மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலுவான ஆதரவு மூலம் இலங்கையில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் கேம்பிரிட்ஜ்
‘எதிர்காலத்தை வழிநடத்தல்: மாறும் உலகில் மாணவர்கள் வெற்றியடையத் தயாராக்குதல்’ எனும் ‘எதிர்காலத்திற்கான கற்றல் அறிக்கையை வெளியிடுகிறது

வலுப்படுத்தப்பட்ட பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் புதுப்பிக்கப்பட்ட மூலோபாய நோக்கத்தையும் உள்ளடக்கியவாறு, நாட்டின் கல்வித் துறையின் எதிர்கால தூரநோக்கை மேம்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள கற்போர் மற்றும் கற்பிப்போருக்கான தனது அர்ப்பணிப்பை Cambridge University Press & Assessment மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் ஒரு சட்டபூர்வ நிறுவனத்தை நிறுவுவதன் மூலம், தனது நீண்டகால முதலீட்டை வெளிப்படுத்துவதோடு, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடசாலைகளுடனும் கூட்டாண்மை நிறுவனங்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்பை கேம்பிரிட்ஜ் ஏற்படுத்துகிறது.
இந்த அறிவிப்பு நிகழ்வானது, கேம்பிரிட்ஜின் உலகளாவிய மற்றும் பிராந்தியத் தலைவர்களின் பங்கேற்புடன் சிறப்பிக்கப்பட்டது. இதில், ரொட் ஸ்மித் (குழும முகாமையாளர் – சர்வதேசக் கல்வி), அருண் ராஜமணி (முகாமைத்துவ பணிப்பாளர் – தெற்காசியா), மற்றும் சஹாரா அன்சாரி (நாட்டு தலைமை அதிகாரி – இலங்கை மற்றும் மாலைதீவு) ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களின் பங்கேற்பானது, இலங்கைக்கு கேம்பிரிட்ஜ் வழங்கும் உலகளாவிய முக்கியத்துவத்தையும் மூலோபாயத் திருப்பத்தையும் வலியுறுத்தியது.
இது குறித்து, கேம்பிரிட்ஜ் தெற்காசிய முகாமைத்துவ பணிப்பாளர் அருண் ராஜமணி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும், ஆசிரியருக்கும் கேம்பிரிட்ஜின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வு இதுவாகும். கேம்பிரிட்ஜின் தெற்காசிய பிராந்திய மூலோபாய நடவடிக்கையில் இலங்கை விசேட இடத்தை பெற்றள்ளது. தரமான கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீட்டை வலுப்படுத்துவதில் எமது பங்களிப்பு அதிகரித்து வருகிறது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான கல்விச் சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.” என்றார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நாட்டுக்கான தலைவர் சஹாரா அன்சாரி குறிப்பிடுகையில், “இலங்கை ஒரு சுறுசுறுப்பான, வேகமாக முன்னேறும் கல்விச் சமூகத்தைக் கொண்ட நாடாகும். எமது இந்த புதிய அர்ப்பணிப்பானது, நாம் இலங்கையின் பாடசாலைகள், ஆசிரியர்கள், குடும்பங்களுடன் இணைந்து நிற்பது தொடர்பான எமது வாக்குறுதியாகும். உலகின் சிறந்த கல்விப் பாதைகளை ஒவ்வொரு மாணவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு நாம் உறுதியுடன் இருக்கிறோம்.” என்றார்.
மாணவர்களை சர்வதேசக் கல்வியால் வலுப்படுத்தல்
Cambridge International ஆனது, தெற்காசியாவில் 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுடன் இணைந்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் அதன் சர்வதேச கல்விச் சேவைகளுக்கான முக்கிய பிராந்தியமாக இலங்கை முக்கிய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

‘Cambridge in Sri Lanka: Leading the Future’ (இலங்கையில் கேம்பிரிட்ஜ்: எதிர்காலத்தை வழிநடத்துதல்) எனும் இந்நிகழ்வின் போது, நிறுவகத்தின் சர்வதேசக் கல்விக்கான குழும முகாமைத்துவ பணிப்பாளர் ரொட் ஸ்மித், Navigating the Future: Preparing Learners to Thrive in a Changing World எனும் புதிய அறிக்கையை வெளியிட்டார். உலகளாவிய ரீதியில் 3,201 ஆசிரியர்களும் 3,840 மாணவர்களும் வழங்கிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது, வேகமாக மாறும் உலகில் மாணவர்கள் தங்களுக்கு அவசியமான திறன்களையும் அவற்றை வளர்த்துக் கொள்வதில் உள்ள சவால்களையும் ஆராய்கிறது. கற்றலை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கும் வாய்ப்புகள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கவனச் சிதறல், விமர்சன சிந்தனை மற்றும் தொடர்பாடல் திறன்களில் ஏற்படும் பாதிப்புகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த அறிக்கையானது, கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் எதிர்காலத்திற்கு தயார்நிலை கொண்ட கல்வியை வடிவமைப்பவர்களுக்கானதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பாடசாலைகளுக்கு உலகளாவிய ரீதியான தயார்நிலைக்கான ஆதரவு
ஆசிரியர்களின் திறன் மேம்பாடு மற்றும் வகுப்பறைச் செயல்திறன் மேம்பாட்டுக்காக பல்துறை அணுகுமுறையுடன் கேம்பிரிட்ஜ் செயல்படுகிறது. இதில் Professional Development Qualifications (PDQs), Professional Development Programmes (PDPs) மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் ஆகியன உள்ளடங்குகின்றன.
