அனைவரையும் உள்ளீர்த்த வளர்ச்சியை ஊக்குவிக்க ISA ஆசிய-பசிபிக் செயற்குழு கூட்டத்தில் பிராந்திய சூரியசக்தி ஒத்துழைப்பை வலியுறுத்திய பிரதமர் ஹரிணி

தூய்மையான வலுசக்தி ஒத்துழைப்பிற்கான வலிமையான மேடையாக செயற்படும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance – ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது கூட்டம் கடந்த ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. இது சூரியசக்திக்கு மாறுவதில் இலங்கையின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், ISA இன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
இந்த உயர்மட்ட கூட்டத்தின் தொடக்க நிகழ்வு இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய அவர், பிராந்திய ஒத்துழைப்பு, அனைவரையும் உள்ளீர்த்த தொழில்நுட்பத்திற்கான அணுகல், அபிவிருத்தியடைந்து வரும் சிறிய தீவு நாடுகள் (Small Island Developing States – SIDS) மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளை மையப்படுத்திய ஆதரவை வலியுறுத்தினார். அத்துடன் வலுசக்தி சமத்துவத்தின் அவசியத்தையும் அவர் இங்கு வலியுறுத்தி பேசினார்.
அவர் இங்கு கருத்து வெளியிடுகையில், “சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ISA) ‘Global Solar Facility’ விரிவாக்க முயற்சியை இலங்கை வரவேற்கிறது. குறிப்பாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவு நாடுகள் மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளை நோக்காகக் கொண்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த நாடுகள் உயர் செலவுகள், மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு, மின்சார வலையமைப்புச் சிக்கல்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், பரந்த சூரிய வலுசக்தி மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்களில் மாபெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ISA அமைப்பின் நான்கு மூலோபாயக் கொள்கைகளுக்கும் இலங்கை தனது முழு ஆதரவை வழங்குவதோடு, பிராந்திய சூரியசக்தி தொடர்பான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக கொழும்பில் STAR Centre ஒன்றை அமைக்கும் அதன் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.” என்றார்.
இக்கூட்டத்தின் முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக, இலங்கை அரசாங்கம் மற்றும் ISA இடையிலான நாட்டு கூட்டாண்மை கட்டமைப்பு (Country Partnership Framework – CPF) தொடர்பான ஒப்பந்தமும் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் ISA அமைப்பின் பணிப்பாளர் நாயகம் அசீஷ் கன்னா ஆகியோரால் பரிமாறப்பட்ட இவ்வொப்பந்தத்தில், இலங்கையின் சூரிய சக்தி விரிவாக்கம், நிதியளிப்பு, நிறுவனத் திறன் மேம்பாட்டிற்கான வழிகாட்டல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி, தூய்மையான வலுசக்தியை நோக்யி முன்னேற்றத்தில் உலகளாவிய ஒத்துழைப்பின் மதிப்பை வலியுறுத்தி இங்கு கருத்து வெளியிட்டார். “2030 ஆம் ஆண்டுக்குள் மின்னுற்பத்தியில் 70% மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்துவது எமது தேசிய இலக்காகும். 2050 ஆம் ஆண்டுக்குள் காபன் நடுநிலையாக்கத்தை அடைவதையும் நாம் நோக்கமாக கொண்டுள்ளோம். இத்திட்டத்தில் சூரிய சக்தி முக்கிய பங்கு வகிக்கின்றது. ISA அமைப்பின் SIDS தளத்திற்கான ஆதரவுத் திட்டத்தில் கைச்சாத்திடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது ISA அமைப்பின் செயலூக்கத்தை பிரதிபலிக்கிறது. இத்தளத்தின் மூலம் அபிவிருத்தி அடைந்து வரும் சிறிய தீவு நாடுகள் (SIDS), போட்டிவாய்ந்த முறைமைகள் ஊடாக செலவுகள் குறைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் பயனடையக் கூடியதாக உள்ளது. ISA அமைப்பின் இலக்குகளில் இருந்து செயற்பாட்டை நோக்கிய மாற்றமானது, இன்று கையெழுத்திடப்பட்ட நாட்டு கட்டமைப்பு மற்றும் கூட்டுறவுகளில் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது. இது பிராந்திய ஒத்துழைப்பை, அடையக் கூடிய விளைவுகளாக மாற்றுகிறது.” என்றார்.
