இலங்கை இராணுவத்தினரின் அபிமன்சலவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்திய டேவிட் பீரிஸ் குழுமம்

டேவிட் பீரிஸ் குழுமம் அதன் சமூக நலன்புரி குழுவின் ஊடாக இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்படும் அனுராதபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி போர் வீரர்களைப் பராமாரிக்கும் அபிமன்சல ஆரோக்கிய விடுதிக்கு மீண்டும் ஒருமுறை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இந்த முயற்சியின் ஓர் அம்சமாக, குழுமம் 2011ஆம் ஆண்டில் முதலில் நன்கொடையாக வழங்கிய இரண்டு வில்லாக்களைப் புனரமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு அமைய அவற்றில் வர்ணம் பூசுதல், மரவேலைகள், தளபாடங்கள், திரைச்சீலைகள், மூங்கில் பொருத்துதல்கள், மின்சார மேம்பாடுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் ஏனைய வசதிகளின் மேம்பாட்டுக்காக நிதியுதவி வழங்கியது. நாட்டிற்குச் சேவை செய்வதற்காகத் தம்மை அர்ப்பணித்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வசதியான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இவ்வாறு புனரமைக்கப்பட்ட வில்;லாக்கள் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் பிரதிப் பிரதான அதிகாரி – செயற்பாடு திரு.கோசல ரத்னாயக்க அவர்களினால், அபிமன்சலவின் தளபதி பிரிகேடியர் பிரியந்த லியனகே அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த திரு.ரத்னாயக்க குறிப்பிடுகையில், “யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாட்டைப் பாதுகாப்பதற்காக பல வருடங்களாகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த போர் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக 2011ஆம் ஆண்டு இந்த வில்லாக்களை நாம் அபிமன்சலவுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தோம். பதின்நான்கு வருடங்களின் பின்னர் இன்று நாம் அவற்றை புனரமைத்துக் கொடுத்திருப்பதன் மூலம் இந்த வீரர்கள் சௌகரியமான மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழலை மீள் உறுதிப்படுத்தியுள்ளோம். ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், டேவிட் பீரிஸ் குழுமம் தனது சமூக நலன்புரி அர்ப்பணிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது, இதன் மூலம் சமூகத்திற்கு அர்த்தமுள்ள மற்றும் நீடித்த ஆதரவை வழங்குவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதும் புலனாகிறது” என்றார்.

குழுமத்தின் சமூக நலன்புரிக் குழுவின் உறுப்பினர்களான திரு.சம்பத் வீரக்கோன், பிரதி பிராந்திய முகாமையாளர்-வாகன விற்பனை, திரு.தசுன் எதிரிசிங்க, தலைவர் – உள்ளக மற்றும் வெளியகத் தொடர்பாடல் – டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடட், திரு.துமிந்த ஏக்கநாயக்க, முகாமையாளர் – மீட்புக்கள், எசட்லைன் பைனான்ஸ் லிமிடட் மற்றும் திரு.நிர்மான டயஸ், நிர்வாகி – வாகன விற்பனை னுPஆஊ உள்ளிட்டவர்களும் இந்தக் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் சமூக நலன்புரிக் குழுவினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அபிமன்சலவுக்கான இந்த ஒத்துழைப்பும் அமைந்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குதல், வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல், கடுமையான நோய்கள் மற்றும் இயலாமை உடைய நபர்களுக்கான நிதி உதவிகளை வழங்குதல், கிராமப் புறங்களில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல் மற்றும் தொழில்முனைவு பயிற்சித் திட்டங்களின் ஊடாகப் பெண்களை வலுப்படுத்தல் என்பன குழுமத்தின் கூட்டுப்பொறுப்பு முயற்சிகளில் உள்ளடங்குகின்றன.
மூன்று தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ள டேவிட் பீரிஸ் குழுமம் இலங்கையில் உள்ள மிகப் பெரியதும், நிதி ரீதியில் ஸ்திரத்தன்மை கொண்ட பெருநிறுவனங்களில் ஒன்றாகும். 35 நிறுவனங்களைக் கொண்ட இந்தக் குழுமமானது வாகன உற்பத்திகள் மற்றும் சேவைகள், நிதிச் சேவைகள், சரக்குப் போக்குவரத்து, களஞ்சிய செயற்பாடு, கார்; பந்தையம், பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம், தொடர்பாடல் தொழில்நுட்பம், ரியல்எஸ்டேட், ஷிப்பிங், கரையோர சேவைகள், சூரிய சக்தி, பந்தயம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பரந்துபட்ட துறைகளின் கீழ் இலங்கையின் வணிகத்தில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது மற்றும் சமூகங்களை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களைக் கௌரவிக்கும் முயற்சிகளுக்கும் குழு தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.
