டென்னிஸ் சங்கத்திற்கு உலகத்தரம் வாய்ந்த மின்னொளி திட்டத்தை வழங்கி இலங்கை டென்னிஸ் விளையாட்டை உயிரூட்டும் DIMO

டென்னிஸ் சங்கத்திற்கு உலகத்தரம் வாய்ந்த மின்னொளி திட்டத்தை வழங்கி இலங்கை டென்னிஸ் விளையாட்டை உயிரூட்டும் DIMO

Off By

நாட்டின் டென்னிஸ் உட்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், புகழ்பெற்ற ‘Centre Court’ உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய டென்னிஸ் விளையாட்டு அரங்குகளில் (hard court) சர்வதேச தரத்திலான மின்னொளி விளக்கு கட்டமைப்பை நிறுவுவதற்காக இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) மற்றும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) ஆகியவற்றுடன் DIMO நிறுவனம் கைகோர்த்துள்ளது.

சர்வதேச சங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மின்விளக்கு கட்டமைப்பு, வருடம் முழுவதும் மாலை நேரப் பயிற்சிகள் மற்றும் போட்டிகளை நடத்த வழிவகுப்பதுடன், முன்னணி சர்வதேச போட்டிகளில் காணப்படுவது போன்ற விளையாட்டுச் சூழலையும் உருவாக்கும். இத்திட்டமானது வீரர்களின் திறன்களை மேம்படுத்தவும், பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், இரவு நேர உயர்தர டென்னிஸ் போட்டிகளை நடத்துவதற்கான இலங்கையின் திறனை உயர்த்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச முன்னணி வர்த்தகநாமங்களுடன் இணைந்து, தொழில்நுட்ப வடிவமைப்பு, மின் விநியோகம், ஒளி உருவகப்படுத்தல்கள் (lighting simulations), பொருத்துதல், சோதித்தல், செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் ஆகிய அனைத்து விடயங்களையும் சர்வதேச செயல்திறனுடன் கூடிய தரநிலைகளுக்கு ஏற்ப, தனது சொந்த பொறியியல் நிபுணத்துவத்தின் மூலம் DIMO நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த மின்விளக்கு கட்டமைப்பின் வடிவமைப்பு, கண்ணை கூசுகின்ற கூர்மையான ஒளியைக் குறைத்து, ஒரே சீரான வெளிச்சத்தை வழங்குவதால், வீரர்கள் அதிவேகப் பந்துப் பரிமாற்றங்கள், ஓவர்ஹெட் ஷொட்கள் மற்றும் லொப்களை (lobs) எளிதாக முன்னெடுக்க முடியும். அத்துடன், மின்சக்தி நுகர்வு மற்றும் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், நேரலை ஒளிபரப்புத் தரநிலைகளுக்கான ஆதரவுடன், மின்சக்தி திறன் கொண்ட LED தொழில்நுட்பம் மற்றும் கூட்டு மின்விளக்குக் கட்டுப்பாடுகளுடன் (zoned lighting controls) இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டு அரங்கிற்கும் தனித்தனியாக ஒளியை வழங்க முடியும்.

இந்தக் கூட்டாண்மை குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த விளையாட்டுச் சாதனைகள் சரியான உட்கட்டமைப்பில் இருந்தே ஆரம்பிக்கின்றன. இலங்கை டென்னிஸ் சங்கம் மற்றும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் ஆகியவற்றுடனான இந்த கூட்டாண்மையின் மூலம் சர்வதேச தரத்திலான மின்விளக்குத் தீர்வை நாம் வழங்குகிறோம். இது வீரர்கள் நீண்ட நேரம் பயிற்சி பெறவும், தொழில்முறை சூழலில் போட்டியிடவும், உலகளாவிய அரங்கின் தேவைகளுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கும். இலங்கை டென்னிஸ் துறையின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு திட்டத்திற்கு எமது பொறியியல் நிபுணத்துவத்தை வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.” என்றார்.

இலங்கை டென்னிஸ் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் இக்பால் பின் இஸ்ஸாக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை டென்னிஸ் துறைக்கு இத்திட்டம் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். நீண்ட விளையாட்டு நேரங்கள் மற்றும் சர்வதேச தரத்திலான மின்விளக்கு கட்டமைப்புகள் எமது வீரர்களை  மேம்படுத்தும் திட்டங்களுக்கு கணிசமாக வலுவூட்டும், இது உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான எமது திறனை மேலும் மேம்படுத்தும். பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் முழுமையான டென்னிஸ் சமூகத்திற்கும் பல ஆண்டுகள் பயனளிக்கும் உட்கட்டமைப்பை வழங்க DIMO நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இத்திட்டத்தின் பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது முன்னேற்றமடைந்து வருவதுடன், அவை எதிர்வரும் வாரங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய அரங்குகள் இரவு நேர கண்காட்சிப் போட்டியுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதுடன், இது இலங்கை டென்னிஸ் விளையாட்டுத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். சரியான பங்காளராக  விளங்குகின்ற DIMO நிறுவனம், சமூகங்கள், தொழில்துறைகள் மற்றும் இலங்கையின் தற்போதைய விளையாட்டுத் துறையில் சாதகமான நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் பொறியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் தொடர்ச்சியாக உத்வேகமளித்து வருகிறது.