ISA அமைப்பிற்கும் அதன் கூட்டாண்மை கட்டமைப்புகளுக்கும் இந்தியா வழங்கும் உறுதியான ஆதரவை வலியுறுத்தி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய சந்தோஷ் ஜா அவர்கள் இங்கு கருத்து வெளியிட்டார், “இந்தியாவின் வலுசக்தி மாற்றப் பயணமானது, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிறைவேறியுள்ளது. அதற்கமைய நிறுவப்பட்ட 50% ஆன மின்னுற்பத்தி திறனானது, எரிசக்தி பயன்பாடற்ற மூலாதாரங்கள் மூலம் பெறப்படுகின்றது. கூட்டு இலட்சியங்கள் மற்றும் தைரியமான செயற்பாடுகள் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து ஒரே தூர நோக்கிலிருந்து தோன்றிய ISA அமைப்பானது, இன்று SIDS மற்றும் பொருளாதார அபிவிருத்தி அடையும் நாடுகளுக்கான சூரிய சக்தி தீர்வுகளை நோக்கி முன்னேற்றும் சக்திவாய்ந்த மேடையாக உருவெடுத்துள்ளது. இலங்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 70% மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை நோக்கி தனது பாதையை வடிவமைத்துள்ள நிலையில், வளர்ச்சியடையும் இந்த வலுசக்தி கூட்டுறவு தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம். ISA ஊடாக, ஒன்றிணைந்து, ஒரே சூரியனின் கீழ் நாம் வீடுகளை மாத்திரமல்லாது, எதிர்காலங்களையும் ஒளிரச் செய்யலாம்.” என்றார்.

ISA பணிப்பாளர் நாயகம் அசீஷ் கன்னா இங்கு தெரிவிக்கையில், “பல்வகைத் தன்மைகள் மற்றும் ஒரே விருப்பங்களைக் கொண்ட ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியமானது, உலகளாவிய சூரிய சக்தி துறையை வடிவமைக்கும் பணியின் மையக் கதாபாத்திரமாக விளங்குகின்றது. நாம் இலக்கிலிருந்து செயலை நோக்கி நகரும் இந்த நேரத்தில், இந்த பிராந்திய செயற்குழு கூட்டமானது, நடைமுறை ரீதியான, செயல் சார்ந்த காலத்துக்கேற்ற, செயல் திட்டத்தை வரையறுக்கும் ஒரு வியூகம் மிக்க தளமாக அமைகிறது. இந்த பிராந்தியத்தில் ISA அமைப்பின் அணுகுமுறை நான்கு முக்கிய தூண்களில் அமைகிறது. தனியார் துறையின் பங்கேற்பை செயற்படுத்துவதை ஊக்குவிக்கும் நிதியை நகர்த்துதல், செயல்திறனான நடைமுறையை ஏற்படுத்த நிறுவன திறன்களை பலப்படுத்துதல், ஒருங்கிணைவு மற்றும் அறிவுப் பகிர்வு நோக்குடன் பிராந்திய தளங்களை ஊக்குவித்தல், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்த நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை செயற்படுத்துதல் ஆகியனவே அவையாகும். ஒவ்வொரு உறுப்புநாடுகளுடனும் நெருங்கிய கூட்டுறவுடன் பணியாற்றுவதில் நாம் உறுதியுடன் இருக்கிறோம். இது, தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ற, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வடிவமைப்பதற்கும், மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் இயக்கப்படும், அனைவரையும் உள்ளீர்த்த, ஈடு கொடுக்கக்கூடிய எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.” என்றார்.
