நீர்கொழும்பு ரொட்டரியின் ‘Power Woman’ மார்ச் 8ஆம் திகதி 5000 பெண்களுடன் ஆரம்பம்

நீர்கொழும்பு ரொட்டரியின் ‘Power Woman’ மார்ச் 8ஆம் திகதி 5000 பெண்களுடன் ஆரம்பம்

சுமார் 83 வயதுடைய, நாட்டின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான – நீர்கொழும்பு ரொட்டரி கழகம், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாக நாடு முழுவதும் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட உழைக்கும் மற்றும் வேலையற்ற பெண்களை  இணைத்து ‘சக்திவாய்ந்த பெண்கள்’  (Power Woman),  என்ற மாபெரும் நிகழ்வை  நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது. ‘சக்திவாய்ந்த பெண்கள்’ நிகழ்வானது, நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் நிதி திரட்டும் முகமாக நுழைவுச்சீட்டைக் கொண்ட நிகழ்வாக நடாத்தப்படுவதுடன், 2019ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை சூடிக்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி மற்றும் மேலும் மூன்று முக்கிய பெண் பேச்சாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்கள் பெண்களின் சமூகம், கல்வி, அரசியல் மற்றும் உளவியல் ரீதியான வலுவூட்டல் தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.

கௌரவ குமுதினி விக்ரமசிங்க – மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கௌரி ராஜன் – இலங்கை ரொட்டரி கழகத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் மற்றும் அஸ்சர்யா ஜயக்கொடி (2019 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிபிசியின் 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இடம்பெற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரே பெண்) ஆகியோர் சக்திவாய்ந்த பெண்கள் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த ஆண்டு 2020 சர்வதேச மகளிர் தினம், ‘சமமான உலகம் ஒரு இயலுமைப்படுத்தப்பட்ட உலகம்’ என்ற தொனிப்பொருளில் கவனம் செலுத்தும்.  இது அடைந்த முன்னேற்றத்தை பிரதிபலிக்கவும், மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கவும், தங்கள் நாடுகள் மற்றும் சமூகங்களின் வரலாற்றில் அசாதாரணமான பங்கைக் கொண்ட சாதாரண பெண்களின் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டைக் கொண்டாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இந்த மாபெரும் நிகழ்வான- ‘சக்திவாய்ந்த பெண்கள்’ முக்கியமாக உழைக்கும் பெண்களை அங்கீகரிப்பதற்கும், வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாக சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்க அவர்களுக்கு வலுவூட்டும் நோக்கத்திலும் பிரதானமாக கவனம் செலுத்தும். இந்நிகழ்வானது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் தொழில் வல்லுனர்களை ஊக்கமளிக்கும் பொருட்டு இணைப்பதற்கும், அவர்களை எங்கள் ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் இன்னும் அர்த்தமுள்ள வகையில் உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதற்குமாகும். ‘சக்திவாய்ந்த பெண்கள்’ நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்ட வர்த்தக கண்காட்சி, ஒரு பொருளாதார வலுவூட்டல் முயற்சியாக சிறிய அளவிலான சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் தயாரிப்புகளை, ஹோட்டல் வளாகத்திற்குள் பங்கேற்பாளர்களுக்கு தனித்தனி நிலையங்களில் காண்பிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

வர்த்தக கண்காட்சி நள்ளிரவு வரை தொடரும் அதேவேளையில், நீர்கொழும்பு ரொட்டரி கழகம், பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் உயர் தர தேநீர் விருந்தொன்றையும், ‘பெண்களுக்கு வலுவூட்டல்’ கருத்தரங்கையும் அவென்ரா அரினா மண்டபத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது. உயர் தர தேநீர் விருந்து மற்றும் கருத்தரங்கானது நாடு முழுவதிலுமிருந்து 1000 தொழில்சார் பெண்களை மகளிர் தினத்தன்று இந்த நிகழ்வில் பங்குபற்றும் பொருட்டு கவரவுள்ளது.

இந்நிகழ்ச்சி ஒரு முழுநாள் நிகழ்வாகும். காலை 9.00 மணியளவில் தொடங்கும் இந்நிகழ்வின் வளாகத்தில் முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் சேவைகளைக் கொண்ட ஒரு வர்த்தக கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. இது முழுமையாக பெண்கள் மற்றும் பிற அனைத்து தேவைகளையும் பிரத்தியேகமாக பூர்த்தி செய்யும் முகமாக  விடியும் வரை இடம்பெறவுள்ளது. இப் பிரதேசத்தில் உள்ள முன்னணி மகளில் பாடசாலைகளில் உள்ள மாதர் சங்கங்கள் மற்றும் நாடுபூராகவும் 70 கழகங்களைக் கொண்ட ரொட்டரி மாவட்டமும் ‘சக்திவாய்ந்த பெண்கள்’ 2020 நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.