இந்த பயிற்சிகள் யாவும், அனைவரையும் உள்ளிணைத்தல், மாணவர் மைய கற்பித்தல், வகுப்பறைகளில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் பயனுள்ள வகையிலான பயன்பாடு, மாணவர் நலன், தலைமைத்துவம் மற்றும் சமூக உணர்ச்சி தொடர்பான கற்றல் போன்ற முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆசிரியர்களை இந்த திறன்களால் வலுப்படுத்துவதன் மூலம், இலங்கையின் கல்வி பெறுபேறுகளை மாற்றக்கூடிய, எதிர்காலத்துக்கு தயாரான ஆசிரியர் சமூகத்தை உருவாக்குவதே கேம்பிரிட்ஜின் நோக்கம் ஆகும்.
ஆங்கிலத் திறன்களுக்கான அணுகலை விரிவுபடுத்துதல்
பாடத்திட்டங்கள் மற்றும் தகுதிகளுக்கு மேலதிகமாக, Cambridge English ஆனது இலங்கையில் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. வருடாந்தம் 40,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்கான பரீட்சைகளில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 250 இற்கும் அதிகமான பதிவுசெய்தல் மையங்கள் மூலம், சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் கூட இவற்றை தற்போது அணுகக் கூடியதாக உள்ளது. மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக ஆங்கிலத் திறமையை வெளிப்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது. உலகளாவிய ரீதியில், வருடாந்தம் 130 நாடுகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான Cambridge English Qualifications (CEQs) பரீட்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், இத்தகுதிகள் 25,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், தொழில்வழங்குனர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. வாசிப்பு, எழுதுதல், கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றில் நிலையான திறன்களை வளர்க்க CEQs வடிவமைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் கல்விச் செல்வமாக திகழ்கிறது.
Linguaskill, Cambridge’s flexible, செயற்கை நுண்ணறிவினால் (AI) வழிநடத்தப்படும் ஒன்லைன் ஆங்கிலப் பரீட்சை ஆகியன CEFR கட்டமைப்புடன் ஒத்திசைக்கப்பட்ட, விரைவான மற்றும் நம்பகமான பெறுபேறுகளை வழங்குகிறது. உலகளாவிய ரீதியில் நம்பிக்கைக்குரிய இந்தக் கருவியானது, இலங்கையின் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு, நுழைவு மற்றும் பயிற்சித் தேவைகளுக்கான நவீன மற்றும் மாற்றத்திற்கேற்ப செயற்படுகின்ற வசதியை வழங்குகிறது.
இத்தகைய மதிப்பீடுகள் யாவும் தன்னம்பிக்கை கொண்ட தொடர்பாளர்கள், விமர்சன சிந்தனையாளர்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சூழலில் வெற்றியடையக்கூடிய தனிநபர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.
பிராந்தியத் தேவைகளுக்கான புத்தாக்கங்கள்
இலங்கை குடும்பங்களின் மாறிவரும் தெரிவுகளை உணர்ந்து, விசேடத்துவம் வாய்ந்த நாட்டுக்கான குழுவினரை உருவாக்கியுள்ளதன் மூலம் உள்நாட்டு திறமையாளர்கள் மீது முதலீடுகளை கேம்பிரிட்ஜ் மேற்கொண்டுள்ளது. தெற்காசியாவில் தனது தடத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்கும் கேம்பிரிட்ஜ் நிறுவகம், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, வாழ்நாள் முழுவதுமான கற்றல் மற்றும் உலகளாவிய தயார்நிலை ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. புத்தாக்கமான திட்டங்கள், கடுமையான மதிப்பீடுகள் மற்றும் தனிப்பயன்மிக்க வளங்கள் மூலமாக, இலங்கையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட முயற்சிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
புதிய முதலீட்டின் மூலம், இலங்கையில் தனது எல்லையை விரிவுபடுத்தி, மாணவர்களுக்கான ஆதரவு, ஆசிரியர்களுக்கு வலிமை மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து, உலகளாவிய போட்டியிடும் கல்வி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கேம்பிரிட்ஜ் செயல்படுகிறது.
தனது பாரம்பரியம், நம்பகத்தன்மை மற்றும் உள்நாட்டில் அதிகரித்துவரும் இருப்பு ஆகியவற்றின் மூலம், இலங்கைக்கான நம்பிக்கைக்குரிய கல்வி துணையாளராக தனது பங்கினை Cambridge University Press & Assessment மீண்டும் வலியுறுத்துகிறது.
Cambridge பற்றி
Cambridge University Press & Assessment ஆனது, மதிப்பீடு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கல்வி வெளியீடு ஆகியவற்றில் உலகின் முன்னணியில் திகழும் நிறுவகமாகும். நாம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கம் என்பதோடு, “உயர்ந்த சர்வதேச மட்டத்தில் கல்வி, கற்றல் மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்வதன் மூலம் சமுதாயத்திற்குப் பங்களித்தல்” எனும் பல்கலைக்கழகத்தின் பணிநோக்கை பகிர்கிறோம். இந்த இணைப்பானது, ஆராய்ச்சி, சர்வதேசக் கல்வி, ஆங்கிலக் கற்றல் மற்றும் கல்வி வெளியீடு ஆகிய துறைகளில் எமக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்குகிறது. மேலதிக விபரங்களுக்கு: www.cambridgeinternational.org