முக்கிய முடிவுகள் மற்றும் அறிவிப்புகள்:
- ISA மற்றும் இலங்கைக்கு இடையே, நாட்டு கூட்டுறவு கட்டமைப்பு (Country Partnership Framework) கைச்சாத்திடல்.
- பிஜி, கிரிபாட்டி, சாலமன் தீவுகள் ஆகிய நாடுகளுடன் CPF பரிமாற்றங்கள்.
- மலைப்பாங்கான பகுதிகளில் சூரிய சக்தி ஒத்துழைப்பை மேம்படுத்த ICIMOD உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்.
- அபிவிருத்தியடைந்து வரும் சிறிய தீவு நாடுகளின் (SIDS) தலைவர்கள் ISA SIDS தளத்தை தழுவி, அதற்கு ஆதரவாக கைச்சாத்திடல். இது தீவு நாடுகளை உள்ளீர்த்த, காலநிலைக்கேற்ற வலுசக்தி அணுகலை விரைவுபடுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டு, ISA மற்றும் உலக வங்கியால் வழிநடத்தப்படும் மாற்றத்திற்கான டிஜிட்டல் முயற்சியாகும்.
- டிஜிட்டல் வருசக்தி தீர்வுகள், எல்லை கடந்த மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வர்த்தகம் மற்றும் SolarX APAC மையப்படுத்திய போட்டி ஊடாக வணிக தொடக்க நிறுவனங்கள் தொடர்பான பிராந்திய அமர்வுகளன் முன்னெடுப்பு.
இந்த கூட்டம் ஜூலை 17 ஆம் திகதியன்று தொடர்ச்சியாக இடம்பெற்றது. SIDS தளத்தை நடைமுறைப்படுத்துதல், தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை விரிவுபடுத்துதல், செயன்முறை கட்டமைப்புகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றை அன்றைய அமர்வுகள் மையமாகக் கொண்டிருந்தன.
ஆசிய-பசிபிக் பிராந்தியம் சூரிய சக்தி இலக்குடன் ஒன்று சேர்ந்தமையையும், நாடுகளை இணைத்தல், மூலதனத்தை தூண்டுதல், திட்டங்களை செயலாக்கமாக மாற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இந்த மாற்றத்தின் மையத்தில் ISA இருப்பதையும் வெளிப்படுத்தும் வலிமையான செய்தியொன்றை கொழும்பு மாநாடானது வழங்கியுள்ளது.
ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ISA பிராந்தியக் குழு கூட்டம் பற்றி:
ISA அமைப்பின் பிராந்தியக் செயற்குழுக் கூட்டங்கள் வருடத்திற்கு ஒருமுறை இடம்பெறுகின்றன. இந்தக் கூட்டங்களில் அந்தந்தப் பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதித் தலைவர் தலைமைத்துவம் வகிப்பார். இந்தக் கூட்டங்களின் நோக்கம் ISA வழங்கும் நிகழ்ச்சிக்கான ஆதரவு, முக்கிய திட்டங்ககள், கூட்டாண்மைகள், தனியார் துறை பங்கேற்புகள் மற்றும் பிராந்தியத்திற்கான வேலைத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மதிப்பீடு செய்வதாகும். உறுப்புநாடுகளுக்கு இடையிலான ஒழுங்கமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பை எளிதாக்குவது இந்தக் கூட்டங்களின் முக்கிய நோக்குகளில் ஒன்றாக காணப்படுகிறது. தற்போது ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 29 உறுப்புநாடுகள், 32 ஒப்பந்த நாடுகள், 22 எதிர்பார்ப்பு நாடுகள் என மொத்தமாக 54 நாடுகள் இந்த ISA அமைப்புடன் ஈடுபட்டுள்ளன. வளர்ச்சியடையும் இந்த பிராந்திய பிரதிநிதித்துவமானது, கூட்டு சூரியசக்தி திட்டங்களை மேம்படுத்துவதற்கும், பல்துறைக் கூட்டு முயற்சிகளை ஆழப்படுத்துவதற்குமான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
International Solar Alliance பற்றி
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு என்பது இந்தியா மற்றும் பிரான்சின் தலைமையில், 2015 ஆம் ஆண்டு COP21 பரிஸ் மாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு உலகளாவிய முயற்சி ஆகும். இதில் தற்போது 124 உறுப்புநாடுகள் மற்றும் ஒப்பந்த நாடுகள் உள்ளன. ISA உலகம் முழுவதும் வலுசக்தி அணுகல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுவதோடு, சூரிய சக்தியை தூய வலுசக்தி எதிர்காலத்திற்கான ஒரு நிலைபேறான மாற்றீடாக பயன்படுத்த ஊக்குவிக்கிறது.
சூரிய சக்தியில் முதலீடுகளை ஏற்படுத்துவதோடு தொழில்நுட்பம் மற்றும் நிதிச் செலவுகளை குறைப்பதை ISA அமைப்பு தனது பணிநோக்காக கொண்டுள்ளது. இது விவசாயம், சுகாதாரம், போக்குவரத்து, மின்னுற்பத்தித் துறைகளில் சூரிய சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை செயற்படுத்துதல், சிறந்த நடைமுறைகளை பகிர்தல், பொதுவான தரநிலைகளுக்கு இணங்குதல், முதலீடுகளை ஊக்குவித்தல் என ISA உறுப்புநாடுகள் மாற்றத்தை நோக்கிச் செயற்படுகின்றன.
இந்தச் செயற்பாடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டு, சோதிக்கப்பட்ட சூரிய சக்தி திட்டங்களுக்கான புதிய வணிக மாதிரிகளை அடையாளம் காணுதல்; சூரிய சக்தி பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை மேற்கொள்வதை எளிதாக்குவதன் மூலம் சூரிய வலுசக்திக்கான சட்டங்களை சூரிய சக்தி நட்பானதாக மாற்ற அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தல்; சூரியசக்தி தொழில்நுட்த்தின் மூலம் பல்வேறு நாடுகளின் கேள்வியை ஒருங்கிணைத்து, செலவுகளை குறைத்தல்; தனியார் முதலீட்டை அதிகரிக்க அபாயங்களை குறைத்து நிதிக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இத்தொழில்துறையை மேம்படுத்துதல்; சூரியசக்தி பொறியியலாளர்கள் மற்றும் வலுசக்தி கொள்கை வகுப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் தரவுகள், நுண்ணறிவுகள் உள்ளிட்டவற்றிற்கான அணுகலை அதிகரித்தல் உள்ளிட்ட பல பணிகளை ISA அமைப்ப மேற்கொண்டு வருகின்றது.
சூரிய சக்தி தீர்வுகளை ஆதரிக்கும் இதன் நடவடிக்கைகள் வாழ்க்கையை மாற்றும் நோக்குடன், உலகளாவிய ரீதியில் மக்களுக்கு தூய்மையான, நம்பகமான மற்றும் கட்டுபடியான வலுசக்தியை கொண்டு வர, நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2017 டிசம்பர் 06ஆம் திகதி, 15 நாடுகள் ISA கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உறுதிப்படுத்தியதன் மூலம், ISA அமைப்பானது இந்தியாவை தலைமையகமாகக் கொண்ட முதலாவது அரசாங்கங்களுக்கு இடையிலான சர்வதேச அமைப்பாக மாற்றியுள்ளன. பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் (MDBs), அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் (DFIs), தனியார் மற்றும் அரச நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து, குறைந்த செலவில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூரியசக்தி தீர்வுகளை, மிகவும் குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகள் (LDCs) மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் சிறிய தீவு நாடுகளுக்கு விரிவுபடுத்தும் பணியில் ISA ஈடுபட்டுள்ளது.