2025 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பையும் வளர்ச்சியையும் கொண்டாடிய Agromax Industries

Off By Mic

இலங்கையின் முன்னணி நீர்ப்பம்பி உற்பத்தியாளரும், புத்தாக்கமான நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் விளங்கும் Agromax நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த விற்பனை மாநாட்டை வாஸ்கடுவவில் உள்ள Citrus Hotel கோலாகலமாக கொண்டாடியது. Agromax நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர், முகாமைத்துவ உறுப்பினர்கள், விற்பனைக் குழு, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள், பின்புல அலுவலக ஊழியர்கள் மற்றும் லொஜிஸ்டிக் குழுவினர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில், இலங்கையில் முதல் தர நீர்ப்பம்பி நிறுவனமாக Agromax விளங்குவதற்கு பங்களித்த ஊழியர்கள் அவர்களது விசேடத்துவம் மற்றும் சாதனைகளை பாராட்டி, விருந்தளிக்கப்பட்டு கொண்டாடப்பட்டனர்.

நாடு முழுவதும் 1,500 இற்கும் மேற்பட்ட வியாபார முகவர்கள், பரந்த தயாரிப்பு வரிசைகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பலம் மிக்க குழாமின் மூலம், வீடு, விவசாயம், தொழிற்துறை, கட்டடத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தாக்கமான தொழில்நுட்பத்தையும் நம்பகமான தரத்தையும் வழங்குவதில் Agromax தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன், நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர், நிதி முகாமையாளர், தொழிற்சாலை முகாமையாளர் ஆகியோருக்கு, அவர்கள் கொண்டுள்ள உறுதியான சிந்தனையையும், தலைமைத்துவ திறமையையும் அங்கீகரித்து பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். அதேவேளை, சிறந்த செயற்பாட்டு ஜூனியர் ஊழியர், மிகவும் மதிப்புமிக்க அலுவலக நிறைவேற்று ஊழியர், சிறந்த விற்பனையாளர் உள்ளிட்ட பிரத்தியேகமான விருதுகளும் இங்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் பிரதான விருந்தினராக விவசாய, கால்நடை பராமரிப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பி.எல்.ஆர். ரஹுமான் பங்குபற்றினார். அத்துடன், நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சதாத் மொஹமட், நிறுவனத்தின் தலைவர் மொஹமட் ரியால் ரிஹிமி, நிதி முகாமையாளர் யொஹான் விஜேசிங்க, தேசிய விற்பனை முகாமையாளர் சமீர பண்டார ஆகியோர் இங்கு முக்கிய உரைகளை நிகழ்த்தினர். மிகச்சிறிய வணிக முயற்சியாக ஆரம்பித்து, மத்திய மற்றும் பாரிய தொழில் நிறுவனமாக மாறி, இன்று பியகமவில் தனது சொந்த ஒன்றிணைத்தல் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி நிலையத்துடன் Agromax நிறுவனத்தின் பயணம் தொடர்பில் அவர்கள் இதன்போது எடுத்துக் கூறினர். நிறுவனத்தின் சிறந்த கொள்கைகளால் வழிநடத்தப்படும் கலாசாரம், ஊழியர் மேம்பாடு; தொழில் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியன இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டன.

இங்கு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சதாத் மொஹமட், “இலங்கை வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை, உயர் தரத் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் எமது திறமையே Agromax நிறுவனத்தின் வெற்றிக்கான அடிப்படை காரணியாகும். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தரமான உற்பத்தியை நியாயமான விலையில் வழங்குவதே எமது உறுதியான வாக்குறுதியாகும். எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள், நம்பகமான வியாபார முகவர்கள் மற்றும் கிராமிய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை மையமாகக் கொண்ட சமூக அர்ப்பணிப்பே எமது முக்கிய வலிமையாகும்.” என்றார்.

நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி தொடர்பான யுத்திகளை பகிர இந்த மாநாடு வாய்ப்பு வழங்கியதோடு, நிறுவனத்தின் விரிவாக்கல் திட்டங்கள், உள்ளூர் பல்கலைக்கழகங்களுடனான அறிவு பரிமாற்ற ஒத்துழைப்புகள் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழிலாளர் படையணிகளை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சமூக நலனையும், இளைஞர் மேம்பாட்டையும் தனது பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டங்கள் (CSR) மூலம் ஆதரிக்கும் Agromax நிறுவனம், உலகளாவிய தரத்துடன் கூடிய உள்ளூர் வர்த்தகநாமமாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறது.