தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 600 மரங்களின் நடுகை மூலம் மீள்காடாக்கல் திட்டத்திற்கு தலைமை தாங்கும் Hayleys Alumex PLC
இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்தி நிறுவனமான Hayleys Alumex PLC நிறுவனமானது, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து, ஜூலை 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் மீரிகம – குருணாகல் இடையிலுள்ள பகுதியில் சுமார் 600 உள்நாட்டு மற்றும் பழம்தரும் மரங்களை நடுகை செய்தது. இலுப்பை, மருதம், புங்கை மர வகைகளை உள்ளடக்கிய இந்த மரநடுகை முயற்சியானது, கூட்டு முயற்சிகள் மூலம் இலங்கையின் இயற்கை சூழல் தொகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் அதே வேளையில், சூழல் பாதிப்புகளை குறைக்கும் நிறுவனத்தின் பரந்துபட்ட நிலைபேறான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு மரங்கள் அமைந்துள்ள பரப்பளவை அதிகரிப்பதன் மூலம், உட்கட்டமைப்பு வசதிகளின் நிர்மாணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூழல் சமநிலையை மீளகட்டியமைக்க உதவுவதுடன், நீண்டகால உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பிற்கும் இத்திட்டம் ஆதரவளிக்கிறது. அத்துடன், இது பசுமையான போக்குவரத்துப் பாதைகளை உருவாக்க உதவுவதோடு, சாரதிகளுக்கு ஏற்படும் காட்சிச் சலிப்பை குறைத்து, சுற்றியுள்ள இயற்கை அழகையும் பயணத்தின் போது சாரதிக்கு தென்படும் சூழலையும் மேம்படுத்துகிறது.


இது குறித்து, Hayleys Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவெல கருத்துத் தெரிவிக்கையில், “முக்கிய அதிவேக நெடுஞ்சாலைகளில் பசுமைப் பரப்பை மீளக் கட்டியெழுப்பி, நீண்டகால சூழல் கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பணியாற்றுவதில் Hayleys Alumex PLC நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. அர்த்தமுள்ள சூழல் மேம்பாடு என்பது பங்காண்மைகள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பிலிருந்தே உருவாகிறது. ஒரு உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், நாம் செயற்பட்டில் ஈடுபடும் சமூகங்களின் சூழலுக்கு பங்களிப்புச் செய்வதானது, ஒரு பொறுப்புள்ள வணிக நிறுவனத்தின் ஒரு அங்கமாகும் என கருதுகிறோம்.” என்றார்.
இந்த முயற்சியானது, பரந்துபட்ட சூழல், சமூக, நிர்வாகம் (ESG) தொடர்பான Hayleys Alumex PLC நிறுவனத்தின் வேலைத்திட்டமான ‘Elevate’ இன் ஒரு அங்கமாகும். இது நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் நீண்டகால வணிக நடவடிக்கையின் மூலோபாய நடவடிக்கைகளில் நிலைபேறான தன்மையை ஒன்றிணைக்கிறது. Hayleys குழுமத்தின் பரந்துபட்ட ESG தொலைநோக்குப் பார்வையுடன் அமையப் பெற்றுள்ள இந்த வேலைத்திட்டமானது, பொறுப்புடனான வளர்ச்சியையும் எதிர்கால சந்ததியினருக்கான நிலையான மதிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான ஒரு மூலோபாய திட்ட வரைபடமாகவும் செயற்படுகிறது.

