இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை உயர்த்த ஒன்றிணையும் Baby Cheramy மற்றும் காசல் பெண்கள் மருத்துவமனை
இலங்கையிலுள்ள பெண்களுக்கான முதன்மையான மருத்துவமனையான காசல் வீதி பெண்களுக்கான மருத்துவமனையில், தமது திட்டமொன்றின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அறிவிப்பதில் பேபி செரமி மகிழ்ச்சி அடைகிறது. மருத்துவமனைக்கு பெற்றோர் வருகை தரும்போது மிகவும் வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உணர்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன், மருத்துவமனை வளாகம் முழுவதும் விரிவான மற்றும் தகவல் தரும் அறிவிப்பு பலகைகளை நிறுவி, முக்கியமான பாதை வழிகாட்டல் உதவிகளை பேபி செரமி இங்கு வழங்கியுள்ளது.
நாட்டிலுள்ள மூன்று பிரதான மொழிகளில், தெளிவான மற்றும் சுருக்கமான தகவல்களைக் கொண்டு, வருகை தருவோருக்கு சிறந்த அனுபவத்தை இப்பெயர்ப் பலகைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பராமரிப்பு மற்றும் நோயாளியின் சுகவாழ்வு தொடர்பான அத்தியாவசிய வழிகாட்டல்களை வழங்குவதை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, பாலூட்டும் பயிற்சிப் பிரிவு மற்றும் கல்வியூட்டல் அறைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தாய்ப்பால் ஊட்டும் உத்திகள் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய, மகப்பேற்றின் போதான, பிரசவத்திற்குப் பிந்தைய நிலைமைகளின் போதான சிறந்த பராமரிப்பை ஊக்குவிப்பதற்கான அறிவூட்டல்களை வழங்குவது தொடர்பான பேபி செரமியின் உறுதிப்பாட்டை இது மேலும் வலியுறுத்துகிறது. குழந்தை பராமரிப்பு மற்றும் நோயாளியின் சுகவாழ்வு தொடர்பான முக்கிய தகவல்களை திறம்பட வழங்குவதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர, “எமது சுகாதாரத் துறையும் இந்த வைத்தியசாலையும் நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், அவர்களது அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு நாட்டின் குடிமக்கள் சார்பில் எமது ஆதரவை வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம். இலங்கையில் 60 வருடங்களாக புதிதாக தாய்மார்களானவர்களின் வாழ்வில் அங்கம் வகிக்கும் ஒரு வர்த்தக நாமமான பேபி செரமி, எப்போதும் நமது சிறிய குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை கட்டியெழுப்ப அயராது உழைத்து வருவதோடு, பாதுகாப்பான குழந்தைப் பராமரிப்புத் தயாரிப்புகளை மேம்படுத்தி, உற்பத்தி செய்து வழங்குவதற்காக பல ஆண்டுகளாக எமது நுகர்வோருடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறந்த குழந்தைப் பராமரிப்பு தொடர்பான சிறந்த அறிவை எமது பெற்றோருக்கு வழங்குவதற்காக, பல அரச நிறுவனங்கள் மற்றும் இதனுடன் தொடர்பான தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து, நாடு முழுவதும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.” என்றார்.
காசல் வீதி பெண்கள் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயண இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அர்த்தமுள்ள கூட்டாண்மையில் பேபி செரமியுடன் பங்காளியாக இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். காரணம் இது இலங்கையில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வை உறுதி செய்வதிலான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் முழுமையான பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எமது முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இந்த ஒத்துழைப்பு தொடர்பான தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய Hemas Consumer Brands குழந்தை பராமரிப்பு – சந்தைப்படுத்தல் முகாமையாளர் திருமதி அஸ்மரா மன்னன் பெரேரா, “முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததில் நாம் பெருமிதம் கொள்கிறோம். நாட்டிலுள்ள ஒன்பது முக்கிய மருத்துவமனைகளில் உள்ள புதிதாக தாய்மார்களாக மாறும் அனைத்து தாய்மாருக்கும் மாதாந்த அடிப்படையில் குழந்தைகளுக்கான முதலாவது பராமரிப்புப் பொதியை வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பல ஆண்டுகளாக குழந்தை பராமரிப்பு தரத்தை உயர்த்துவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமைகின்றது. எதிர்காலத்தில், தாய்மையின் ஆரம்ப கட்டங்களில் தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வளங்களை நாம் தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம். அத்துடன், எதிர்காலத்தில் எமது தேசத்தின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்காக மேலும் பல மருத்துவமனைகளில் இந்த அனுபவத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
பேபி செரமி மற்றும் காசல் வீதி பெண்களுக்கான மருத்துவமனை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் முதல் கட்டததை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளமையானது, எமது குழந்தைகள் செழித்து வளர்வதற்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்பானது, இலங்கையில் புதிதாக பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வை உறுதி செய்தல் எனும் ஒரு பொதுவான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது.