பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (PRISL) உலகளாவிய தொழில்துறை கூட்டாளர்களின் மத்தியில் தொழில்துறை புத்தாக்கம் மற்றும் அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் 2 முக்கிய நிகழ்வுகளை அறிவித்துள்ளது

Off By Mic

இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL) 2025 ஆம் ஆண்டில் நாட்டின் தொழில்துறை சூழலை மாற்றவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளை பெருமையுடன் அறிவித்துள்ளது. PRISL Awards 2025 (2025 நவம்பர் 25) மற்றும் COMPLAST-RUBEXPO-COMXPO 2025 கண்காட்சி (2025 ஓகஸ்ட் 29 – 31) ஆகியவையே அவையாகும். இவை கொழும்பு BMICH இல் நடைபெற உள்ளன.

PRISL Awards 2025 விருது விழா, நாட்டின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையின் மிக முக்கியமான அங்கீகார நிகழ்வாக அமையும். 2025 நவம்பர் 25 BMICH இல் நடைபெறும் இந்த உயர்மட்ட விருது விழா நிகழ்வில், சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் (SMEs) முதல் ஏற்றுமதியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் என பல்வகை பங்கேற்பாளர்களின் சிறப்பான பங்களிப்புகள் மற்றும் புத்தாக்கங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு விருதும் சுயாதீனமான, நம்பிக்கைக்குரிய நடுவர்கள் குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டு, உயர்மட்ட நிறுவனங்களின் ஆதரவுடன் வழங்கப்படும் என்பதால் இவை வெளிப்படைத்தன்மையையும் தேசிய கௌரவத்தையும் உறுதி செய்யும். இந்த விருதுகள், கடந்த கால சாதனைகளுக்கு மதிப்பளிப்பதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய தரநிலைகளையும் அமைக்கும். 2024 ஆம் ஆண்டிற்கான PRISL விருதுகள் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் 2025 ஜனவரி மாதம் நடைபெற்றது. இது புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் தொழில்துறை விசேடத்துவத்தைக் கொண்டாடியது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பிளாஸ்டிக், இறப்பர் மற்றும் பொலிமர் விஞ்ஞானத்தில் தேசிய ரீதியில் ஒரு அங்கீகாரமாகவும், தற்போது வரை இந்தத் துறையில் ஒரேயொரு கல்வி மற்றும் பயிற்சி வழங்குநராகவும் PRISL விளங்குகின்றது. அந்த வகையில் PRISL இன்றி, இன்றைய பில்லியன் டொலர் தொழில்துறையை கற்பனை செய்ய முடியாது.

இதில் வழங்கப்படும் விருதுகள்: பொலிமர் தொழில்நுட்பத்தில் கல்விசார் விசேடத்துவம்; வருடத்தின் புத்தாக்கமான தயாரிப்பு (தங்கம், வெள்ளி, வெண்கலம்); நிலைபேறான தன்மை விருது – சுற்றுச்சூழல் பொறுப்பு (தங்கம், வெள்ளி, வெண்கலம்); மிகச் சிறந்த பாரிய தொழில்துறை நிறுவனம் (தங்கம், வெள்ளி, வெண்கலம்); மிகச் சிறந்த SME விருதுகள் – பிளாஸ்டிக், இறப்பர் மற்றும் மீள்சுழற்சி (9 விருதுகள்); வருடத்தின் சேவை வழங்குநர்; வருடத்தின் விநியோகஸ்தர் – பிளாஸ்டிக் மற்றும் இறப்பர்; வருடத்தின் இலங்கை வர்த்தகநாமம் (SME துறை); வருடத்தின் தொழில்வாண்மையாளர் (Operator முதல் CEO வரை பல்வேறு மட்டங்கள்); வருடத்தின் தொழில்முனைவோர்; மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் (தங்கம், வெள்ளி, வெண்கலம்) போன்ற விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருதுகள் குறித்து PRISL நிறுவனத்தின் தலைவர் சமிந்த வித்யாரத்ன கருத்து வெளியிடுகையில், “2025 PRISL விருதுகள் ஆனது, முன்னேற்றத்திற்கான ஒரு மேடையாகும். புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் தொழில்முறை விசேடத்துவத்திற்கு மதிப்பளிப்பதன் மூலம், இலங்கையின் தொழில்துறையை தட்டிக் கொடுத்து, தொழில்துறை சமூகத்தை சிந்திக்கவும், ஒழுங்குமுறையாக செயற்படவும் உலகளாவிய போட்டிக்கு தயாராக இருக்கவும் ஊக்குவிக்கிறோம். இந்த விருதுகள், எமது நாடு போட்டி மற்றும் வளர்ச்சிக்கான புதிய யுகத்துக்குள் நுழையும் இவ்வேளையில், மாற்றத்திற்கு வழிவகுத்து விசேடத்துவத்தை கொண்டாடுகின்றது.” என்றார்.

COMPLAST-RUBEXPO-COMXPO 2025 கண்காட்சியின் 8ஆவது பதிப்பானது, நாட்டின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியாகக் கருதப்படுகிறது. இது 2025 ஓகஸ்ட் 29 – 31 வரை BMICH இல் நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக மூன்று கண்காட்சிகளாக நடைபெறும் இந்த கண்காட்சிகள், நேரடி செயல்விளக்கங்கள், தயாரிப்புகளின் அறிமுகங்கள், கல்வி மாநாடுகள், B2B சந்திப்புகளை உள்ளடக்கியுள்ளன. இவை உலகளாவிய கண்காட்சியாளர்களை உள்ளூர் வாடிக்கையாளர்கள், SMEகள், சேவை வழங்குநர்கள், மாணவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கவுள்ளன.

இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளிலும் 300 இற்கும் அதிகமான தொழில்துறை பிரிவுகளைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும், பிளாஸ்டிக், இறப்பர், பொதியிடல் மற்றும் உற்பத்தி மதிப்புச்சங்கிலிகளில் விசேடத்துவத்தை ஊக்குவிக்கவும், நிலைபேறான தன்மையை ஊக்கமளிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டவுமான நோக்கத்தை கொண்டுள்ளன. இதில் பங்குபற்றுவோர் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் செயலாக்க இயந்திரங்கள்; தன்னியக்க மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி; பொதியிடலில் புத்தாக்க கண்டுபிடிப்புகள்; நிலைபேறான மூலப்பொருட்கள் மற்றும் மீள்சுழற்சி தொழில்நுட்பம்; பொறியியல் தீர்வுகள் மற்றும் பசுமை வலுசக்தி; FMCG, ஆடைகள், போக்குவரத்து, விவசாயம், கட்டடத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புதிய தயாரிப்பு பயன்பாடுகள் ஆகியவற்றிலான முன்னேற்றங்களை பார்வையிடக்கூடிய வாய்ப்பை  பெறுவர். தொழில்துறையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் பங்குபற்றுவார்கள் என PRISL எதிர்பார்க்கிறது. இந்த கண்காட்சிகள் கற்றல் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தும் மையமாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தை நாடுகின்ற வணிகங்களுக்கான முக்கிய தளமாகவும் செயற்படும்.

PRISL நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்  சமிந்த பெரேரா இது குறித்து தெரிவிக்கையில், “COMPLAST-RUBEXPO-COMXPO 2025 ஆனது, வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் இடமாகும். நீங்கள் சந்தைக்கான அணுகலை நாடும் SME ஆகவோ, புத்தாக்கத்தை தேடும் உற்பத்தியாளராகவோ, தொழில் வாய்ப்புகளை ஆராயும் மாணவராகவோ இருக்கலாம். இந்தக் கண்காட்சி தொகுதியானது உங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். உலக மேடையில் இலங்கையை மிளிரச் செய்யும் வகையிலான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட இந்த தொழில்துறை மேடையை உருவாக்குவதில் PRISL பெருமை கொள்கிறது.” என்றார்.

இரண்டு நிகழ்வுகளிலும், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்; ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்; தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள்; வர்த்தக நிபுணர்கள் மற்றும் தொழில்துறை சங்கங்கள்; பொலிமர் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள்; அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரிகள்; ஊடக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்; பொதுமக்கள் மற்றும் துறைசார்ந்த நுகர்வோர் என பரந்த மற்றும் பல்வகைத் துறைகளைச் சேர்ந்தவர்களை சென்றடைவதில் PRISL குறியாக உள்ளது. இவ்விரு நிகழ்வுகளும், அரச – தனியார் கூட்டாண்மை, ESG கொள்கைகள் மற்றும் தொழில்துறை மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு, தொழில் வாய்ப்பு மற்றும் கல்விசார் வெளிப்பாடு என்பவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருக்கும்.

தேசிய ஆணையையும், 65 ஆண்டுகால பாரம்பரியத்தின் ஆதரவுடனும், இலங்கையின் பொலிமர் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அமைப்பாக PRISL திகழ்ந்து வருகிறது. கடந்த காலத்தில் இடம்பெற்ற COMPLAST மற்றும் RUBEXPO நிகழ்வுகள் உலகளாவிய கண்காட்சி நிறுவனங்களை வரவேற்றுள்ளதோடு, வர்த்தக வெற்றிகளை உருவாக்கி, தொழில்துறையாளர்கள் – கல்வியியலாளர்களிடையே இணைப்புகளை வலுப்படுத்தியுள்ளன. அந்த வகையில் 2025 பதிப்பானது, PRISL விருதுகளின் பிரமாண்டத்தையும் மூன்று பாரிய கண்காட்சிகளையும் ஒன்றிணைத்து, தொழில்துறை பங்கேற்பாளர்களுக்கான ஆண்டின் முக்கிய நிகழ்வாக மாற உள்ளது. இங்கு புத்தாக்கமானது அங்கீகாரத்தையும் வாய்ப்பானது விசேடத்துவத்தையும் அடைகின்றன.

அனைத்து பங்கேற்பாளர்களையும் பதிவு செய்தல், அனுசரணை வழங்குதல், கண்காட்சி நடாத்துதல், பரிந்துரைத்தல் மற்றும் கலந்து கொள்ள PRISL அழைப்பு விடுக்கிறது. இவ்விரு நிகழ்வுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பை வழங்குவதோடு, SMEக்கள், பெருநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவர்களுக்கேற்ப பொதிகளை வழங்க தயாராக உள்ளன. உலகளாவிய பொலிமர் வரைபடத்தில் தங்களது அடையாளத்தை பதிவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் Platinum, Gold, Silver, Bronze அனுசரணையாளராவதன் மூலம் தங்களது வர்த்தகநாமத்தின் புகழை பெருக்க ஒரு அரிய வாய்ப்பு காணப்படுகிறது. மேலதிக தகவலுக்கு: (www.prisrilanka.com); @prisrilanka (Facebook | LinkedIn | Instagram); Email: [email protected]