“அசிரி சுரகிமு சமனொல” திட்டம் மூலம் சூழல் தொடர்பான தனது பணியை நிறைவேற்றும் லிங்க் சமஹன்

Off By Mic

ஆயுர்வேத மூலிகைப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையைப் பெற்றுள்ள லிங்க் நெச்சுரல் புரொடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியாக, சமஹன் வர்த்தகநாமம் விளங்குகின்றது. புனித சிவனொளி பாதமலை தலத்தின் உயிர்ப் பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுவதற்காக லிங்க் சமஹன் வர்த்தகநாமத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட “அசிரி சுரகிமு சமனொல” திட்டம், சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமியுடன் நிறைவடையும் சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தில் செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் சுமார் 450 தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர். அத்துடன், இதில் 1.1 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு அனுப்பப்பட்டன.

அனைத்து மத பக்தர்களாலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாலும் போற்றப்படும் உலக பாரம்பரிய தலமான சிவனொளி பாதமலைக்கு, சிவனொளி பாதமலை யாத்திரை பருவத்தில் வருடாந்தம் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இந்த வருகையால், மக்காத பொலித்தீன் கழிவுகளும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்களும் சூழலுக்கு விடுவிக்கப்படுவதன் காரணமாக சூழல் சமநிலை சீர்குலைந்து, அதன் அழகும் சீர்குலைகின்றது.

இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட லிங்க் நெச்சுரல் புரொடக்ட்ஸ் நிறுவனம் தமது லிங்க் சமஹன் வர்த்தகநாமத்தின் கீழ் “அசிரி சுரகிமு சமனொல” எனும் திட்டத்தின் மூலம் திண்மக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. சுற்றுச்சூழல் தொடர்பான சமூக சேவை நலன் கொண்ட இந்தத் திட்டம், 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இந்த வருடமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிவனொளி பாதமலை தலத்தின் உயிர்ப் பல்வகைமை நிறைந்த காடுகள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும், புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களிடையே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது. சிவனொளி பாதமலை தலத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த நோக்கத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறவும் லிங்க் சமஹன் இந்த சமூக சேவைத் திட்டத்தின் மூலம் செயற்பட்டது.

இந்த சூழல் பாதுகாப்பு பணிக்கு நோர்வூட் பிரதேச செயலகம், மஸ்கெலியா பிரதேச சபை, நுவரெலியா சுகாதார சேவைகள் பணியகம், நல்லதண்ணி பொலிஸ் நிலையம், நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகம், இலங்கை மின்சார சபை ஆகியன ஆதரவளித்தன. இளைஞர் சங்கங்களின் உறுப்பினர்கள், அருகிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஶ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் லிங்க் நெச்சுரல் ஊழியர்களும் இதில் தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர். லிங்க் சமஹன் அசிரி சுரகிமு சமனொல திட்டத்தில் இணைய பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்கள் ஊடாக, வர்த்தகநாமம் மக்களுக்கு விடுத்த அழைப்பின் மூலம், நாடு முழுவதிலுமிருந்து மக்களின் பங்குபற்றுதலை பெற்றது. இதில் ஈடுபட்ட அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் இவ்வர்த்தகநாமம் எடுத்திருந்தது. இந்தச் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்கும் சூழலைப் பாதுகாக்க அவர்களை வலுவூட்டுவதற்கும் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசை ஊடக அனுசரணையை வழங்கியது.

இது தொடர்பாக, லிங்க் நெச்சுரல் புரொடக்ட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் ராஜ்குமார் தெரிவிக்கையில், “20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான மக்களின் நலனுக்காக, சிவனொளி பாதமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பயணக் களைப்பைப் போக்க லிங்க் சமஹன் தொடர்ச்சியாக உதவி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களின் நலனுக்காக லிங்க் சமஹன் ஆரம்பித்த சமஹன் நிவாரண வலயம், டிசம்பர் மாதம் சிவனொளி பாதமலை யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து மே மாதம் வெசாக் பௌர்ளமி தினம் வரை ஒவ்வொரு நாளும் 17 மணி நேரம் திறந்திருக்கும். பயணக் களைப்பு மற்றும் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க இது உதவுகிறது. சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தின் போது, ​​சமஹன் பானத்தை  வழங்குவதற்கும், சிவனொளி பாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் கால்களை வெந்நீரில் கழுவி, சமஹன் SP தைலத்தை பூசி, கால்களை பிடித்து விடும் நடவடிக்கைகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டது. சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தில் பக்தர்கள் குப்பைகளை முறையற்ற வகையில் வீசுவதால் சூழலுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பை கவனத்தில் எடுத்து, தமது சமூக மற்றும் சூழல் பொறுப்பை நிறைவேற்றும் நோக்கில், “அசிரி சுரகிமு சமனொல” திட்டத்தை செயற்படுத்தினோம். சிவனொளி பாதமலை யாத்திரை காலப் பகுதியின் நிறைவில், நாம் சிவனொளி பாதமலை பகுதிகளை சுத்தம் செய்து, அடுத்த பருவம் வரை புனித பூமியாக ஒப்படைத்துள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்காக உள்ளூராட்சி சபைகளிடம் நாம் ஒப்படைக்கிறோம். அந்த வகையில் இதில் எம்முடன் இணைந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இந்த திட்டத்துடன் தொடர்புடைய நல்லதண்ணி பொதுச் சுகாதார பரிசோதகர் கே.எல். மல்தெனிய தெரிவிக்கையில், “6 மாத சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தில் பக்தர்களால் அகற்றப்படும் மக்காத கழிவுகள், நீர்த்தேக்கங்களுடன் கலப்பதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய சேதத்தை லிங்க் சமஹன் அசிரி சுரகிமு சமனொல திட்டத்தின் மூலம் தடுப்பதில் லிங்க் சமஹனின் பணியை நாம் பாராட்டுகிறோம். இப்புனித தலத்தில் மக்காத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை இடுவது தடை செய்யப்பட்டுள்ள போதிலும், 1.1 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான மக்காத கழிவுகள் இந்த யாத்திரையில் சேகரிக்கப்பட்டிருந்தன. அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து முன்னெடுத்த இந்த சிறந்த பணிக்காக லிங்க் சமஹன் வர்த்தகநாமத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

பயனுள்ள மற்றும் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் சுய-பராமரிப்புத் தீர்வுகளை வழங்கும் லிங்க் நெச்சுரல், அதன் லிங்க் சமஹன் நிவாரண வலயம் மூலம் மக்களுக்கு ஆறுதலை வழங்கி அவர்களது சுகவாழ்வில் மதிப்புமிக்க பங்கை வகிக்கிறது.  சிவனொளி பாதமலைக்கு வருகை தரும் பக்தர்களின் சுகவாழ்வை மேம்படுத்துவதன் மூலமும், நாட்டின் உயிர்ப் பல்வகைமைப் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் அசிரி சுரகிமு சமனொல திட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்துவதன் மூலமும், லிங்க் நெச்சுரலின் லிங்க் சமஹன் வர்த்தகநாமம் இலங்கையர்களின் இதயங்களில் மேலும் மேலும் மதிப்பிற்கு பாத்திரமாக விளங்குகிறது.