போலி உதிரிப் பாகங்களை எதிராகப் போராடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் CMTA மற்றும் சுதத் பெரேரா அசோசியேட்ஸ்
தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) மற்றும் புலமைச் சொத்துரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சட்ட நிறுவனங்களில் ஒன்றான சுதத் பெரேரா அசோசியேட்ஸ் ஆகியன இணைந்து, நாட்டில் அதிகரித்து வரும் போலியான உதிரிப் பாகங்களின் சந்தை தொடர்பில், CMTA உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை அண்மையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் முன்னெடுத்திருந்தது.
இந்த நிகழ்வின்போது, CMTA உறுப்பினர்களுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களையும், போலித் தயாரிப்புகளின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் சுதத் பெரேரா அசோசியேட்ஸ் வழங்கியிருந்தது. நுகர்வோரையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க, இத்தொழில்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
போலியான உதிரிப் பாகங்கள் அடையாளம் காண்பதற்கு கடினமாகும். ஏனெனில் அவை அசல் பாகங்கள் போன்றதாக பிரதி செய்யப்பட்ட வணிக இலச்சினைகளுடனும் பொதியிடலுடனும் வருகின்றன. வாகனங்கள், ட்ரக்குகள், மோட்டார் சைக்கிள்களுக்கான பிரேக் பேட்கள் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாகங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்த சிக்கலாக அமைகின்றது. பெரும்பாலும், இந்த போலி உதிரிப் பாகங்கள் உரிய பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்வதில்லை, இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்தான நிலை உருவாகிறது.
சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் விரான் டி சொய்சா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “Toyota மற்றும் Honda ஆகிய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அளப்பரிய விடயங்கள் மற்றும் சட்டவிரோத உதிரிப் பாகங்கள் விற்பனைக்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்த நாம், சுதத் பெரேரா அசோசியேட்ஸுடன் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். இந்த சட்டவிரோத உதிரிப் பாகங்களின் விற்பனையைத் தடுக்கவும், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்ட நடவடிக்கைகள் மூலம் எம்மால் முடிந்த அனைத்து விடயங்களையும் நாம் ஒன்றிணைந்து முன்னெடுப்பது அவசியமாகும்.” என்றார்.
சுதத் பெரேரா அசோசியேட்ஸின் ஸ்தாபகரும் அதன் முகாமைத்துவப் பங்காளருமான சுதத் பெரேரா தெரிவிக்கையில், “போலி உதிரிப் பாகங்களின் விற்பனையானது சில்லறை விற்பனை பொருட்கள், மருந்துகள், விளையாட்டு உபகரணங்கள், வாகன உதிர்ப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் பாரிய பிரச்சினையாகும். இந்த சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். வாகனத் துறையைப் பொறுத்தவரை, இந்தப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க, CMTA மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், போலியான பொருட்களின் சட்டவிரோத வர்த்தகம் காரணமாக மிகவும் மதிப்புமிக்க அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுகிறது. இந்த பாகங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, சுங்கச் செயன்முறைகளைத் தவிர்த்து, அவற்றின் உண்மையான பெறுமதி மறைக்கப்பட்டு அவற்றின் நிறைக்கு மாத்திரம் வரி விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, அவற்றின் முறையான இறக்குமதி மூலம் சேகரிக்கப்பட வேண்டிய பெருமளவிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழக்கிறது. இந்த விடயமானது, நாட்டின் மிக முக்கியமான தேசிய பிரச்சினையாக கருதப்பட வேண்டும்.
இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் CMTA அமைப்பானது, இந்த பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதோடு, சர்வதேச தரத்திற்கு இணங்கக்கூடிய உண்மையான, உயர்தர உதிரிப் பாகங்களை இலங்கை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. இந்த சட்ட மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், பல உலகளாவிய வாகன வர்த்தகநாமங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.
Honda மற்றும் Toyata ஆகியன அண்மையில், போலியான உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் கடைகளில் சோதனைகளை நடத்தி, போலி உதிரிப்பாகங்களின் சந்தையை தடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தன. இந்த நடவடிக்கைகளின் விளைவாக பல்வேறு போலி உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு, பல்வேறு கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான தவறான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்ததோடு, உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் நுகர்வோரைப் பாதுகாக்கவும், அசல் தயாரிப்புகளின் உறுதிப்பாட்டை நிலைநாட்டவும் உறுதிப்பாட்டுடன் உள்ளனர்.
போலியான உதிரிப் பாகங்களின் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விடயங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நுகர்வோரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து அனைத்து உதிரிப் பாகங்களையும் கொள்வனவு செய்வதை உறுதி செய்யுமாறும் CMTA அறிவுறுத்தல் விடுக்கிறது. சந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஆபத்தான மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தயாரிப்புகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் அனைவரும் இணைந்த ஒரு கூட்டு முயற்சி அவசியமாகும்.
Photo Caption:
சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் விரான் டி சொய்சா மற்றும் சுதத் பெரேரா அசோசியேட்ஸின் ஸ்தாபகரும் அதன் முகாமைத்துவப் பங்காளருமான சுதத் பெரேரா…