தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து கொழும்பு 2 பகுதியில் பெற்றோர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுப்பு

தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து கொழும்பு 2 பகுதியில் பெற்றோர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுப்பு

Off By

செப்டெம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய சிறுவர் வாரம் 2026 இன் அங்கமாக, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து, கொழும்பு 2 பகுதியில் “ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி” சமூக வலுவூட்டல் நடவடிக்கையின் கீழ் பெற்றோருக்கான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. “அன்புடன் வளர்ப்போம் – எமது சிறுவர்களை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டம், இரட்சணிய சேனை (Salvation Army) பிராந்திய தலைமையக மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. நேர்மறையான பெற்றோரியல் மூலமாகச் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியதுடன், சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குதல், டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த அபாயங்கள், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பழக்கவழக்கங்கள், அலட்சியம் மற்றும் பிற சமூகப் பாதிப்புகளைக் குறைத்தல், அத்துடன் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அறிவையும் நடைமுறை ஆற்றல்களையும் பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குதல் ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கியிருந்தது.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை செயற்பாடுகளுக்கான தலைமை பொறுப்பதிகாரி டிஐஜி ஆர்.ஏ.தர்ஷிகா குமாரி இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், அமர்வில் முன்னெடுக்கப்பட்ட விளக்கங்கள் தொடர்பில் LEADS மற்றும் Humedica Lanka ஆகியவற்றிலிருந்து வளவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஒன்றுகூடியிருந்தவர்களை வரவேற்கும் வகையில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்பு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய சிறுவர்கள் தங்களது உடல், மன மற்றும் உணர்வுபூர்வமான நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் பலதரப்பட்ட அபாயங்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சவால்கள் குறித்து பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும். ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி – கொழும்பு 02 வேலைத்திட்டத்தின் கீழ் ஜோன் கீல்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் இதன் மூலம் பல சமூக வலுவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது, அறக்கட்டளையின் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பாட்டில் உள்ள ‘அயலவர் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம்’, ‘ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டம்’ மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகச் செயற்படும் “Project WAVE” போன்ற பிற நீண்டகால முன்முயற்சிகளுக்கு மேலதிகப் பங்களிப்பாக அமைகின்றது. எமது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள் ஊடாக, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை குழும வணிகங்களுடன் இணைந்து, எமது வணிகங்களைச் சுற்றியுள்ள சமூகங்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அர்த்தமுள்ள தலையீடுகளை முன்னெடுக்கவும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.” என்றார்.

ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் டிஐஜி ஆர்.ஏ.தர்ஷிகா குமாரி கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களைப் பாதுகாப்பது என்பது பெற்றோர், பாடசாலைகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். அபாயங்களை அடையாளம் காண்பதற்கும், துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு முன்பாக அவற்றைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வு மிக முக்கியமான முதல் படியாகும். இத்தகைய முயற்சிகள் சமூகங்களுடன் நேரடியாக ஒன்றிணைவதற்கும், சிறுவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அறிவை பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதற்கும் ஒரு நல்வாய்ப்பை அளிக்கின்றன. இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல், சமூக மட்டத்திலான தொடர்புகளை வலுப்படுத்தவும், சிறுவர்களும் குடும்பங்களும் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யவும் பல வருடங்களாக பொலிஸாருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வரும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் பங்களிப்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.” என்றார்.

முதலாவது அமர்வின் போது நேர்மறையான பெற்றோரியல் மற்றும் சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிறுவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பல் மற்றும் வெளிப்படையான தொடர்பாடல்களை கொண்டிருத்தல் போன்றவற்றினூடாக நேர்மறையான பெற்றோரியல் ஆரம்பிப்பது மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களின் வகைகள் பற்றிய விளக்கங்களை இந்த அமர்வு வழங்கியிருந்தது. அத்துடன், சிறுவர்கள் இயங்கும் டிஜிட்டல் சூழல் தொடர்பில் பெற்றோர்கள் புரிதலைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் ஒன்லைனில் எதிர்கொள்ளக்கூடிய இடர்கள் பற்றி விழிப்புணர்வுடன் திகழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருந்தது.

இரண்டாவது அமர்வின் போது, போதைப்பொருள் பயன்பாடு உட்பட நடத்தை மற்றும் பொருள் சார்ந்த பழக்கவழக்கங்களால் ஏற்படும் கருத்துகள் மற்றும் அபாயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இத்தகைய அபாயங்களைத் தடுப்பதற்கும் அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கும் சரியான பெற்றோர் விழிப்புணர்வு, புரிதல், கூர்ந்த அவதானிப்பு மற்றும் ஆரம்பகால தலையீட்டின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த சமூக அங்கத்தவர்கள் வளவாளர்களுடன் ஈடுபாட்டை பேணி, சிறுவர்களை பாதுகாத்து பேணுவதற்கு, இவ்வாறான விழிப்புணர்வு மற்றும் ஆதரவளிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியிருந்தனர்.

சமூக விழிப்புணர்வுத் திட்டத்துக்கு சமாந்தரமாக, தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் சமூக ஊடகத்தில் குறுகிய வீடியோத் தொடர்களை உள்ளடக்கிய விழிப்புணர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில், டிஜிட்டல் பாதுகாப்பு, உளவியல் நலன், துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிராக செயலாற்றல் மற்றும் சக சிறுவர்களின் அழுத்தம் மற்றும் போதைப்பொருள் பாவனை தவிர்ப்பு பற்றி இந்த வீடியோக்கள் விளக்கியிருந்தன.

இவ்வாறான நிகழ்ச்சிகள் ஊடாக, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வணிகங்கள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் இணைந்து, “எதிர்காலத்திற்காக தேசத்திற்கு வலுவூட்டல்” எனும் தனது தொலைநோக்கிற்கு அமைவாக, ஒவ்வொரு சிறுவரும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் வளர்வதை உறுதிசெய்வதற்குத் தேவையான அறிவிலும் வளங்களிலும் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும்.