
சர்வதேச மகளிர் தினத்தை DIMO அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக்குழுமமான DIMO, பாலின பாகுபாடற்ற பணிக் கலாசாரத்தை மேலும் உறுதி செய்து, சர்வதேச மகளிர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது.
கல்வி மற்றும் அறிவூட்டல் ஆகியவற்றினூடாக பெண்களுக்கு வலுவூட்டி, பணியகங்களை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் நிபுணர்களின் கலந்துரையாடல் மற்றும் கடந்த 10 வருட காலப்பகுதியினுள் பெண்களுக்கு நட்பான பணியகமாக DIMO எய்தியுள்ள முன்னேற்றம் தொடர்பான அமர்வையும், ‘Powerfully You’ பெண்கள் தலைமைத்துவ பயிற்சியளிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த DIMO பெண் ஊழிய அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் பகிர்ந்தளிப்பும் இதன் போது முன்னெடுக்கப்பட்டது. அதுபோன்று, DIMO பெண் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஃபஷன் ஷோ நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வை நடுவர்களாக ஷிரானி திலகவர்தன, சரத் கனேகொட, விராய் ரேமன்ட், பேராசிரியர் சுலோச்சனா செகேரா மற்றும் ஷனிகா ரத்நாயக்க போன்ற புகழ்பெற்ற நிபுணர்கள் வழிநடத்தியிருந்தனர். இதன் போது, பெண்களுக்கு வலுவூட்டல் மற்றும் ஊக்குவிப்பதற்காக பணியிடத்தின் சிந்தனைகளை மாற்றுவதன் அவசியம் மற்றும் கௌரவமான பணியிடச்சூழலை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் போன்றன தொடர்பில் அவர்களால் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இங்கு DIMO முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான மனித வளங்கள் அதிகாரி தில்ருக்ஷி குருகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “கௌரவமான மற்றும் பாதுகாப்பான பணியிடம் என்பது கண்ணியமான தேவையாக மாத்திரம் அமைந்திராமல், DIMO நிறுவனத்தின் நிலைபேறான திட்டமிடலில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக அமைந்துள்ளது. இந்த செயற்பாடுகளினூடாக, 2030 ஆம் ஆண்டளவில் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 40% வரை அதிகரித்துக் கொள்வது அமைந்துள்ளது. மேலும் பெண்களுக்கு வலுவூட்டுவதற்கு காணப்படும் தடைகளை, கல்வி மற்றும் அறிவூட்டல் ஊடாக தகர்க்க முடியும். அது நீண்ட காலம் நிலைத்திருக்கும் பணியிட கலாசாரத்தை கட்டியெழுப்ப காணப்படும் சிறந்த வழிமுறையாக அமைந்துள்ளது.” என்றார்.
இதன்போது தில்ருக்ஷி, நிறுவனத்தினுள் பெண்கள் தொடர்பான மனப்பாங்கை மாற்றுவது மற்றும் அவர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றியும் குறிப்பிட்டார். அறிவூட்டல், முகாமையாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் பெண்களுக்கு நட்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்கள் இதில் அடங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஏதேனும் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் சுயாதீனமாக அறிவிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள DIMO இன் தொலைபேசி இணைப்பு ஊடாக அச்சமின்றி, அது பற்றி அறிவிப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
‘Powerfully You’ என்பது, தொழில்சார் முன்னேற்றத்துக்கு அவசியமான நம்பிக்கை, சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் மற்றும் வினைத்திறன் தொடர்பில் கனிஷ்ட மற்றும் நடுத்தர முகாமைத்துவ பிரிவுகளின் பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக DIMO நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பெண் தலைமைத்துவ பயிற்சித் திட்டமாகும். இந்த பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பெண் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
DIMO நிறுவனத்தின் பெண் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘Walk of Confidence’ ஃபஷன் ஷோ நிகழ்வுடன் இந்த மகளிர் தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. பெண்களினுள் தன்னம்பிக்கையை ஊக்குவித்து, தாமாக முன்னேறுவதற்கு அவர்களுக்கு வலுவூட்டுவது இதன் அடிப்படை நோக்காக அமைந்திருந்தது.