உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனமான  Cultive8 மீது முதலீடு செய்யும் Hatch Fund Singapore

உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனமான  Cultive8 மீது முதலீடு செய்யும் Hatch Fund Singapore

Off By Mic

Hatch Fund Singapore நிறுவனம், தனது முதலாவது முதலீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த, பிராந்திய ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் தொழில்நுட்ப (agri-technology) வணிக தொடக்கமான Cultive8 நிறுவனத்திற்கே இந்த முதலீடு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வணிக தொடக்கமும்(startup) புத்தாக்க சூழல் கட்டமைப்பின் ஈர்ப்பு மையமாகத் திகழும் Hatch நிறுவனமானது, இணைந்து பணியாற்றும் இடங்கள், வணிக அடைகாத்தல், வழிகாட்டல், ஊக்கப்படுத்தல், கூட்டாண்மைகள் மற்றும் வணிக தொடக்கங்களுக்கான நிதியிடல் (venture funding) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகச் செயற்படுகிறது. இந்த முக்கிய முதலீடானது, தெற்காசியாவிலிருந்து உருவெடுக்கின்ற, அதிக ஆற்றல் கொண்ட, ஆரம்ப நிலை வெற்றியாளர்களை ஆதரிப்பதற்கும் அவர்களை உலகளாவிய சந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்குமான Hatch நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் காட்டுகிறது.

இலங்கையில் இதற்கு முன்னர் Agrithmics என அழைக்கப்பட்ட Cultive8, தற்போது சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இதன் செயற்பாட்டு குழுக்கள் உள்ளன. தெற்காசியா முழுவதும் உள்ள பாரிய மற்றும் நடுத்தர அளவிலான பெருந்தோட்டங்கள் மற்றும் பதப்படுத்தும் வசதிகளுக்கு தன்னியக்க செயற்படுத்தல் (automation), ERP மற்றும் நிதியியல் தொழில்நுட்ப (fintech) தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாக இது திகழ்கிறது. தொலைத்தொடர்பு, விவசாயம் மற்றும் தொழில்துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களுடன் கூட்டாண்மை போன்றவற்றை இதன் வளர்ந்து வரும் சேவைகளாக குறிப்பிடலாம். விவசாயத் துறையில் மாத்திரம் பிரத்தியேகமாக கவனம் செலுத்தும் Cultive8, இந்த முக்கிய துறையானது எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்க AI/ IoT தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றது.

இது குறித்து Cultive8 இன் நிறுவுனரும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (CEO) பிரசாந்த் பிரேமகுமார் கருத்துத் தெரிவிக்கையில்: “Cultive8 இல் பிராந்தியத்தில் உள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக நாம் உருவாக்குகின்ற தொழில்நுட்பங்கள் தொடர்பில் நாம் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். Hatch Global நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம், இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்பத்தை ஆசிய சந்தைகளுக்கும் அதற்கு அப்பாலும் கொண்டு செல்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இத்துறையில் எமது தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) தொடர்பான முயற்சிகள், விவசாய பெறுமதிச் சங்கிலியில் எதிர்கொள்ளும் பல முக்கியமான சவால்களுக்கு நேரடித் தீர்வைத் வழங்குமென நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

இந்த நிதிப் பரிமாற்றத்தின் மூலம், Hatch Fund Singapore நிறுவனம் சுமார் 650,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது. இது Cultive8 நிறுவனத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச விரிவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கான புதிய வளர்ச்சி மூலதனத்தை வழங்குவதுடன் இந்நிறுவனத்தின் நிதி நிலைப்பாட்டையும் சீரமைக்கும். மூலதனத்திற்கு அப்பால், Cultive8 நிறுவனம் Hatch இன் உலகளாவிய ஊக்கப்படுத்தும் (accelerator) தளத்திற்கான அணுகலைப் பெறும். இது தொடர்ச்சியான நிதி திரட்டல், மூலோபாய கூட்டாண்மைகள் மற்றும் சந்தைக்கான பிரவேசம் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ள வணிகங்களை ஆதரிக்கிறது. இதில் சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா போன்ற, Hatch நிறுவனம் வலுவான வலையமைப்பைக் கொண்டுள்ள சந்தைகளுக்கான அணுகலும் உள்ளடங்குகின்றன.

Hatch Fund சிங்கப்பூர் ஆனது, தெற்காசியாவிலிருந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த வணிக தொடக்கங்களில் கவனம் செலுத்தும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆரம்பகால நிதியிடலாகும்.

இந்த முதலீடு குறித்து Hatch மற்றும் Hatch Fund இணை நிறுவுனர் ஜீவன் ஞானம் கருத்து வெளியிடுகையில், “இலங்கையிலிருந்து உருவாகி உலகளாவிய ரீதியில் விரிவடையும் வணிக  தொடக்கங்களை பார்க்கையில் அவற்றின் ஆரம்ப நிலை அறிகுறிகள் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய ஸ்திரமான பொருளாதார சூழல் நிலமையினால் உருவாக்கப்பட்ட வலுவான மாற்றங்களை அவை பிரதிபலிக்கின்றன. இந்த ஆரம்பநிலை வெற்றியாளர்களைக் கண்டறிந்து, அவர்களை உள்நாட்டின் வெற்றியிலிருந்து உலகளாவிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு Hatch Fund மிக ஆர்வமாக உள்ளது” என்றார்.

ஜீவன் ஞானம் அவர்கள் 30 இற்கும் மேற்பட்ட வணிக தொடக்கங்களில் முதலீடு செய்துள்ள ஒரு தொடர் நிலையான, தொழில்முனைவோர் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் ஆவார். பல முன்னணி தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முயற்சிகளை நிறுவுவதிலும் அவற்றின் நிலையை அளவிடுவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்து வருகின்றார்.

Hatch Fund ஆனது agritech, fintech, AI/ML, blockchain, medtech ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற, தெற்காசியாவிலிருந்து உருவாகும் ஆரம்பநிலை வணிகங்களுக்கு ஆதரவளிக்கிறது. இந்தியா, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கூட்டாண்மையாளர்களை உலகளாவிய சந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்த அது பயன்படுத்துகிறது. சர்வதேச மூலதனத்தை அணுகவும் வேகமாக வளச்சியடையவும் நிறுவுனர்களுக்கு உதவவும், பிராந்திய துணை அலுவலகங்கள் மற்றும் உலகளாவிய புலம்பெயர்ந்தோருடன் (diaspora) இணைந்து இந்த நிதியிடல் செயற்படுகிறது.

இந்த முதலாவது முதலீடானது, Hatch Fund இன் பயணத்தில் ஒரு முக்கிய படியாகும். உலகளாவிய ரீதியில் பொருத்தமான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஒரு நம்பகமான தளமாக இலங்கையை நிலைநிறுத்துதல், பிராந்தியத்திலிருந்து உருவாகும் அடுத்த தலைமுறை வெற்றியாளர்களை ஊக்குவித்தல் ஆகியன இதன் விரிவான நோக்கங்களாகும்.