ஆதரவற்ற குழந்தைகளின் நம்பிக்கையை வளர்க்க OrphanCare உடன் கைகோர்க்கும் Emerald International
இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald International, ஆதரவற்ற குழந்தைகளை இளைஞர்களாக மாறும் வரை அவர்களை வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு சுயாதீன அறக்கட்டளையான OrphanCare உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தனது கூட்டாண்மையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் அதன் Casual ஆடை வகைகளான ‘Emerald Active’ மற்றும் ‘Emerald Fashion’ ஆகியவற்றின் கீழ் விற்கப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் ரூ. 100 இனை Emerald நிறுவனம் அன்பளிப்பாக ஒதுக்கவுள்ளது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதில் Emerald நிறுவனம் கொண்டுள்ள ஆழமான அர்ப்பணிப்பை இந்த முயற்சி சுட்டிக் காட்டுகிறது.
Emerald International முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எஃப்.எம். இக்ராம் இது குறித்து தெரிவிக்கையில், “தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு சிறந்த பாரம்பரியத்தை Emerald கொண்டுள்ளது. OrphanCare உடனான எமது கூட்டு முயற்சியானது இந்த பாரம்பரியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறது. அத்துடன் எமது பங்களிப்பானது, பல தகுதியான சிறுவர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, அவர்களின் வாழ்க்கையில் இரண்டாவது முறை கைவிடப்படுவதைத் தவிர்க்கும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
Emerald International நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.எம். இஹ்சான் இது பற்றிக் கூறுகையில், “சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளுக்காகப் பெயர் பெற்றுள்ள மிக உயர்ந்த அமைப்பான OrphanCare உடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமை கொள்கிறோம். அவர்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கு மேலும் அதிக ஆதரவை வழங்க இந்தக் கூட்டாண்மை அவர்களை வலுவூட்டும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
OrphanCare அறக்கட்டளையின் தலைவர் ருஸ்லி ஹுஸைன் தெரிவிக்கையில்: “OrphanCare நிறுவனத்துடன் கைகோர்த்த Emerald International நிறுவனத்திற்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். தங்கள் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை பங்களிப்பாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏனைய முக்கிய ஆதரவையும் வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர். இந்த கூட்டாண்மையானது, இந்த குழந்தைகள் இளமைப் பருவத்தை அடையும் வரை இரண்டாவது முறையாக கைவிடப்படுவதைத் தடுக்கும் எமது பணியை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.” என்றார்.
Emerald நிறுவனம் இளைஞர் மேம்பாடு தொடர்பான நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது இளைஞர் விளையாட்டு விழாவிற்காக, இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுப் பங்காளராகச் செயற்பட்டது. இந்நிறுவனம் இலங்கையில் பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், கொழும்பு மாவட்ட மகளிர் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து Runn T10 மகளிர் கிரிக்கெட் சம்பியன்ஷிப்பிற்கு அனுசரணை வழங்கியுள்ளது. இலங்கையின் AIESEC உடன் இணைந்து கலென்பிந்துனுவெவ மஹகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல சமூகத் திட்டங்களை நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அவசியமான பாடசாலைப் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு, பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு பங்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் கொண்டுள்ள முக்கிய பங்கை புரிய வைப்பது தொடர்பில் பெற்றோர்களுக்கு விழிப்புணரவூட்டும் முயற்சிகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டம் உதவியதோடு, சமூகத்தில் நீடித்த தாக்கமொன்றை ஏற்படுத்தியது.
OrphanCare உடனான தனது கூட்டாண்மைக்கு அப்பால், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் தனது அர்ப்பணிப்பை Emerald சமீபத்தில் நிரூபித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விநியோகிப்பதற்காக 2,500 சேர்ட்கள் மற்றும் 1,000 உள்ளாடைகளை Emerald நிறுவனம் கம்பஹா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கியது. அத்துடன், COVID-19 தொற்றுநோய் நெருக்கடியின் போது, முன்னிலையில் சேவையாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்குவதன் மூலம் தேசிய முயற்சிகளுக்கும் பங்களிப்புச் செய்தமை உள்ளிட்ட விடயங்கள் சமூக நல்வாழ்வு தொடர்பான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
OrphanCare உடனான இந்த கூட்டாண்மையானது, ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த Emerald International கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த நோக்கத்திற்காக தனது விற்பனையில் ஒரு பகுதியை பங்களிப்பதன் மூலம், OrphanCare இன் பணிக்கு Emerald ஆதரவளிப்பதுடன், இலங்கை இளைஞர்களுக்கான பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்க ஏனையோரையும் இணைவதற்கான ஊக்குவிப்பை ஏற்படுத்துகிறது.
அமானா வங்கியின் ஸ்தாபக அனுசரணையாளராக நிறுவப்பட்ட OrphanCare ஒரு சுயாதீன அறங்காவலர்கள் கொண்ட குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள் சிறப்பாக வளர்வதற்கும் அவர்கள் இரண்டாவது முறையாக கைவிடப்படுவதைத் தவிர்ப்பதற்கும் அவர்களது வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய அம்சம் யாதெனில், நன்கொடையாக அளிக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் நேரடியாக உரிய பயனாளிகளை சென்றடைகிறது. காரணம் ஏனெனில் அனைத்து நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகளும் வங்கியால் முழுமையாக ஏற்கப்படுகிறது. OrphanCare ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை நாடு முழுவதும் உள்ள 90 இற்கும் அதிக சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 3,000 ஆதரவற்ற சிறுவர்களை இணைத்துள்ளது. இந்த அனைத்து இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு 2 ஐ பேணியவாறு, இனம், மதம், நிறம், சாதி பேதமின்றி மேற்கொள்ளப்படுகின்றன.