இலங்கை வீதிகளில் வலம் வரும் நவீன ZHONGTONG பஸ்கள்

Off By Mic

இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், DIMO நிறுவனத்தின் முழுமையான உரித்துடைமை கொண்ட துணை நிறுவனமான Moveflex (Pvt) Ltd., புதிதாக நியமிக்கப்பட்ட அதன் உள்ளூர் முகவர் மூலம் நவீன உயர்தர ZHONGTONG பஸ் வகைகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ZHONGTONG வர்த்தகநாமமானது, ஏற்கனவே நாட்டில் தனது இருப்பை பல வருடங்களாக நிலைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைச் சந்தையில் ஒரு பழக்கமான பெயராக திகழ்கின்றது. DIMO Moveflex நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ், உள்ளூர் வாகனத் துறையில் 85 ஆண்டுகளுக்கும் மேலான தலைமைத்துவத்தைக் கொண்ட அதன் தாய் நிறுவனமான DIMO நிறுவனத்தின் நிபுணத்துவத்தால் வலுவூட்டப்பட்டு, வலுவான விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான ஆதரவுடன் அதிக மதிப்பை வழங்க இந்த வர்த்தகநாமம் தயாராக உள்ளது. அந்த வகையில் இவ்வர்த்தகநாமத்தின் உள்ளூர் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த அறிமுக நிகழ்வில் 17 புதிய ZHONGTONG பஸ்கள் வாடிக்கையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்த புதிய பஸ் வகைகளின் மீதான அதிக தேவையையும் அதன் மீதான நம்பிக்கையையும் இது எடுத்துக் காட்டுகிறது.

புதிய ZHONGTONG பஸ் தொடரில் L7, H8, H9, H11, H12 Single Glass, H12 Double Glass, New Magnate போன்ற மாதிரிகள் உள்ளடங்குகின்றன. இவற்றின் ஆசன எண்ணிக்கைகள் 28 முதல் 51 வரை காணப்படுகின்றன. இந்த மாதிரிகள் சுற்றுலா நிறுவனங்கள், நகரங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பொதுப் போக்குவரத்து அதிகாரசபைகள், தனியார் நகர வழித்தட சேவை வழங்குநர்கள் மற்றும் பாதுகாப்பான, நம்பகமான உயர் அலுவலக மட்டப் போக்குவரத்துத் தீர்வுகள் தேவைப்படுகின்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, நாட்டின் பல்வேறு பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிர்மாண கட்டத்தில் உள்ள புதிய மாதிரிகள் இலங்கையின் பொது, பாடசாலை மற்றும் ஊழியர்கள் போக்குவரத்தை இலகுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான எரிபொருள் செயல்திறன் மற்றும் 205hp – 400hp வரையிலான உகந்த Weichai எஞ்சின்கள், காற்றியக்கவியல் வெளிப்புறத் தோற்றம் (Aerodynamic Exteriors), விசாலமான உட்புறம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இணைத்து, சர்வதேச பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், நீடித்த மற்றும் வசதியான வாகனத்தை உறுதி செய்கின்றது.

இந்தப் புதிய மாதிரிகள், வழக்கமான போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது 10 – 15% வரையான மேலதிக எரிபொருள் செயல்திறன், நீடிக்கப்பட்ட சேவை இடைவெளிகள், குறைந்த இயக்கமற்ற நேரம் (reduced downtime), குறைந்த பராமரிப்புச் செலவுகள் ஆகிய அம்சங்களுடன், மேற்கொள்ளும் முதலீட்டிற்கான சிறந்த வருமானம் ஆகியவற்றுடன் போக்குவரத்து சேவையாளர்களுக்கு பாரிய அனுகூலங்களை வழங்குகின்றன. பார்வையிடுவதில் மேம்பட்ட வசதி, அகலமான நுழைகின்ற மற்றும் வெளியேறுகின்ற கதவுகள், வசதியான பின்புற கமெராக்கள், தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளில் அமைந்த பாதை உதவி வசதிகள் (lane-assist options) ஆகியவற்றுடன் சாரதிக்கான முழுமையான வசதிகளுடன் வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவை  நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நீண்ட தூர பயணத்தில் திருப்தியை இலக்காகக் கொண்டு, பயணிகளுக்கு குலுக்கமின்றிய வசதியுடன், வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்கக் கூடிய ஆசனங்களுடன் உயர்தர வசதியை இது வழங்குகின்றது.

