நீர்கொழும்பில் அதிநவீன கார் காட்சியறையை திறந்து வைத்த AMW

நீர்கொழும்பில் அதிநவீன கார் காட்சியறையை திறந்து வைத்த AMW

Off By

Al-Futtaim குழுமத்தின் ஒரு அங்கமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (Associated Motorways (Private) Limited – AMW) நிறுவனம், இலக்கம் 262, நீர்கொழும்பு, சிலாபம் வீதி எனும் முகவரியில் தனது புதிய கார் காட்சியறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த விசேட அங்குரார்ப்பண நிகழ்வில் AMW நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள், மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், வணிகப் பங்காளர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

மேல் மாகாணத்தில் AMW இன் பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் திறக்கப்பட்டுள்ள AMW நீர்கொழும்பு கார் காட்சியறையானது, வாடிக்கையாளர்களின் நவீன் கார் சேவைகளை வழங்குவது தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜவாஹர் கணேஷ், ஒரு பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு மையமாக விளங்கும் நீர்கொழும்பு கொண்டுள்ள மூலோபாய ரீதியான முக்கியத்துவங்களை சுட்டிக்காட்டியதுடன், இப்பிராந்திய வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் உலகத்தரம் வாய்ந்த உயர் ரக வாகன அனுபவங்களை வழங்குவதற்கான AMW கொண்டுளள் அர்ப்பணிப்பை வலியுறுத்திக் கூறினார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக உடனடியாக விநியோகம் செய்யக்கூடிய வகையில் பல வகையான வாகனங்கள் இந்த கார் காட்சியறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை கையளிப்பதற்கான அனைத்து விடயங்களையும் விரைவாக மேற்கொள்வதற்கு அவசியமான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Nissan வர்த்தக நாமத்தில் அமைந்த Magnite மற்றும் Almera ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. Nissan Magnite மற்றும் Almera வாகனங்கள் தற்போது கையிருப்பில் உள்ளதால், நீண்ட நாட்களுக்கு காத்திருக்காமல் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான வேளையில் வாகனங்களை மிக விரைவாக பெற்றுக் கொள்ள முடியும். Nissan இன் ஏனைய புதிய கார் வகைகளும் இங்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Suzuki வர்த்தக நாமத்தின் Fronx மற்றும் Jimny வாகனங்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுவதோடு, Jimny வாகனங்கள் தற்போது கையிருப்பில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தற்போதே தேவையான நேரத்தில் அதனை கொள்வனவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். Suzuki இனாலும் தமது வாடிக்கையாளர்களுக்காக விசேட புதிய பல்வேறு வாகனங்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மக்களின் பேராதரவை பெற்ற மிகவும் பிரபலமான Celerio மற்றும் Alto மாதிரிகளும் மிக விரைவில் இந்த கார் காட்சியறையில் இணைக்கப்படவுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கும் வகையில், நீர்கொழும்பு காட்சியறையானது AMW  Capital Leasing & Finance ஊடாக அதே இடத்திலேயே நிதி மற்றும் குத்தகை தீர்வுகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இங்கு விஜயம் செய்வோர் வாகனங்களை ஆராய்ந்து, நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுவதுடன், நிதி ஏற்பாடுகளையும் ஒரே கூரையின் கீழ் தடையின்றி மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் வகையில் பூர்த்தி செய்ய முடியும்.

நீர்கொழும்பு காட்சியறையானது AMW இன் நாடளாவிய வலையமைப்பில் அண்மையில் இணைக்கப்பட்ட ஒன்றாகும். இது ஏற்கனவே Nissan – யூனியன் பிளேஸ், Suzuki – பொரளை, மாத்தறை, குருணாகல் ஆகிய இடங்களில் உள்ள காட்சியறைகளுடன் இணைந்து நாடு முழுவதும் AMW இன் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. எதிர்காலத்தில் மேலும் பல காட்சியறைகளைத் திறக்க திட்டமிட்டுள்ள AMW நிறுவனம், 75 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைநிறுத்தியுள்ள அதன் மேன்மை, நம்பகத்தன்மை மற்றும் சேவைத் தரங்களை பேணியவாறு நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்களின் அணுகலை நாடு முழுவதும் தொடர்ச்சியாக விரிவுபடுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

நவீன மற்றும் அங்கசம்பூரணமான சேவைகளுடன், பிரதான நகரத்தில் அமைந்துள்ள நீர்கொழும்பு AMW கார் காட்சியறையானது, இலங்கையர்களின் போக்குவரத்து தேவைகளை இலகுவாக்கியவாறு, AMW நிறுவனத்தின் இலக்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவுள்ளது.