பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) அனுசரணையுடன் ருக்மிணி கோதாகொட ஶ்ரீ லங்கா ஜூனியர் மெச் பிளே கோல்ப் சம்பியன்ஷிப் 2025 வெற்றிகரமாக நிறைவு

Off By Mic

உள்ளூர் விளையாட்டுகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில், பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) நிறுவனம் அனுசரணை வழங்கிய ருக்மிணி கோதாகொட கிண்ணத்திற்கான 2025 ஶ்ரீ லங்கா ஜூனியர் மெச் பிளே கோல்ஃப் சம்பியன்ஷிப் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை கோல்ஃப் அமைப்பினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றதும், கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப்பினால் முன்னெடுக்கப்படுகின்றதுமான இந்தப் போட்டி, ஓகஸ்ட் 04 முதல் 08 வரை இடம்பெற்றது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய மட்டப் போட்டித் தொடருக்கு அதன் ஆரம்ப ஆண்டிலிருந்து பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) பிரதான அனுசரணை வழங்கி வருகின்றது. இவ்வருடம், ஆண்கள் சம்பியன் பட்டத்தை ரேஷான் அல்கம வென்றதோடு, பெண்கள் சம்பியன் பட்டத்தை காயா தலுவத்த வென்றார். இது, இலங்கையில் இளம் விளையாட்டு திறமையாளர்களை வளர்க்கும் இவ்வர்த்தக நாமத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை காண்பிக்கிறது.

இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தும் தளமாகச் செயற்படும் ருக்மிணி கோதாகொட கோல்ஃப் சம்பியன்ஷிப், இலங்கை விளையாட்டின் எதிர்காலத்திற்கான முக்கிய முதலீடாகும். வணிக இலக்குகளைத் தாண்டி, பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) தனது சமூக பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 11 வருடங்களாக தொடர்ச்சியாக இந்தப் போட்டித் தொடருக்கு ஆதரவளித்து வருகிறது. கோல்ஃப், டென்னிஸ், பெட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்கும் வரலாற்று பெருமையை P&S கொண்டுள்ளதோடு, பாடசாலை விளையாட்டை மேம்படுத்தும் நிறுவனத்தின் பணியை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

ருக்மிணி கோதாகொட, 1979 ஆம் ஆண்டு இலங்கை அமெச்சூர் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், மேலும் பல தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவை தவிர, 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இலங்கை மகளிர் கோல்ஃப் சங்கத்தின் தலைவியாகவும், கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப்பின் மகளிர் பிரிவு தலைவியாகவும் பணியாற்றினார். அவரின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், ருக்மிணி கோதாகொட ஜூனியர் மெச் பிளே சம்பியன்ஷிப் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வகிறது. இது, இலங்கை முழுவதும் வளர்ந்துவரும் கோல்ஃப் திறமையாளர்களை ஊக்குவித்து, மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்போட்டிக்கான தமது அனுசரணை தொடர்பில், பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) முகாமைத்துவ பணிப்பாளர் கிஹான் பெரேரா கருத்து வெளியிடுகையில், “எங்கள் முன்னாள் தலைவி திருமதி ருக்மிணி கோதாகொடவை கௌரவிக்கும் விதமாக இந்தப் போட்டிக்கு ஆதரவு வழங்குவதில் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இந்த நிகழ்ச்சி, அவர் கோல்ஃப் விளையாட்டிற்காக செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள இளம் கோல்ஃப் வீர, வீராங்கனைகளுக்கு ஒரு பாதையை உருவாக்கும் முக்கிய பங்களிப்பும் ஆகும். P&S நிறுவனமாகிய நாம், அடித்தளத்திலிருந்தே விளையாட்டை மேம்படுத்துவதில் முழுமையான அர்ப்பணிப்பை கொண்டுள்ளோம். அத்துடன், வளர்ந்துவரும் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களை மேம்படுத்தி, அதன் மூலம் இலங்கை விளையாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிக்க வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.” என்றார்.

இலங்கை மக்களுக்கான நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்கும் தனது பணியை பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும்.