் பங்குபங்குபற்றுகின்ற அனுபவத்தை வழங்கும் தளமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் விவசாய நடைமுறைகளை நாடு முழுவதும் எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், நவீன விவசாயத்தை அடுத்த தலைமுறை விவசாயிகளுக்கு எவ்வாறு எளிதாகக் கொண்டு செல்லலாம் என்பதையும் இது எடுத்துக்காட்டியது.
நவீனமான, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத் தீர்வுகள் மூலம் எவ்வாறு உற்பத்தித் திறனையும் செயற்பாட்டுத் திறனையும் கணிசமாக மேம்படுத்த முடியும் என்பதை பார்வையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் உதவியது. ஜப்பானிய வர்த்தக நாமமான Kubota (குபோட்டா) போன்ற உலகப்புகழ் பெற்ற வர்த்தக நாமங்களுடனான வலுவான பங்காளித்துவத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் Hayleys Agriculture நிறுவனத்தின் பங்களிப்பை இது மீள வலியுறுத்தியது.
காட்சி அறைக்கு ஒரு விறுவிறுப்பான மற்றும் நேரடி அனுபவத்தை வழங்கும் வகையில், HJS Condiments நேரடியாக பார்வையிடும் வகையிலான உடனடி சமையல் நிலையமொன்றை முன்னெடுத்திருந்தது. இதில் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட முருங்கை மற்றும் நீல சங்குப் பூ, Govi Aruna virgin தேங்காயெண்ணெய், Island Magic Peanut Butter போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இடியப்பம், தோசை, ரொட்டி, போன்ற ஆக்கபூர்வமான உணவுகள் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இது அடிப்படை விவசாயத்திற்கும் போசணை, சுவை, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டியது.
மூன்று நாட்களும் நடைபெற்ற டிஜிட்டல் விளையாட்டுப் போட்டிகள் மூலம் பார்வையாளர்களின் ஈடுபாடு மேலும் அதிகரித்தது. இதில் தினமும் 10 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு யாழ்ப்பாணத்தின் முன்னணி திரையரங்குகளின் சினிமா டிக்கெட் வவுச்சர்கள் வழங்கப்பட்டன. இது பார்வையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, Hayleys Agriculture வர்த்தக நாமத்துடன் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கியது. இதற்கு மேலதிகமாக, Quality Seeds Company (Pvt) Ltd) நிறுவனம் பல்வேறு வகையான பூச்செடிகள் மற்றும் தாவரங்களை காட்சிப்படுத்தியதோடு அவற்றை விற்பனையும் செய்தது.
இந்நிகழ்வு குறித்து Hayleys Agriculture Holdings Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி ஜயந்தி தர்மசேன தெரிவிக்கையில், “புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் விவசாயிகளையும் சமூகங்களையும் வலுப்படுத்துவதில் Hayleys Agriculture மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது. நவீன தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை ரீதியான தீர்வுகளை இணைப்பதன் மூலம், விவசாயத்தை எதிர்காலத்திற்குத் தயாரான மற்றும் நிலைபேறான ஒரு துறையாக மாற்றுவதற்கு நிறுவனம் ஆதரவளிக்கிறது. யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் சமூகங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும், எமது தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகளை விளக்கவும் ஒரு சிறந்த தளமாக அமைகின்றன.” என்றார்.
Hayleys Agriculture Holdings Limited நிறுவனம், விவசாயிகளை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் இணைப்பதன் மூலமும், விவசாயத் துறையை நவீனப்படுத்துவதன் மூலமும் நிலைபேறான பொருளாதார மதிப்பை உருவாக்குகிறது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனங்களுடனான பங்காளித்துவம் மற்றும் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன் ஆகியவற்றின் உதவியுடன், இந்நிறுவனம் எதிர்காலத்திற்கு ஏற்றவாறான ஒரு விவசாயத் தொழில்துறையை மும்முரமாக உருவாக்கி வருகிறது.