புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையானது, அண்மையில் கொழும்பில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்கக் கூடிய 3 வாகனங்கள் (ATV) இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு (SLCG) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக மோட்டார் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் (ATV ) கரடு முரடான பாதைகளில் எளிதாக பயணிப்பதற்கு உதவியாக அமைவதோடு, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை(SLCG) இந்த வாகனங்களை பயன்படுத்தி, தமது ரோந்து பணிகளை மேலும் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.
இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய எல்லைப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த, SLCG பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பூஜித விதான, குறித்த ATV வாகனங்களை செலுத்தி சோதனை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாகனங்கள் கரையோர ரோந்து நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட ரியர் அட்மிரல் பூஜித விதான “அவுஸ்திரேலியாவைப் போன்று இலங்கையும், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது. அத்துடன் கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட நாம் உறுதி பூண்டுள்ளோம். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று ATV வாகனங்கள் மிகவும் வரவேற்கத்தக்க பரிசாகும் என்பதோடு, இது எமது நடவடிக்கைத் திறனை மேம்படுத்தும். இந்த வாகனங்களை எமக்கு வழங்கி உதயிமைக்கு நாம் அவுஸ்திரேலிய அரசுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
கடல்சார் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக மேலதிக ATV வாகனங்களை SLCG பயன்படுத்தும். கரையோரப் பகுதிகளில் சட்ட விரோத செயல்களைக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு ATV வாகனத்திலும் நிலத்தை மையப்படுத்திய ட்ரோன் விமானம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை தொடர்பில் குறித்து கருத்துத் தெரிவித்த, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy) “பிராந்திய கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு, திறன் மேம்பாடுகள் ஒரு முக்கிய அம்சமாகும்” என்றார்.
இது குறித்து ரியர் அட்மிரல் Brett Sonter மேலும் தெரிவிக்கையில், “நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஒருவருக்கு ஒருவர் தேவைப்படும் போதான ஆதரவை வழங்குதல் ஆகியவற்றினால் இரு தரப்புக்கும் இடையிலான சிறந்த நட்பு கட்டமைக்கப்படுகின்றன. 2023 இல் அறிவிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பொதியின் ஒரு அங்கமாக இந்த ATV வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இது எமது உறவை வலுப்படுத்துவதிலும், கடல்சார் பிரிவில் உள்ள பல்வேறு அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதிலும் எமது பரஸ்பர அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதில் மற்றுமொரு படியாகும். எமது தங்கத் தர நிலையில் உள்ள கூட்டாளருக்கு இந்த ATV வாகனங்களை பரிசாக வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
இந்த ATV வாகனங்கள் கொழும்பு, காலி, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.