நீண்ட கால நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, DIMO Moveflex நாடு முழுவதும் உள்ள DIMO CAREHUB உட்கட்டமைப்பு வசதியளிப்பு மூலம் வலுவான விற்பனைக்குப் பின்னரான ஆதரவையும் வழங்குகிறது. அதிநவீன வசதிகளுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களிலும், உடனடி உதவி வழங்குவதற்கான நடமாடும் சேவை பிரிவுகள் மூலமும் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரத்தியேக விநியோக வலையமைப்பு மூலம் இதற்கான அசல் உதிரி பாகங்கள் (Genuine Spare Parts) விநியோகிக்கப்படும் அதே நேரத்தில், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் சாரதி வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் வாகனத்தின் செயற்பாட்டுத் திறன் மற்றும் வாகனத் தொடரின் பாதுகாப்பு மேம்படுத்த வசதியளிக்கப்படுகின்றன.

இதன் அறிமுக நிகழ்வில் DIMO குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி தினுக் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ZHONGTONG வர்த்தகநாமத்தின் புதிய தொடரை DIMO Moveflex மூலம் அறிமுகப்படுத்துவது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான முன்னேற்றப் படியாகும். உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வர்த்தகநாமத்தின் உறுதிப்பாட்டை, DIMO Moveflex இன் நம்பகமான ஆதரவு மற்றும் நாம் வழங்கும் விரிவான விற்பனைக்குப் பின்னரான சேவைகளுடன் வாடிக்கையாளர்களால் தற்போது பெற முடியும். இந்தச் ஒத்துழைப்பானது, வாகனத்தை சேவையில் ஈடுபடுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் நீண்ட கால மதிப்பை பெறுவதை உறுதி செய்கிறது.” என்றார்.

ZHONGTONG வெளிநாட்டுச் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் பொது முகாமையாளர் ஜெஃப்ரி சென் (Jefferey Chen) கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் போக்குவரத்துத் துறையின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மேம்பட்ட மற்றும் எரிபொருள் திறன் கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதில் ZHONGTONG அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது நோக்கம் வாகனங்களை விநியோகிப்பதற்கு அப்பால், நாட்டின் நிலைபேறான, இலகுவாக அணுகக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான போக்குவரத்துத் தீர்வுகளை உருவாக்குவதில் நீண்ட கால பங்களிப்பை வழங்குவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம். DIMO Moveflex உடனான எமது பங்காளித்துவமானது, ZHONGTONG இன் உலகளாவிய உற்பத்தி நிபுணத்துவத்தையும், DIMO குழுமத்தின் நம்பகமான உள்ளூர் பிரதிநித்துவம் மற்றும் விரிவான சேவை வலையமைப்பையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த கூட்டணியாக அமைகின்றது. உலகத் தரம் வாய்ந்த பஸ்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நம்பகமான விற்பனைக்குப் பின்னரான ஆதரவு மற்றும் அசல் உதிரிப் பாகங்கள் கிடைப்பதற்கான வசதி மூலம் இலங்கை வாடிக்கையாளர்கள் பயனடைவதை நாம் இணைந்து உறுதி செய்வோம்.” என்றார்.

பொருட்கள் போக்குவரத்து மற்றும் லொஜிஸ்டிக் துறையில் நீண்ட கால அங்கீகாரம் பெற்ற DIMO Moveflex, அதன் 3PL நிபுணத்துவம் (Third-Party Logistics expertise) மற்றும் நம்பகமான தொழில்துறை நற்பெயரைப் பயன்படுத்தி, அது கொண்டுள்ள நம்பகத்தன்மை மூலம் மேம்பட்ட போக்குவரத்துத் தீர்வுகளை வழங்கும் வகையில், பயணிகள் போக்குவரத்து துறைக்குள் நுழைந்துள்ளது.

DIMO Moveflex இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு முன்னணிப் பங்கை வகிப்பதற்கான அதன் இலக்கை நிறுவனம் வலுப்படுத்துகிறது. இது, மிக வேகமாக அதிகரித்து வரும் இச்சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோருக்கு அதிகாரமளிக்கும் வகையிலான, நம்பகமான வர்த்தகநாமங்களையும் விரிவான ஆதரவையும் வழங்குகிறது.


END