இலங்கை முதலீட்டு சபையினால் ‘இலங்கையில் முதலீடு’ மாநாடு அறிமுகம்
இலங்கை முதலீட்டு அமர்வு 2026 ஐ முன்னெடுப்பதற்கு இலங்கை தயாராகும் நிலையில், நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நிலையான பெரும்பொருளாதார அடிப்படை மற்றும் ஒழுக்கமான கொள்கை சீர்திருத்தத்தின் ஆதரவுடன் இலங்கை முதலீட்டு சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் UN ESCAP ஆகியவற்றுடன் கைகோர்த்து, 2026 மார்ச் 30 ஆம் திகதி இந்த அமர்வை கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் முன்னெடுக்கவுள்ளது. இதில், முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் உயர் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் போன்றவற்றுக்கான புதுப்பிக்கப்பட்ட சூழலை வெளிப்படுத்தும்.
இலங்கை அதன் பொருளாதார மீட்சிப் பயணத்தில், நிலைபேறான, உயர் பெறுமதி வாய்ந்த மற்றும் தொழில்னுட்பத்தினால் செயற்படுத்தப்படும் வளர்ச்சி போன்றவற்றுக்கான மையமாக இலங்கையை நிலைநிறுத்துவது தொடர்பில் இந்த அமர்வில் கவனம் செலுத்தப்படும். உயர் பெறுமதி, நிலைபேறாண்மை மற்றும் தொழில்னுட்பத்தின் அடிப்படையிலான வளர்ச்சி ஆகியவற்றில் இலங்கை காண்பிக்கும் கவனத்தை மாற்றியமைக்கும் நிலையில், சர்வதேச முதலீட்டாளர்கள், பல்தேசிய நிறுவனங்கள், அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் மற்றும் ஹெட்ஜ் நிதியங்கள் ஆகியவற்றுடன் இலங்கைக்கு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்த அமர்வு அமைந்திருக்கும். “இலங்கையின் பசுமையான மற்றும் இணைக்கப்பட்ட எதிர்காலத்தில் முதலிடல்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்படும் இந்த அமர்வு, சூழல்பாதுகாப்புடன், பிராந்திய மற்றும் உலகளாவிய தொடர்புகளை ஒன்றிணைக்கும் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கான கவர்ச்சிகரமான வாய்ப்புகளை உறுதி செய்வதாக அமையும்.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் உலகின் நடமாட்டம் நிறைந்த கப்பல் போக்குவரத்து வழிகள் போன்றவற்றின் காரணமாகவும், தொலைநோக்குடைய புதுப்பிக்கத்தக்க வலு செயற்பாடுகள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் போன்றவற்றினாலும், உலகளாவிய நகர்வுகளில் இலங்கை நிலைபேறான விநியோக தொடர்கள், தொழில்னுட்பத்தினால் இயங்கும் தொழிற்துறைகள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வளர்ச்சி போன்றவற்றுக்கு சாதகமான சூழலில் காணப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியில் “இலங்கையில் முதலீடு” அமர்வு முன்னெடுக்கப்படுகிறது. சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொண்ட காலப்பகுதியைத் தொடர்ந்து, நாடு மீண்டும் பெரும் பொருளாதார நிலைத்தன்மையை அடைந்துள்ளதோடு, உலகளாவிய சந்தைகளில் தனது நம்பகத்தன்மையையும் மீளப்பெற்றுள்ளது. நாட்டின் பிரதான முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதியளிப்பு முகவர் என்ற ரீதியில், முதலீட்டுச் சபை இந்த மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. இது சீரமைக்கப்பட்ட அனுமதி வழங்கும் பொறிமுறைகள், முதலீட்டாளர் வசதியளிப்பு சேவைகள் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொள்கை சூழல் ஆகியவற்றை வழங்குகின்றது.
இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை அதன் பொருளாதார பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் காணப்படுகிறது. “இலங்கையில் முதலீடு” அமர்வினை அறிமுகம் செய்வதனூடாக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிட அனுகூலங்கள், உறுதியான வருமானமீட்டக்கூடிய வாய்ப்பு மற்றும் நிலைபேறான மற்றும் தொழில்னுட்ப அடிப்படையிலான வளர்ச்சிக்கான தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்ட நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறு சர்வதேச முதலீட்டு சமூகத்தை அழைக்கிறோம். முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்ட கால பங்காண்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இலங்கை முதலீட்டு சபை தொடர்ந்தும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.” என்றார்.
இலங்கையின் உறுதித்தன்மை மற்றும் தொலைநோக்குடைய செயற்பாடுகள் போன்றவற்றை ஏற்றுக் கொண்டதனூடாக, சர்வதேச முதலீட்டாளர் சமூகம் இலங்கை பற்றிய தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2025 ஆம் ஆண்டில், இலங்கை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்ந்திருந்ததுடன், சர்வதேச முதலீட்டாளர் நம்பிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக இது அமைந்திருந்தது. முக்கியமாக, 24 புதிய உயர் பெறுமதி வாய்ந்த முதலீட்டு செயற்திட்டங்கள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், மீள் முதலீடு என்பதிலிருந்து நகர்ந்து, புதிய அர்ப்பணிப்புகளை நோக்கி பயணிப்பதையும், இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சியில் நீண்ட கால பங்கேற்பை மேற்கொள்ள முனைவதையும் வெளிப்படுத்தியிருந்தது.
மீளெழுச்சி பெற்றுள்ள இந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான பெரும் பொருளாதார குறிகாட்டிகள் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அசல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.0 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. இது பிரதான துறைகளில் ஏற்பட்டுள்ள பரந்தளவிலான மீட்சியைப் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக, மூன்றாவது காலாண்டில் கைத்தொழில் துறை 8.1 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதோடு, சேவைத் துறை (3.5%) மற்றும் விவசாயத் துறை (3.6%) ஆகியனவும் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 2026 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 4% முதல் 5% வரையான வீச்சில் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. இது நாடு குறுகிய கால நிலைத்தன்மைக்கு அப்பால், நிலையான பொருளாதார விரிவாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது. அத்துடன், சுயாதீனமான மற்றும் கட்டுப்பாடான மத்திய வங்கி கட்டமைப்பின் ஊடாக பணவீக்கம் 4% முதல் 5% வரையான மட்டத்தில் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாட்டின் பொருளாதார சூழலில் காணப்படும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய தன்மையை வலுப்படுத்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் மேலோங்கச் செய்கின்றது.
பசுமையான, இணைப்பைக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தின் துரிதப்படுத்தப்பட்ட பயணத்திற்கும் இது மிகவும் முக்கியமானதாகும். 2025 – 2030 ஆண்டு காலப்பகுதிக்கான தேசிய வலுக் கொள்கையின் கீழ், 2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்களவு மின் பிறப்பாக்கல் எனும் இலக்கை நோக்கி பயணிக்கிறது. அதனூடாக, சூரியமின், காற்றாலை மற்றும் வளர்ந்து வரும் பசுமை ஐதரசன் உட்கட்டமைப்புகளில் முதலீட்டாளர்களுக்கு பெருமளவு வாய்ப்புகளை உருவாக்கிய வண்ணமுள்ளது.
வலுப் பிறப்பாக்கலுக்கு அப்பால், இலங்கையின் முதலீட்டுத் திட்டங்கள், பல்வேறுபட்ட மற்றும் உயர்மதிப்புமிக்க துறைகளை உள்ளடக்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் ஒருங்கிணைந்த களஞ்சியப்படுத்தல், விமான போக்குவரத்து சேவைகள், பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் உற்பத்தி, மருந்து உற்பத்தி, நீர்முனை சுற்றுலா அபிவிருத்தி, விருந்தோம்பல் உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பூங்காக்கள், பல்கலைக்கழக நகரங்கள் மற்றும் ஆக்கபூர்வமான தொழில்துறை மையங்கள் ஆகியவற்றில் மூலோபாய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுடனான இலங்கையின் மூலோபாய ரீதியிலான இணைப்புடன் இணைந்து, இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றான இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சிக்கான ஒரு தளத்தை இத்துறைகள் வழங்குகின்றன. இந்த வாய்ப்புகளை நடைமுறை ரீதியிலான பங்காண்மைகளாக மாற்றுவதற்காகவே ‘இலங்கையில் முதலீடு’ அமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைத்து உயர்மட்டக் கலந்துரையாடல்கள், துறைசார்ந்த ஆழமான ஆய்வுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு சந்திப்புகள் இந்த அமர்வில் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் பிரத்தியேக முதலீட்டுத் தகவல்கள், கொள்கை வழிகாட்டல்கள் மற்றும் வளர்ந்து வரும் திட்டங்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், தீர்மானம் எடுப்பவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பையும் பெறுவர். இது மூலோபாய முதலீட்டு உரையாடல்கள் நடைமுறைச் சாத்தியமான வாய்ப்புகளாக உருவெடுப்பதற்கான சூழலை உருவாக்குகின்றது.
மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை வழங்கக்கூடிய சந்தைகளை சர்வதேச மூலதனங்கள் தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதுடன், இலங்கையின் மீட்சி, சிறந்த வாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. வலுப்பெறும் பொருளாதார அடிப்படைகள், நம்பிக்கையூட்டும் நிலைபேறாண்மை இலக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, சரக்கு கையாளல், புதுப்பிக்கத்தக்க வலு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் விரிவாக்கமடையும் முதலீட்டு வாய்ப்புகள் போன்றன இணைந்து இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் புதிய முதலீட்டு களத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
“இலங்கையில் முதலீடு” அமர்வு, தெற்காசியாவின் மிக முக்கியமான முதலீட்டு மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவதோடு, மாற்றத்தின் விளிம்பில் உள்ள ஒரு நாட்டுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது. துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளில் ஆரம்பகால அணுகலைப் பெற விரும்புவோருக்கும் மற்றும் அர்த்தமுள்ள முதலீட்டுப் பங்காண்மைகளைத் தேடுவோருக்கும் இலங்கை வெளிப்படுத்தும் செய்தி, இலங்கையின் அடுத்தகட்ட வளர்ச்சியின் அத்தியாயம் தற்போது ஆரம்பமாகியுள்ளது, அதனுடன் இணைந்து கொள்வதற்கான சரியான தருணம் இது என்பதாகும். அமர்வில் பங்கேற்பதற்கு பதிவுகளுக்கு srilankainvestmentforum.com ஐ பார்க்கவும்.