ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த முதல் 9 மாத காலப்பகுதியில் துரித நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த முதல் 9 மாத காலப்பகுதியில் துரித நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

Off By Mic

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் அதிசிறந்த நிதிசார் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பிரதான நிதிசார் குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரிக்கு பிந்திய இலாபத்தில் நிறுவனம் 161% எனும் அபார வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 254.6 மில்லியனை எய்தியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 97.6 மில்லியனாக காணப்பட்டது. தேறிய வட்டி வருமானம் ரூ. 1.21 பில்லியனிலிருந்து 37% இனால் உயர்ந்து ரூ. 1.66 பில்லியனாக காணப்பட்டது. அதனூடாக, உறுதியான பிரிவுசார் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு வினைத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

ராஜேந்திர தியாகராஜா
தவிசாளர், ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி

மொத்த சொத்துகள் 28% இனால் உயர்ந்து ரூ. 25.3 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், கடன்கள் மற்றும் வருமதிகள் 36% இனால் உயர்ந்து ரூ. 19.76 பில்லியனாக பதிவாகியிருந்தன. நிறுவனத்தின் வைப்புகள் இருப்பு ரூ. 15.12 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது 19% வளர்ச்சியாகும். அதனூடாக, வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை பிரதிபலிக்கப்பட்டிருந்தது. அத்துடன், நிறுவனத்தின் மொத்த பங்குகள் 12% இனால் உயர்ந்து ரூ. 3.86 பில்லியனாக பதிவாகியிருந்தது.

பங்கொன்றின் மீதான வருமதி ரூ. 0.46 இலிருந்து 163% இனால் அதிகரித்து ரூ. 1.21 ஆக பதிவாகியிருந்தது. பங்கொன்றுக்கான தேறிய சொத்துகள் (NAPS) 12% இனால் உயர்ந்து ரூ. 18.27 ஆக பதிவாகியது.

2024 டிசம்பர் மாதத்தில், ஒரியன்ட் பைனான்ஸ், வருமானத்துக்கான செலவு விகிதத்தை 68% ஆக பதிவு செய்திருந்தது. அதனூடாக, சவால்கள் நிறைந்த சந்தை சூழலிலும் செலவு முகாமைத்துவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பிரதிபலிக்கப்பட்டிருந்தன. நிகர தொழிற்படா கடன் (NPL) விகிதம் 9.62% ஆக காணப்பட்டதுடன், ஒதுக்கம் ஆரோக்கியமான 65.37% ஆக பேணப்பட்டதன் மூலமாக, நிறுவனத்தினால் முறையான கடன் இடர் முகாமைத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில், ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிலை 1 மூலதன விகிதம் 13.14% ஆக காணப்பட்டதுடன், மொத்த மூலதன விகிதம் 13.16% ஆக காணப்பட்டது. இவை ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த நிலையில் திகழ்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறான வளர்ச்சி மற்றும் சிறப்பான தொழிற்பாடு ஆகியவற்றில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த சிறந்த பெறுபேறுகள் வெளிப்படுத்தியுள்ளன. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளரை மையப்படுத்திய நிதித் தீர்வுகளில் நாம் காண்பிக்கும் அக்கறையினூடாக, சந்தையில் எமது நிலை வலிமைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக நாம் வியாபித்து வரும் நிலையில், எமது வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய புத்தாக்கமான நிதிசார் தீர்வுகளை பெற்றுக் கொடுத்து, நீண்ட கால பங்காளர் பெறுமதியை பேணுவதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.எம். ஜபீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது மூலோபாய நோக்கு மற்றும் ஒழுக்கமான நிறைவேற்றம் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக இந்த உறுதியான நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. குத்தகைகள், தங்கக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புகள் போன்றன அடங்கலாக, எமது வியாபார அளவுகளில் ஏற்பட்ட பெருமளவு வளர்ச்சியின் காரணமாக இந்த மைல்கல் நிதிப் பெறுபேறுகளை எய்த முடிந்திருந்தது. முறையாக கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி மூலோபாயத்தை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதனூடாக வினைத்திறன், இடர் முகாமைத்துவம் மற்றும் சந்தைக்கு துலங்கலை வெளிப்படுத்தலை மேற்கொள்கிறோம். எமது பிரிவுகளை விரிவாக்கம் செய்ய இது உதவியுள்ளதுடன், நிதிசார் உறுதித் தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக அமைந்துள்ளது.” என்றார்.

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் நிலையில், பங்காளர்களுக்கு பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் தனது பிரசன்னத்தை விரிவாக்கம் செய்வதிலும் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளது.

ஒரியன்ட் பைனான்ஸ் பற்றி

தமது வாடிக்கையாளர்களின் குறித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரந்த நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் திகழ்கின்றது. இந்த சேவைகளில் நிலையான வைப்புகள், சேமிப்பு கணக்குகள், குத்தகை, தங்கக்கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிதித்துறையில் 43 வருட கால உறுதித்தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிறுவனம் கொண்டுள்ளது. புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குவது மற்றும் அதிசிறந்த தீர்வுகளையும், வாடிக்கையாளர் சேவையையும் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளரை-மையப்படுத்திய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஒரியன்ட் பைனான்ஸ் ஒரு ஜனசக்தி குழும நிறுவனம் என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்று இயங்கும் நிறுவனமாகும். LRA தரப்படுத்தலினால் BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.  

Image Caption:
கே.எம்.எம். ஜபீர்பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி